செய்திகள்

தொழிற்சாலை எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்: எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

* 22 மாவட்டங்களில் தொழில் துவங்குபவர்களுக்கு 50 சதவிகித சலுகை

* 10 ஆண்டுகளில் ரூ.6.85 லட்சம் கோடி புதிய முதலீடுகள்

* முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 81% செயல்பாடு

* சிறுதொழில் முதலீட்டு மானியம் 3 மடங்காக உயர்வு

* தொழிற்பேட்டை உட்கட்டமைப்புக்கு ரூ.500 கோடி

தொழிற்சாலை எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்:

எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

சென்னை, பிப்.17–

22 மாவட்டங்களில் தொழில் துவங்குபவர்களுக்கு 50 சதவிகித சலுகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தொழிற்சாலை எண்ணிக்கை மற்றும் தொழிற்சாலை பணியாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொழில் துறை சார்பில் ‘வெற்றிநடை போடும் தமிழகம், தொழில் வளர் தமிழகம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் 33 ஆயிரத்து 465 கோடி முதலீட்டில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 714 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், புதிய தொழில் முதலீட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்க புதிய தொழில் கொள்கை 2021-ஐ முதல்-அமைச்சர் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக தொழில் கொள்கையை அவர் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை ஊரகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் பெற்றுக்கொண்டார்.

பின்னர், 28 ஆயிரத்து 53 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 68 ஆயிரத்து 775 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், 28 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

எனது தலைமையிலான அம்மா அரசின் திறமையான செயல்பாடுகளால் பல்வேறு துறைகளிலும், இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் பெற்று திகழ்கிறது. துறைகள்தோறும் புதிய உயரங்கள் பல தொட்டு, தமிழ்நாட்டின் ‘‘வெற்றி நடை தொடர வேண்டும்” என்ற முழு முனைப்போடு அரசு செயல்பட்டு வருகிறது.

அம்மா மற்றும் அம்மாவின் அரசால், மின்மிகை மாநிலமாகவும், நீர்மிகை மாநிலமாகவும், சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலமாகவும், உலகத்தர உட்கட்டமைப்பு உள்ள மாநிலமாகவும் என்று தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. இன்று தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் சரணாலயமாக தமிழ்நாடு திகழ்கின்றது.

தொழில் துவங்க உகந்த மாநிலம்

‘‘பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல்”

– என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கு இணங்க, தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் ‘‘புதிய தொழில் துவங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு” என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தொழில் துறையினரிடம் பெற்றுள்ளது. இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் விதமாக இன்றைய விழா சிறப்பாக அமைந்துள்ளது.

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு, உலக அரங்கில் தமிழ்நாட்டை, தொழில் துறை முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலமாக மேலும் வலுப்படுத்தும் வகையிலும், உலகத் தொழில்களை ஈர்க்கும் வகையிலும், சிறப்பான நம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி ஊக்கமளித்து மேம்படுத்தும் வகையிலும், இரண்டு புதிய தொழில் கொள்கைகளை இன்று அறிமுகப்படுத்துவதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

முதலீடு, புத்தாக்கம் மற்றும் உற்பத்தி தொடர்புடைய சேவைகளை உருவாக்குவதில் உலக அளவில் முன்னணி மையமாக தமிழ்நாட்டை உருவாக்குவதும், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், உற்பத்தித் துறையில் ஆண்டுக்கு 15 சதவீதம் வளர்ச்சியை அடைந்திடவும், மீண்டும் புதிய வெற்றிப் பயணத்தை துவக்குவதும், தமிழ்நாடு தொழில் கொள்கை 2021–ன் நோக்கம் ஆகும்.

அதேபோல, வளர்ச்சியை பரவலாக்கிடவும், சோதனைகளை சாதனையாக்கும் திறமை நிறைந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்கவும், அடுத்த 5 ஆண்டுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கை – 2021.

தமிழ்நாடு அரசின் இந்த புதிய கொள்கைகள், வளர்ந்து வரும் துறைகளான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உபகரணங்கள் உற்பத்தி, உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளுக்கு, புதிய தொழில் கொள்கைகள் கூடுதல் ஊக்கமளிக்கின்றன. புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சித் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

22 மாவட்டங்களில் தொழில் துவங்க சலுகை

வேலைவாய்ப்பு உருவாக்கத்தினை அதிகரிக்கவும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கும் வகையிலும் தொழில் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. சீரான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தென்மாவட்டங்கள் மற்றும் தர்மபுரி, பெரம்பலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்கள் என 22 மாவட்டங்களில் தொழில் துவங்குபவர்களுக்கு 50 சதவீதம் சலுகை விலையில் நிலம், உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கும் வகையில் தொழில் கொள்கை அமைந்துள்ளது.

கடந்த 10 ஆண்டு காலகட்டத்தில் 6.85 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக புரட்சித் தலைவி அம்மாவால் 2014–ம் ஆண்டு வெளியிடப்பட்ட தொழிற்கொள்கையின் விளைவாக, கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் ரூ. 6.50 லட்சம் கோடி அளவிற்கு புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் எண்ணிக்கை, தொழிற்சாலை பணியாளர்கள் எண்ணிக்கை ஆகியவற்றில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்துக் கொண்டிருக்கிறது.

2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 81 சதவீதம் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.

புரட்சித் தலைவி அம்மாவின் வழிநின்று சாதனைகள் பல படைத்து வரும் எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிடும் இந்த புதிய கொள்கைகளும் சாதனைகள் பல படைத்து சரித்திரத்தில் இடம்பிடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

சிறுதொழிலுக்கு ரூ.13.50 ஆயிரம் கோடி கடன்

தமிழ்நாட்டின் தொழில் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை கொரோனாகால பொருளாதார பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க ‘‘அவசரகாலக் கூடுதல் கடன் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை தமிழ்நாட்டைச் சார்ந்த 3,66,619 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.13.50 ஆயிரம் கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில், தமிழக தொழில் துறை மேம்பாட்டில் 50 ஆண்டுகளாக பெரும் பங்கு வகித்து பொன்விழா கண்டு சாதனை படைத்துவரும் சிப்காட் மற்றும் சிட்கோ நிறுவனங்களின் அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிண்டியில் பொன்விழா நினைவு வளைவு

பொன்விழா கொண்டாட்டங்களின் அடையாளமாக, சிட்கோவின் முதல் தொழில் பூங்காவான கிண்டி தொழில் பூங்காவில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொன்விழா நினைவு வளைவு ஒன்று அமைக்கப்படும் என அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.

200 கோடி ரூபாய் திட்டமதிப்பீட்டிலான 6 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கவும், 150 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டிலான இரண்டு அடுக்குமாடி தொழிற்கூட தொகுப்பு கட்டடங்கள் கட்டவும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பின் புதிய முத்திரை வெளியிடப்பட்டு, இணையதளம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சிப்காட் நிறுவனத்தின் மூலம் மணப்பாறை, மாநல்லூர், ஒரகடம் மற்றும் தர்மபுரி ஆகிய இடங்களில் 3,977 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

உயிரி தொழில்நுட்பப் பூங்கா

இன்று துவக்கப்படும் சிப்காட் புத்தாக்கமையமானது, தொழில் பூங்காக்களில் நவீன ஆய்வு மற்றும் புத்தாக்கங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி, இளம் கண்டுபிடிப்பாளர்களை தொழில் நிறுவனங்களுக்கு மேலும் நெருக்கமாக அழைத்துச் செல்வதில் பெரும் பங்காற்றும். இந்தப் புத்தாக்க மையங்கள், சிப்காட் தொழிற் பூங்காக்களை, உலக தரத்திற்கு மேம்படுத்த, அம்மாவின் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் முக்கிய மைல்கல்லாகும்.

கோயம்புத்தூர் மாநகரில் இன்று துவங்கப்பட்டுள்ள ‘‘டைசல் உயிரி தொழில்நுட்பப் பூங்கா” மூலம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். உயிரி தொழில்நுட்பத் துறை மேம்பாட்டிற்கு, அரசு அளித்து வரும் தொடர் ஊக்கத்திற்கு சான்றாக இந்த தொழில் பூங்கா அமைந்துள்ளது.

முதலீடுகளை ஈர்ப்பதற்கும், பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தை தணிப்பதற்கும் அமைக்கப்பட்ட தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவின் அறிக்கையின்படி, பிற நாடுகளில் இருந்து இடம் பெயர உள்ள முதலீட்டு திட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் மூலமாக 38 துறைகளின் 190 அனுமதிகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனது தலைமையிலான உயர்நிலைக் குழு, ஒவ்வொரு முதலீட்டுத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து, தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. அனுமதிகள் வழங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அவற்றுக்கு உடனுக்குடன் உயர்மட்ட குழு கூட்டத்திலேயே தீர்வு காணப்பட்டு அனுமதிகள் வழங்கப்படுகின்றன. பிரச்சனை வந்தால் முதலமைச்சரே தலையிட்டு விரைவாக தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காலத்தில் ரூ.60,674 கோடி முதலீடு

கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட காலத்தில் மட்டும், 60,674 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,00,721 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை தவிர இன்று 28,053 கோடி ரூபாய் முதலீட்டில் 68,775 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மேலும் 28 புதிய தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இன்று வெளியிடப்பட்டுள்ள, புதிய தொழில் கொள்கைகளின் அடிப்படையில், மேலும் மேம்படுத்தப்பட்ட புதிய வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையும், புதிய ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையும் விரைவில் வெளியிடப்படும். அதுமட்டுமல்லாமல், அம்மாவின் அரசால் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக சிறப்பான அறிவிப்புகள் சிலவற்றை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.

* தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ. 500 கோடியில் மூலதன நிதியம் உருவாக்கப்படும்.

* தகுதிவாய்ந்த தொழில்களுக்கு, முதல் 4 ஆண்டு காலம் வரையில் செயல்பட தேவையான முக்கிய அனுமதிகளுக்கு விலக்களிக்கும் ‘FastTN’ திட்டம். வாகன உற்பத்திக்கு ஊக்கமளிக்க புதிதாக உருவாக்கப்படும் மாதிரி வாகனங்களை பதிவு செய்வது எளிதாக்கப்படும்.”

சிறுதொழில் முதலீட்டுக்கு 3 மடங்கு மானியம்

* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதலீட்டு மானியம் 25 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 50லட்சம் ரூபாய் வரை, என தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இனி, இது மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு 1.5 கோடி ரூபாய் வரை குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு மானியம் வழங்கப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு நிறுவனங்களின் பங்களிப்பாக செலுத்தப்படும் தொகையில் ஆண்டொன்றிற்கு ஒரு பணியாளருக்கு அதிகபட்சமாக 24,000 ரூபாய்க்கு மிகாமல் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மானியமாக அரசு வழங்கும்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு 1949–ல் இருந்து பெரும் பங்காற்றி வரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தினை மேலும் வலுப்படுத்தும் விதமாக 1000 கோடி ரூபாய் நிதியை அரசு வழங்கும்.

அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியது, தொழில் வளர்ச்சிக்காக பின்தங்கிய பகுதிகளில் தொழில் துவங்கியது என சிறப்பாக சாதனை படைத்த பல நிறுவனங்களுக்கு ‘பிசினஸ் டுடே’ விருது வழங்கப்பட்டுள்ளது. மிகுந்த அர்ப்பணிப்பாலும் அயராத உழைப்பாலும் உயர்ந்த சாதனைகள் பல படைத்துள்ள, தொழில் துறையின் ஆணிவேராக விளங்கும் தொழில் முனைவோர் பலருக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருது பெற்ற நிறுவனங்களுக்கும், தொழில் முனைவோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

அதிக வேலைவாய்ப்பு உருவாக்குங்கள்

உங்கள் அனைவரின் பங்களிப்பாலும், அம்மாவின் அரசின் சீரிய திட்டங்களாலும், அனைத்துத் துறைகளையும் போல, தொழில்துறையிலும் வெற்றி நடைபோட்டு சாதனைகள் பல படைத்து வருகிறது தமிழகம்.

இன்று அறிவிக்கப்பட்டுள்ள தொழில் கொள்கையின் பலன்களை முழுமையாக பயன்படுத்தி தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் துவங்கி அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்நேரத்தில் உங்கள் அனைவரையும் நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இன்றையதினம் ஒரு முக்கியமான நாள், எனக்கு மகிழ்ச்சியான நாள். என்னுடைய அரசு நான்காண்டுகள் நிறைவு பெற்று ஐந்தாவது ஆண்டு அடியெடுத்து வைக்கின்ற நாள். இந்த நன்னாளில் உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

மாநில வளர்ச்சியில் உங்களது பங்களிப்பு அளப்பறியது. ஒரு மாநிலம் வளர்ச்சியடைய வேண்டுமென்றால், தொழில் நிறைந்த மாநிலமாக விளங்கவேண்டும். அப்படி தொழில் நிறைந்த மாநிலமாக விளங்குவதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு மிகமிக அவசியம் என்று இந்த நேரத்தில் தெரிவித்து, மிகச் சிறப்பாக இன்று எனது தலைமையிலான அம்மாவின் அரசு தொழில் துறைக்கு முழுமையான வழிகாட்டுதல்களையும் ஆதரவையும் தொடர்ந்து அளித்து, உங்கள் அனைவரின் வெற்றிக்கும் உறுதுணையாக என்றென்றும் இருக்கும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் வரவேற்புரை ஆற்றினார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா நன்றி கூறினார்.

விழாவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ்நாடு அரசின் ஆலோசகர் க.சண்முகம், சிறப்பு விருந்தினர்கள் வேணு ஸ்ரீனிவாசன், டாடா குழுமத்தின் பிரதிநிதி பன்மாலி அக்ரவாலா, பிசினஸ் டுடே நிர்வாக ஆசிரியர் ராஜீவ் தூபே, தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், தொழில் துறை ஆணையர் அனு ஜார்ஜ், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் குமரகுருபரன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் டாரஸ் அகமது, சிட்கோ மேலாண்மை இயக்குநர் கஜலட்சுமி மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *