செய்திகள்

கொரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தில் 200 நேயாளிகள் சிகிச்சை பெற்று பயன்

அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்

கொரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தில் 200 நேயாளிகள் சிகிச்சை பெற்று பயன்

சென்னை, அக். 30

அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வைரஸ் (கோவிட் 19) பிரத்தியேகமான சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு முதலமைச்சரால் கடந்த மார்ச் மாதம் 27ந் தேதி முதல் செயல்படத் துவங்கியது.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி இந்த மருத்துவமனையில் மொத்தம் 750 படுக்கை வசதிகள், அதில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள், 110 வென்டிலேட்டர் கருவிகள், 60 அதிவேக ஆக்சிஜன் செலுத்தும் கருவி, 150 நவீன மானிட்டர் கருவிகள், ஆர்டிபிசிஆர் பரிசோதனை வசதி, அதிநவீன உயிர்வேதியியல் ரத்தப் பரிசோதனை வசதிகள், எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், முதலிய அனைத்து உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

இம்மருத்துவமனையில் கொரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தை (Post COVID Care Clinic) கடந்த 1 ந்தேதி மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

இந்த மையம் சிறப்பாக செயல்பட்டு 200க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர் சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத் துறையின் சிறப்பான நடவடிக்கையால் குணம் பெற்று திரும்பும் நோயாளிகள் பயன் பெறும் வகையில் அரசின் வழிகாட்டுதலின்படி ‘‘கொரோனாவிற்கு பின் தொடர் சிகிச்சை மையம்’’ மற்றும் அதற்கென பிரத்யேகமான புதிய 16 கூறு சிடி ஸ்கேன் கருவி நிறுவப்பட்டு மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

என்னென்ன சோதனை?

இந்த கொரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தின் சிறப்பு அம்சங்கள்:

* தானியங்கி உடல் பருமன் குறியீடு (BMI) அளவிடுதல்

* கொரோனாவால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்புகளை கண்டறிய மூச்சு திறனாய்வு மற்றும் 6 நிமிட நடைப்பயிற்சியில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கண்டறிதல்

* சிடி ஸ்கேன்

* அதிநவீன முழுமையான தானியங்கி Cell Counter கருவி மூலம் ரத்த பரிசோதனை

* இயன்முறை பயிற்சி

* கொரோனாவால் ஏற்பட்ட இருதய பாதிப்புகளை கண்டறிய சைக்கிள் பயிற்சி மற்றும் படிக்கட்டு பயிற்சி திறன்

* கண் பரிசோதனை

* கொரோனாவால் ஏற்பட்ட மன சோர்வு அகல மனநல மருத்துவரின் ஆலோசனை

* நோய் பாதிப்புகளை கண்டறிந்து அதற்கான உரிய சிகிச்சை மருந்துகள்

* யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் முறையில் அவர்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை

* நோயாளிகளுக்கு Zinc, விட்டமின் சி மற்றும் ஆஸ்பிரின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வசதியின் மூலம் கொரோனா பாதிப்படைந்த நோயாளிகள் அவர்களுக்கு சுவாசப் பிரச்சனை, உடல்நல பாதிப்புகள், மன சோர்வுகள் ஆகியவை நீங்கி மீண்டும் உற்சாகமான இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இங்கு 150 பேருக்கு மீண்டும் சிடி பரிசோதனை செய்ததில் கொரோனாவால் நுரையீரல் பாதிப்படைந்த 98% நோயாளிகள் முற்றிலுமாக நுரையீரல் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர் என்பது தன்னம்பிக்கை தரக்கூடியது ஆகும் என்று மருத்துவமனை செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *