சிறுகதை

இரண்டு கோடி ரூபாய் லாபம் | ராஜா செல்லமுத்து

பெரிய பெரிய இயக்குநர்களிடத்தில் எல்லாம் உதவி இயக்குநராய் பணி புரிந்த ஜெயப்பிரகாஷ் , தனியே திரைப்படம் இயக்க வேண்டும் என்று நிறையத் தயாரிப்பாளர்களிடத்திலும் கதாநாயகனிடத்திலும் கதை சொல்லி சொல்லி ஒரு கட்டத்தில் ஓய்ந்தே போனார்.

இனியும் இந்தத் தயாரிப்பாளர்கள் தனக்குப் படம் பண்ண வாய்ப்புத் தருவார்கள் என்பதெல்லாம் சும்மா.. இனிமேல் இவர்கள் பின்னால் போனால் நிச்சயம் பைத்தியமே பிடித்து விடுமென்று விழி பிதுங்கிப் போய் உட்கார்ந்திருந்த ஜெயப்பிரகாஷை மனைவி ஜெயா தேற்றினாள்.

‘‘இப்ப என்ன ஆகிப்போச்சுன்னு இப்பிடி ஒக்காந்திருக்கிங்க.. வெறும் சினிமாப் பட வாய்ப்பு கெடைக்கலங்கிறதுக்காக.. ஏன்..? இப்பிடி ஒடஞ்சு போய் ஒக்காந்திருக்கீங்க.. விடுங்க..ஒங்கள வேண்டாம்னு சொன்ன ஆளுக உங்கள தேடி ஒரு நாள் வருவாங்க.. அப்ப வையுங்க உங்க கச்சேரிய..’’ என்று கணவனுக்கு ரொம்பவே ஆறுதல் வார்த்தைகளை அள்ளித் தெளித்தாள் ஜெயா

இல்ல ஜெயா பத்து வருசம், நாயா பேயா, அலைய வச்சிட்டாங்க..இனியும் இவங்கள நம்பி எந்த பிரயோசனமும் இல்ல..’’ என்று பேசிய ஜெயப்பிரகாஷை ரொம்பவே ஆறுதல்படுத்திய ஜெயா,

‘‘இப்ப என்ன ஒங்களுக்கு படம் தானே பண்ணனும்.. அது தானே உங்களோட லட்சியம், ஆசை..’’ என்று ஜெயா கேட்க மெளனமாகத் தலையாட்டினான் ஜெயப்பிரகாஷ்

‘‘ ம்.. – அப்பிடின்னா.. நீங்க இனி யார்கிட்டயும் போய், நிக்க வேணாம். நாமளே இருக்கிற சொத்து பத்தெல்லாம் வித்துருவோம்.. – மேற்கொண்டும் பணம் வாங்குவோம். நாம படம் பண்ணுவோம். ஒங்களோட ஆசைய விட வேறென்ன வேணும்..’’ – என்று ஜெயா உணர்ச்சி பொங்கச் சொன்னபோது, ஜெயப்பிரகாஷுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அவன் உலகம் வேறு ஒரு கிரகத்தில் சுழல்வதாகவே சுழன்றான்.

அவன் ஆசைக்கு இப்போது தான் சிறகு முளைப்பதாக நினைத்தான், மனைவியைப் கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் விட்டான். அவன் லட்சியம் உயர்ந்த இடத்தை அடையப் போவதாக அவன் எண்ணம் சொல்லியது – அதுவரையில் அவன் லட்சியத்தை அலட்சியம் செய்த நண்பர்கள், உறவினர்கள் இப்போது ஒன்று சேர்ந்தார்கள்.

அன்று.. முதல் புதுப்படத்திற்கான வேலைகளை ஆரம்பித்தான் ஜெயப்பிரகாஷ். புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. உதவி இயக்குநர்கள் , நண்பர்கள் என்று தினமும் ஒன்று கூடி கதையை விவாதம் செய்தனர். படப்பிடிப்புத் தளங்களைத் தேர்வு செய்தனர். நடிகர், நடிகைகள் வந்து போயினர். ஆனால் ஜெயப்பிரகாஷின் நடவடிக்கை கொஞ்சம் தடம் புரண்டது, தினமும் குடியும் கும்மாளமுமாய் கிடந்தான். படமெடுக்கப் பட்ட பாடுகள் எல்லாம் சாக்பீஸ் கோடுகளாய் அழிந்தன. பாட்டில்களும் லூட்டிகளும் அலுவலகத்தை ஆக்கிரமித்துக் கிடந்தன. கதையில் வலு சேர்க்காமல், பொழுதுபோக்கில் வலு சேர்த்துக்கொண்டிருந்தனர். எதுவும் இல்லாத போது, வாடிப் போய்க் கிடந்த ஜெயப்பிரகாஷ் எல்லாம் வந்த பிறகு, ஆட்டம் போட ஆரம்பித்தான். உடன் அவன் நண்பர்களும் இப்படிப் போய்க் கொண்டிருக்கும் வேளையில் படத்திற்கான பூஜை போடப்பட்டது, திரையுலக நண்பர்களும் பெரிய மனிதர்களும் கை குலுக்கி ஜெயப்பிரகாஷுக்கு வாழ்த்துச் சொன்னார்கள்.

வாழ்த்துக்கள் ஜெயப்பிரகாஷ் – இந்தப் படம் உங்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும்.

‘‘சொந்த தயாரிப்பா..?’’ என்று கேட்ட ஒருவரிடம்

‘‘ஆமா..’’ என்று தலையாட்டினான் ஜெயப்பிரகாஷ்

‘‘ம்ம்.. – இருக்கட்டும்.. இருக்கட்டும்.. – – அப்போ வருமானம் முழுசும் உங்களுக்குத்தான்..’’ என்று ஒருவர் வாழ்த்துச் சொன்னார் .

இப்படியாய் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்த ஜெயப்பிரகாஷைத் தோள் போட்டு லட்சுமணன் கூப்பிட்டார்.

‘‘என்ன.. ஜெயப்பிரகாஷ் புதுப் படம் ஆரம்பிக்கப் போற போல..?’’ என்று லட்சுமணன் கேட்டதும்

‘‘ஆமா சார்.. எவ்வளவு நாளைக்கு அடுத்தவன் கையையே எதிர்பாத்து இருக்கிறது.. அதான்.. நானே சொந்தமா ஆரம்பிச்சிட்டேன்..’’ – என்று ஜெயப்பிரகாஷ சொல்ல தலையாட்டிய லட்சுமணன்.

‘‘ம்ம்.. – படத்துக்கு எவ்வளவு பட்ஜெட்..’’ என்று கேட்டார்.

‘‘ரெண்டு கோடி..’’ என்று ஜெய்ப்பிரகாஷ் சொல்ல

கொஞ்சம் இடைவெளி விட்ட லட்சுமணன்

‘‘ஜெயப்பிரகாஷ் ஒனக்கு நான் ரெண்டு கோடி லாபம் சம்பாதிச்சுத் தாரேன்..’’ என்று சொன்னார்.

‘‘என்னது ரெண்டு கோடியா..? போட்ட முதலுக்கு அப்பிடியே லாபமா..?’’ என்ற ஜெயப் பிரகாஷ் லட்சுமணனின் பேச்சுக்கு ரொம்பவே ஆவலாய்ச் செவி கொடுத்தான்.

‘‘ஆமா.. – ஜெயப்பிரகாஷ், நான் சொல்றத செஞ்சா ஒனக்கு ரெண்டு கோடி லாபம்..’’ என்று சொன்ன லட்சுமணனின் பேச்சைக் கேட்க ஆவலாக இருந்தான் ஜெயப்பிரகாஷ்.

மறுபடியும் ஜெயப்பிரகாஷின் தோளில் கை போட்ட லட்சுமணன்

‘‘தம்பி.. ஜெயப்பிரகாஷ், இந்தப் படத்த நீ.. எடுக்காமலே இருந்தேய்ன்னா.. ஒனக்கு ரெண்டு கோடி லாபம்தான்..’’ என்று லட்சுமணன் சொன்னார்.

லட்சுமணனின் பேச்சைக் கேட்ட,ஜெயப்பிரகாஷ் வெல வெலத்துப் போனான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *