போஸ்டர் செய்தி

தமிழகத்தில் டிசம்பர் 27, 30–ந் தேதி உள்ளாட்சி தேர்தல்

Spread the love

உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறும்

தேர்தல் கமிஷனர் பழனிசாமி பேட்டி

* 6–ந் தேதி வேட்பு மனு தாக்கல்

* ஜனவரி 2ல் ஓட்டு எண்ணிக்கை

மேயர் தேர்தல் பின்னர் அறிவிப்பு

சென்னை, டிச.2–

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27–ந் தேதியும் 30 ந்தேதியும் 2 கட்டமாக நடைபெறும் என தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ந் தேதி நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் ஜனவரி 6–ந் தேதி பதவி ஏற்பார்கள். கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் 6–ந் தேதி நடந்து, அன்றே பதவி ஏற்பும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி (மேயர் பதவி), நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் கமிஷனர் பழனிசாமி தேர்தல் அறிவிப்பை இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் ஊராக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் டிசம்பர் 27, 30ம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும். இதற்கான தேர்தல் அறிவிக்கை 6.12.2019 அன்று வெளியிடப்படும். வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணை 2020ம் ஆண்டு ஜனவரி 2–ந்தேதி அன்று காலை 8 மணிக்கு தொடங்கும்.

தேர்தல் அட்டவணை

வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது.13–ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

16–ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 18ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும்.

வாக்குப்பதிவு 2 கட்டங்களான நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு 27–ந்தேதியும், 2ம் கட்ட வாக்குப்பதிவு 30–ந்தேதியும் நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 2–ந்தேதி நடைபெறும். ஜனவரி 4–ந்தேதி தேர்தல் நடைமுறைகள் முடிவடைகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு ஜனவரி 6–ந்தேதி நடைபெறும்.

11–ந்தேதி மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சித் துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெறும்.

1,18,974 பதவிக்கு நேரடி தேர்தல்

ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 974 பதவி இடங்களுக்கு நேரடி தேர்தல் நடைபெறுகிறது.

இதில்

* 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும்

* 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 6 ஆயிரத்து 671 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களும்,

* 12 ஆயிரத்து 524 ஊராட்சித் தலைவர் பதவியிடங்களும் மற்றும் 99 ஆயிரத்து 324 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களும் அடங்கும்.

கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும்.

3,232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்

* முதல் கட்டத்தில் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6 ஆயிரத்து 251 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49 ஆயிரத்து 686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 27–ந்தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.

* 2–ம் கட்டத்தில் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் உட்பட்ட 3,239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6 ஆயிரத்து 273 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49 ஆயிரத்து 686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 30–ந்தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.

4 விதமான வாக்குச்சீட்டுக்கள்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், 4 விதமான வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தப்படும்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும், பிரிதொரு வார்டிற்கு இள நீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

63,790 வாக்குச்சாவடிகள்

முதல் கட்ட வாக்குப்பதிவில் 31,698 வாக்குச்சாவடிகளிலும், 2ம் கட்ட வாக்குப்பதிவில் 32,092 வாக்குச்சாவடிகளிலும், மொத்தம் 63,790 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

3 கோடி வாக்காளர்கள்

சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள அடிப்படை விவரங்களை கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தேசிய தகவலியல் மையத்துடன் இணைந்து ஆன்லைன் முறையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரித்துள்ளது.

* ஊரகப் பகுதிகளில் 1 கோடியே 64 லட்சத்து 28 ஆயிரத்து 941 ஆண் வாக்காளர்களும், 1 கோடியே 67 லட்சத்து 4 ஆயிரத்து 868 பெண் வாக்காளர்களும், 2 ஆயிரத்து 277 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 3 கோடியே 31 லட்சத்து 36 ஆயிரத்து 86 வாக்காளர்கள் உள்ளனர்.

* இதில் முதல் கட்டத் தேர்தலில் 1.64 கோடி வாக்காளர்களும், 2ம் கட்டத் தேர்தலில் 1.67 கோடி வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.

5 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள்

* ஊராட்சித் தேர்தலுக்காக 870 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 16 ஆயிரத்து 840 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

* ஊராட்சி தேர்தலுக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதம் சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் அலுவலர்கள் வாக்குப்பதிவுப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு யந்திரத்தில் 4 பதவி இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஏனைய பதவி இடங்களுக்கு சுமார் 2 லட்சத்து 33 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட தேர்தல் பார்வையாளர்களாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்படவுள்ளனர்.

டெபாசிட் தொகை

வேட்பு மனு தாக்கல் செய்ய கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு ரூ.200 வைப்புத்தொகையும், கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு ரூ.600 வைப்புத்தொகையும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு ரூ.ஆயிரம் வைப்புத்தொகையும் செலுத்த வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு ரூ.100 வைப்புத்தொகையும், கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு ரூ.300 வைப்புத்தொகையும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு ரூ.500 வைப்புத்தொகையும் செலுத்த வேண்டும்.

தேர்தல் செலவினங்கள்

வேட்பாளர்களுக்கான அதிகபட்ச தேர்தல் செலவின வரம்பானது கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ரூ.9 ஆயிரமும், கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ரூ.34 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ரூ.85 ஆயிரமும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு உரிய அலுவலரிடம் தேர்தல் செலவினக் கணக்குகளை ஒப்படைத்திட வேண்டும். ஒப்படைக்கத் தவறுபவர்கள் மீது தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாதவாறு 3 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

* மக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்க ஏதுவாகவும், வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்திடவும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதட்டம் நிறைந்த வாக்கு சாவடிகள்

* பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களால் கண்டறியப்பட்டு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்படுவதோடு அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் வீடியோவில் பதிவு செய்யப்படும்.

மறைமுகத் தேர்தல்கள்

உள்ளாட்சி பிரதிநிதிகளைக் கொண்டு 11.1.2020 அன்று மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடங்கள் – 31, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவியிடங்கள் – 31, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியிடங்கள் – 388, ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பதவியிடங்கள் – 388, கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவியிடங்கள் – 12 ஆயிரத்து 524. ஆக மொத்தம் 13 ஆயிரத்து 362 பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள்

தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் உடனடியாக அமுலுக்கு வருகின்றது. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், தேர்தல் நடத்தை விதிகளைக் கடைபிடித்து, தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற எல்லா விதத்திலும் தேர்தல் ஆணையத்தோடு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *