செய்திகள்

நீட் தேர்வு எதிர்ப்பு கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது: சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

Spread the love

சென்னை, ஜன. 9–

நீட் தேர்வு எதிர்ப்பு கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று சட்டசபையில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திட்டவட்டமாக கூறினார்.

சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்திருப்பதை பற்றி பதில் அளித்து பேசியதாவது ;

எதிர்க்கட்சித் தலைவர் இந்த நீட் பிரச்சினை விவகாரம் குறித்து இப்போது கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். அதில் முதலில் நீங்கள் சொன்னது 6–ந் தேதி அந்த நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, 4–ந் தேதி நீங்கள் ஒரு வழக்கு தொடுத்தீர்கள் என்று சொன்னீர்கள். அது தேதி 4. ஆனால், அந்த விண்ணப்பிக்கக்கூடிய அந்த 6 ஆம் தேதிக்கும் இதற்கும் தொடர்பில்லை. முதலமைச்சர் தலைமையிலான அம்மாவின் அரசு அந்த நீட் கொள்கையிலே, நீட் எதிர்ப்புக் கொள்கையிலே இன்றுவரை உறுதியோடு இருக்கிறது என்பதிலே எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. தாங்கள் கடைசியிலே பேசுகிறபோது இது சமூக நீதிக்கும், தமிழர்களுக்கும் மிகப் பெரிய துரோகம் என்ற வார்த்தையை நீங்கள் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

அப்படியென்றால், நீங்கள் அந்த துரோகம் என்ற வார்த்தையை சொன்னீர்களென்றால், துரோகத்திற்கான விதையை 27-12-2010-ல் அந்த விதையை விதைத்தது காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. கைகோர்த்திருந்த, நீங்கள் கூட்டணியில் இருந்தபொழுதுதான் அந்த விதை விதைக்கப்பட்டது. அப்படியென்றால் அந்த விதையே இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினையே இல்லை. ஆகவே, நீங்கள் விதையை விதைத்ததனாலே, பல்வேறு நிலைகளில், பல்வேறு காலக்கட்டங்களில், இப்போது அது ஐகோர்ட் வழக்காகி, உச்ச நீதிமன்ற வழக்காகி, பிறகு மசோதாவாகி இப்படி பல்வேறு பிரச்சினைகளில் நாமெல்லாம் இப்படி பேசக்கூடிய, விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடிய நிலை இன்றைக்கு இருக்கிறது.

சட்ட வல்லுநர்களை அழைத்துக் கேளுங்கள்

நீங்கள் துரோகம் என்று சொன்னதால் நான் அவசியம் இதை அழுத்தத்தோடு பதிய வைக்க விரும்புகிறேன். துரோகம் என்று சொன்னால், உங்கள் துரோகத்திற்கான விதை விதைக்கப்பட்டது 27-12-2010 நோட்டீபிகேசன் என்ற முறையிலே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, அன்றைக்கு காங்கிரசோடு கைகோர்த்திருந்த தி.மு.க. ஆட்சி. விதையை விதைக்கவே வேண்டாமென்று அழுத்தமாகச் சொன்னது அம்மா. தொடர்ந்து அன்றிலிருந்து இன்று வரை அண்ணா தி.மு.க. அரசு நீட் தேர்வு எதிர்ப்பு கொள்கையில் உறுதியாக இருக்கிறது.

மூல வழக்கும் நிலுவையிலிருக்கிறது, புது வழக்கையும் தொடுத்திருக்கின்றோம். உங்கள் கட்சியிலும் சட்ட வல்லுநர்கள் இருக்கிறார்கள். அந்த சட்ட வல்லுநர்களை அழைத்துக் கேளுங்கள், (அரசு செய்தது சரியான நடவடிக்கை என்று உங்கள் கட்சியைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள் உங்களுக்கே சொல்வார்கள். எனவே, நான் மீண்டும், மீண்டும் சொல்கிறேன்; அவ்வாறு சொன்னால், காங்கிரஸ் கட்சியினுடைய அவைத் தலைவருக்கு மீண்டும் என்மீது வருத்தம் வந்துவிடும். எனவே, ஏற்கெனவே பதிய வைத்த விஷயங்களை நான் மீண்டும் பதிய வைக்க வேண்டாம் என்று இருக்கிறேன். பாலிசி மேட்டர்-ஐ காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்தார்கள்; நீங்கள்கூட துணையிருந்து விட்டீர்கள். அதைத்தான் சொல்கிறேன், நீங்கள் பிள்ளையைக் கிள்ளிவிட்டு, பிறகு தொட்டிலை ஆட்டுவது போன்று ஆட்டுகிறீர்கள்.

இந்த விவகாரம் ஒவ்வொரு காலகட்டங்களிலும், உயர் நீதிமன்றம் சென்று, உச்ச நீதிமன்றம் வரை வளர்ந்து, தற்போது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைய நிலையில் என்ன செய்ய முடியுமோ, அதை முதலமைச்சருடைய அரசு மிகச் சரியாக, தெளிவாக செய்து வருகிறது; தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறது. எள் முனையளவுகூட எந்த இடத்திலும் தொய்வே கிடையாது.

அரசு தொடர் நடவடிக்கை

உச்சநீதிமன்றம் சென்று, அம்மா 18-7-2013 நீட்டே இனிமேல் கிடையாது என்ற ஒரு மகத்தான உத்தரவை வாங்கினார்கள். அதற்குப் பிறகு, பிரதமருக்கு தொடர்ந்து கடிதம் எழுதினார்கள். இதற்கு மேலேயாவது, நீங்கள் விட்டுவிடுங்கள், நீங்கள் ஏன் நோட்டீபிகேசன் போட்டீர்கள்? எம்சிஐ-க்கு அந்த power-ஏ இல்லை, எம்சிஐ-க்கு அந்த அதிகாரமே இல்லை என்ற உத்தரவை வாங்கிய பிறகு, சீராய்வு பெட்டிஷன் போட்டது யார்? எம்சிஐ-தானே போட்டார்கள். அப்போது ஆட்சியிலே இருந்தது யார்? காங்கிரஸ்-திமுக கட்சிகள் தானே ஆட்சியில் இருந்தன. சீராய்வு பெட்டிஷன்-ல் தானே அந்த உத்தரவு திரும்பிப் பெறப்பட்டது; மறுபடியும் விசாரிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. இல்லை, அனைத்து புள்ளிவிவரங்களும் என்னிடத்தில் இருக்கின்றன. அதாவது, அனைத்து புள்ளிவிவரங்களும் என்னிடத்திலே இருக்கின்றன. நீட் விஷயத்திலே நீங்கள் எவ்வளவு பெரிய விவாதத்தை செய்தாலும், அண்ணா தி.மு.க., அம்மாவின் அரசு தொடர்ந்து தன்னுடைய கொள்கையிலே, நிலைப்பாட்டிலே உறுதியாக இருக்கிறது என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. எள் முனையளவும்கூட, அந்த தொடர் நடவடிக்கையில் தொய்வு இல்லை. அரசியல் அழுத்தம், சட்ட நடவடிக்கை, சட்டமன்றத் தீர்மானம் என பல்வேறு வழிகளில் அரசு தொடர்ந்து தன்னுடைய நிலைப்பாட்டை செய்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *