செய்திகள்

நாளை கெஜ்ரிவால் பதவியேற்பு: டெல்லியில் போக்குவரத்து மாற்றம்

Spread the love

புதுடெல்லி,பிப்.15–

டெல்லி முதல்வராக 3வது முறையாக ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் நாளை பதவியேற்க உள்ளார். இதற்காக டெல்லியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக 3வது முறையாக நாளை பதவியேற்க உள்ளார். 51 வயதாகும் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழா டெல்லி ராம்லீலா மைதானத்தில் பகல் 12.15 மணிக்கு நடக்க உள்ளது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. பிரதமர் மோடி தவிர மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் யாருக்கும் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜ்காட் சவுக், டெல்லி கேட் சவுக், நேதாஜி சுபாஷ் மார்க், அஜ்மீர் கேட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பஸ்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கார் மற்றும் பஸ்கள் நிறுத்தும் இடமும் மாற்றப்பட்டுள்ளது.

விழாவிற்கு வருவோரின் வாகனங்கள் நிறுத்துவதற்கும் ராம்லீலா மைதானத்திற்கு எதிர்புறம் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பயணிப்பதை மக்கள் தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழா தொடர்பாக மணிஷ் சிசோடியா கூறியதாவது:–

ஜெய் பீம் திட்டம், மொகில்லா கிளினிக் டாக்டர்கள், பைக் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உள்ளிட்ட திட்டங்களில் பயனடைந்தவர்கள், நாளை நடக்கும் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *