செய்திகள்

அரசியல் கட்சிகள், தனிநபர்கள் கிராம சபை கூட்டங்கள் நடத்த அரசு தடை

அரசியல் கட்சிகள், தனிநபர்கள்

கிராம சபை கூட்டங்கள் நடத்த அரசு தடை

மீறி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை

சென்னை, டிச.25-

அரசியல் கட்சிகள் கிராம சபை கூட்டங்கள் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994ன்படி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 18 வயது நிரம்பிய வாக்களிக்கும் உரிமை கொண்ட மக்களை உள்ளடக்கி கிராம சபை அமைக்கப்பட்டுள்ளது. கிராம சபை, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி அமைக்கப்படும் ஒரு நிர்வாக அமைப்பாகும்.

இக்கிராம சபைகள் அந்த ஊராட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவை. கிராம சபைகள் செயல்படும் முறைகள் குறித்த விரிவான விதிமுறைகள் அரசால் வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 4 முறை, அதாவது ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களில் நடத்த அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அரசியல் சார்பற்றவை

உள்ளாட்சி நிர்வாகத்தில் மிக முக்கிய பங்காற்றும் கிராம சபைகள் ஊரக பகுதி மக்களின் குறைகளை களைந்து கிராமம் முன்னேற்றம் காண வழிவகுக்கிறது. இத்தகைய கிராம சபைகள் அரசியல் சார்பற்றவை.

இந்தநிலையில், சில அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் மக்களை குழப்புவதற்காக அரசியல் சார்ந்த பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இது ஊராட்சிகள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணானது மட்டும் அல்லாமல் அந்த அமைப்பை இந்நடவடிக்கை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஊராட்சி தலைவருக்கு அதிகாரம்

கிராம சபை என்பது அரசமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பாகும். மேற்படி ஊராட்சி சட்டத்தின் பிரிவு 3 (2-ஏ)-ன்படி கிராம சபையினை கூட்டும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு மட்டுமே உள்ளது. அவர் கிராம சபையினை கூட்ட தவறும் பட்சத்தில், ஊராட்சிகளின் ஆய்வாளர் அல்லது மாவட்ட கலெக்டர் கிராம சபை கூட்டத்தை கூட்ட வேண்டும்.

எனவே, மேற்படி சட்டத்தால் அதிகாரம் பெற்றவர்களைத் தவிர, கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தனி நபரோ அல்லது அரசியல் கட்சிகளோ கூட்டங்களைக் கூட்டுவது சட்டத்திற்கு எதிரானது. எனவே, இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளன.

சட்டப்படி நடவடிக்கை

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ன்கீழ் கிராம சபைகளைக் கூட்ட முடிவு எடுக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசியலில் ஆதாயம் தேடுவதற்காக கிராம சபை என்ற பெயரில் அரசியல் கட்சி அல்லது தனி நபர் கூட்டங்களை நடத்துவது பொதுமக்களை பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கும் என்பதால் இத்தகைய நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அரசால் அனுமதிக்கப்படாத நிலையில், அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி இதுபோன்ற அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *