செய்திகள்

ஊரக புத்தாக்க திட்ட கருத்தரங்கம்: திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி துவக்கி வைத்தார்

Spread the love

திருவள்ளூர், செப். 11–

கிராமப் புறங்களில் தொழில் முனைவோர்களை உருவாக்கும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அறிமுக கருத்தரங்கம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் தலைமை செயல் இயக்குநர் கார்த்திகா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தலைமை செயல் இயக்குநர் கார்த்திகா பேசுகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் கிராமப் புறங்களில் தொழில் முனைவோர்கள், நுண் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் உருவாக்கும் ஓர் முன்னோடித் திட்டமாக ‘‘தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம்’’ உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து துறை அலுவலர்களும் மேற்கண்ட திட்டத்தின் பயன்கள் கிராமப்புற பயனாளிகளை சென்றடையும் வகையில் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.

கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசுகையில், கிராமப் புறங்களில் உள்ள வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாராத தொழில்களில் ஈடுப்படுத்தி தொழில் முனைவோர்களை கண்டறிவதுடன் அவர்கள் தொழில் செய்ய தகுந்த சூழலை உருவாக்கி நிதி வசதிகள் ஏற்படுத்தி தருவதை முக்கிய நோக்கமாக கொண்டதே இந்ததிட்டம். இதன் மூலம் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்தி நிறுவனங்கள், தொழில் முனைவோர் உருவாக வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதுடன் அதற்கேற்ற பயிற்சிகளும் வழங்கப்படும் . திருவள்ளுர் மாவட்டத்தில் முதற் கட்டமாக கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், சோழவரம் மற்றும் கடம்பத்தூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள 198 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கருத்தரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குர் வை.ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *