செய்திகள்

வாக்குப்பதிவு, வி.வி.பி.ஏ.டி. இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த பயிற்சி முகாம்

திருவள்ளூர், மார்ச் 5–

திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வி.வி.பி.ஏ.டி. இயந்திரங்கள் குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது. திருவள்ளுர் லட்சுமிபுரம், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வி.வி.பி.ஏ.டி. இயந்திரங்கள் குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் பயிற்சிக்குரிய இயந்திரங்களில் பயிற்சி (ம) விழிப்புணர்வு குறித்த ஒட்டு வில்லைகள் (ஸ்டிக்கர்கள்) ஒட்டி பயிற்சிக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலெக்டர் பா.பொன்னையா கூறியதாவது:

மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 முன்னிட்டு, திருவள்ளுர் மாவட்டத்தில் வாக்குப்பதிவிற்கு தேவையான, வாக்குப்பதிவு மற்றும் வி.வி.பி.ஏ.டி இயந்திரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 6564 கண்ட்ரோல் யூனிட்டுகளும், 8388 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 6452 வி.வி.பி.ஏ.டி. இயந்திரங்களும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமான அளவில் வாக்குப்பதிவு, வி.வி.பி.ஏ.டி உள்ளிட்ட இயந்திரங்கள் இருப்பில் உள்ளது. அனைவருக்கும் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வி.வி.பி.ஏ.டி இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 5 சதவிகித அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படவுள்ளது.

10 சட்டமன்ற தொகுதிகளுக்கு 5 சதவிகித அளவில் மொத்தம் 245 பேலட் யூனிட்களும், 245 கண்ட்ரோல் யூனிட்களும், 245 வி.வி.பி.ஏ.டி இயந்திரங்களும் ஆக மொத்தம் 735 இயந்திரங்கள் இவ்விழிப்புணர்வுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. மொத்தம் உள்ள 4902 வாக்குச்சாவடிகளில் 5 சதவிகித என்ற அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதனை பொதுமக்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு பயன்படுத்தப்படவுள்ளது. இதன் மூலமாக பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு குறித்த அதிகளவிலான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கப்படும். 23,528 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். 500 எண்ணிக்கையிலான மண்டல அலுவலர்கள் மற்றும் துணை அலுவலர்கள் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான புகார்களை பெறுவதற்கான 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடகச் சான்று மற்றும் ஊடக கண்காணிப்பு அறையை கலெக்டர் பொன்னையா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, விவரங்களை கேட்டறிந்தார்.

இப்பயிற்சியில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, வட்டாட்சியர்கள் திரு.செந்தில் (திருவள்ளுர்), மணிகண்டன் (பொன்னேரி), செல்வம் (ஆவடி), ஜெயராணி (திருத்தணி), துணை வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *