செய்திகள்

வேனில் கொண்டு சென்றபோது விடைத்தாள்களை மாற்றியது எப்படி? டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் பரபரப்பு வாக்குமூலம்

Spread the love

சென்னை,ஜன.27–

குரூப்–-4 தேர்வில் முறைகேடு வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு உள்ள டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் சிபிசிஐடி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:–

சென்னை பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இடைத்தரகராக உள்ள பழனி என்பவர் மூலம் சென்னை முகப்பேரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் எனக்கு நண்பர் ஆனார். 2018-ம் ஆண்டில் இருந்து நாங்கள் நண்பர்களாக பழகி வந்தோம்.

2019-ம் ஆண்டு குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அப்போது ஜெயக்குமார் என்னிடம் வந்து, ‘எனக்கு தெரிந்த சிலர் குரூப்-4 தேர்வில் முறைகேடாக வெற்றி பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும்’ என்று கேட்டார்.

முறைகேடாக வெற்றி பெறுவதற்கு நான் உதவி செய்தால் ரூ.15 லட்சம் தருவதாக என்னிடம் வாக்குறுதி அளித்தார். ரூ.2 லட்சம் முன் பணமாக கொடுத்தார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேசுவரம் தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் தனக்கு வேண்டியவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் ஜெயக்குமார் என்னிடம் கூறினார். நானும் அதற்கு சம்மதித்தேன்.

விடைத்தாள்களை வேனில் எடுத்து வரும்போது திருத்தி முறைகேட்டில் ஈடுபட முன் கூட்டியே திட்டம் தீட்டினோம். எங்களது திட்டப்படி தேர்வு நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாகவே ஜெயக்குமார் ராமேசுவரத்துக்கு காரில் சென்றுவிட்டார். தேர்வில் கலந்துகொள்ளும் தனக்கு வேண்டியவர்களுக்கு ஜெயக்குமார் விரைவில் மை மறைந்துவிட கூடிய மேஜிக் பேனாக்களை கொடுத்தார்.

தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் ராமநாதபுரம் மாவட்டம் கருவூலத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கிருந்து விடைத்தாள்களை சென்னைக்கு வேனில் கொண்டு வரும் பணி என்னுடன் பணி புரியும் டி.என்.பி.எஸ்.சி. தட்டச்சர் மாணிக்கவேலிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அவருக்கு உதவி செய்வதற்காக என்னை நியமித்து இருந்தனர்.

நானும், மாணிக்கவேலும் தேர்வு நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாகவே ராமேசுவரம் சென்றுவிட்டோம். அங்கு வைத்து நான் ஜெயக்குமாரை சந்தித்தேன். விடைத்தாளை எவ்வாறு திருத்துவது? என்பது பற்றி, அப்போது திட்டம் தீட்டினோம்.

விடைத்தாள்களை வேனில் ஏற்றி வரும்போது நடுவழியில் வைத்து குறிப்பிட்ட விடைத்தாள்களை எடுத்து திருத்தம் செய்ய முடிவு செய்தோம். விடைத்தாள்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி அன்று ராமநாதபுரம் மாவட்டம் கருவூலத்தில் இருந்து இரவு 8 மணியளவில் ஏ.பி.டி.பார்சல் சர்வீஸ் வேனில் ஏற்றப்பட்டது.

வேனில் பிரத்யேகமாக உள்ள ஒரு அறையில் விடைத்தாள்கள் வைக்கப்பட்டன. அந்த அறையை பூட்டி அதன் சாவியை நான் வைத்துக் கொண்டேன். பின்னர் விடைத்தாள்கள் ஏற்றப்பட்ட வேன் சென்னையை நோக்கி புறப்பட்டது. அந்த வேனில் நானும், மாணிக்கவேலும் ஏறிக் கொண்டோம். எங்கள் வேனை பின் தொடர்ந்து ஜெயக்குமார் காரில் வந்தார்.

இரவு 10 மணியளவில் சிவகங்கை மாவட்டத்தில் எழுதப்பட்ட தேர்வு விடைத்தாள்களை அங்குள்ள கருவூலத்தில் இருந்து வேனில் ஏற்றினோம். இரவு 10.30 மணியளவில் அங்கிருந்து வேனில் சென்னை புறப்பட்டோம். சிறிது நேரத்தில் சிவகங்கையை தாண்டி ரோட்டு ஓரமாக வேனை நிறுத்தினோம். பாதுகாப்புக்கு வந்த போலீசார், தட்டச்சர் மாணிக்கவேல் ஆகியோரை எதிர்புறம் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பாட்டுக்கு அழைத்து சென்றேன். அவர்களை அங்கு சாப்பிட வைத்துவிட்டு நான் மட்டும் விடைத்தாள்கள் இருந்த வேனுக்கு திரும்பி வந்தேன். அங்கே ஜெயக்குமார் காரில் காத்திருந்தார்.

விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த வேன் அறை சாவியை ஜெயக்குமாரிடம் கொடுத்தேன். அவர் அந்த சாவி மூலம் வேன் அறையை திறந்தார். ராமேசுவரம், கீழக்கரை மையங்களை சேர்ந்த தனக்கு வேண்டிய 99 தேர்வர்களின் விடைத்தாள்களை மட்டும் தனது காரில் எடுத்துச்சென்றார். நான் எதுவும் நடக்காதது போல் வேன் அறையை பூட்டி சாவியை வைத்துக் கொண்டேன்.

சாப்பிட சென்றவர்கள் வந்தவுடன் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டோம். அதிகாலை 5.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சாலையோரமாக உள்ள ஒரு டீ கடையில் வேனை நிறுத்தினோம். போலீசாரும், தட்டச்சர் மாணிக்கவேலும் டீ சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஜெயக்குமார் காரில் வந்து சேர்ந்தார். அவரிடம் இருந்து திருத்தப்பட்ட 99 தேர்வர்களின் விடைத்தாள்களை வாங்கி வேனின் ரகசிய அறையில் வைத்துவிட்டேன். ஜெயக்குமார் அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் விடைத்தாள்களை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் ஒப்படைத்தோம்.

இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சென்னை முகப்பேரை சேர்ந்த ஜெயக்குமார் தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *