செய்திகள்

பாடியநல்லூர் முதல் தடா வரை மரக்கன்றுகள் நடும் பணி: கலெக்டர் மகேஸ்வரி துவக்கி வைத்தார்

Spread the love

திருவள்ளூர், பிப். 6–

திருவள்ளூர் சோழவரம் அரசு பிண்டிகூர் கண்னைய செட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அடிப்படை வசதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு, தேசிய நெடுஞ்சாலை எண்–5ல் மரக்கன்றுகளை நடும் பணிகளை துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியம், சோழவரம் அரசு பிண்டிகூர் கண்னைய செட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், சமையல் கூடம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட கலெக்டர் பள்ளியின் வகுப்பறை கட்டடங்கள் உள்ளிட்டவைகளையும், சமையல் கூடம், கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர், வகுப்பறைக்குச் சென்று மாணவர்களிடம் கலந்துரையாடி, அவர்களுக்கு கல்வி கற்று வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தி வாழ்த்துக்களை தெரிவித்தார். மாணவர்களிடம் குறைகள் ஏதேனுமிருப்பின் அதை வெளிப்படையாக தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கேட்டறிந்து கொண்டார்.

பின்னர், தலைமையாசிரியரிடம் போதுமான ஆசிரியர்கள் பணிகளில் உள்ளனரா என்பது தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டு, பள்ளி வளாகத்தினையும், கழிவறைகளையும் தூய்மையாக வைத்துக்கொண்டு பள்ளி வளாகத்தில் அதிக அளவில் மரக்கன்றுகளை நடுவதற்கும் அறிவுறுத்தினார்.

முன்னதாக, தேசிய நெடுஞ்சாலை எண்.5-ல் பாடியநல்லூர் பகுதியில், பாடியநல்லூர் முதல் தடா வரையிலான நெடுஞ்சாலையில் 11 ஆயிரம் எண்ணிக்கையிலான அனைத்துவகை மரக்கன்றுகளையும் நடவு செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.

இதுதொடர்பாக கலெக்டர் கூறுகையில், மரக்கன்றுகளை நடவு செய்வதால் நெடுஞ்சாலை ஓரம் ஆக்கிரமிப்புகள், வாகன நிறுத்தங்கள் உள்ளிட்டவைகள் தவிர்க்கப்படும். மேலும், வீணாக குப்பைகளை கொட்டி, குப்பை கூளமாக மாறுவது முழுமையாக தவிர்க்கப்படும். இதனால் நெடுஞ்சாலைகள் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் மாறுவதற்கு வழிவகை செய்யும் என கூறினார்.

இந்நிகழ்வுகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் லோகேஷ்சிங் ராஜ் புரோகித், இணை ஆலோசகர் அசித்தோஷ் சமந்த் சிங்கார், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *