செய்திகள் வாழ்வியல்

திருவைகுண்டம் வரதராஜபுரம் மயிலேறும் பெருமாள் சாஸ்தா கோவில்

*வழிபட்டால் நீண்ட நாள் தடைபெற்ற திருமணம் நடைபெறும்

*நினைத்த காரியங்கள் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை

மயிலேறும் பெருமாள் சாஸ்தா கோவில், வரதராஜபுரம், திருவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம்.

ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு வழிபாடு நடந்தாலும் இறைவனை நம்பி நம் வேண்டுதல்களை முன்வைக்கிறோம். அது அவரவர் விதியின்படியும் முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணிய விகிதாசாரத்தின் படியும் பலன் கிடைக்கிறது. இதுவே இந்துக்களின் அடிப்படைத் தத்துவம் இது மனிதர்கள் வாழ்க்கையில் நடைமுறையில் கண்ட உண்மை.

எல்லோரும் பிறக்கும் பொழுதும் வெற்று மேனியாகவே வந்து இறக்கும் பொழுதும் வெற்று மேனியாகவே போகின்றனர். வாழும் பொழுது சந்திக்கும் இடர்பாடுகள், கிடைத்த வசதிகளைப் பொறுத்து ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்கின்றனர். நம்மை மீறிய சக்தி ஒன்று இருப்பதை உணர்கின்றனர். எனவே தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இறைவன் இருக்குமிடமான ஆலயத்திற்கு வந்து பிரார்த்தனைகளை முழு மனதோடு சமர்ப்பிக்கின்றனர்.

இப்படிப்பட்ட ஆலயங்களில் பெருமாள் கோவில், சிவன் கோவில், முருகன் கோவில், அம்மன் கோவில், விநாயகர் கோவில் மற்ற தெய்வங்களின் கோவில்கள் அதிகம் உள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கும் தெய்வத்திற்கும் உள்ள சக்தி மகத்தானதாக உள்ளது. அப்படிப்பட்ட வரிசையில் நாம் இன்று அறியப் போகும் கோவில் மயிலேறும் பெருமாள் சாஸ்தா கோவில் ஆகும். இது தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் உள்ள வரதராஜபுரம் என்ற சிற்றூரில் உள்ள திருக்கோவில் ஆகும். இது சுமார் 1000 வருட பாரம்பரியம் கொண்டது.

இந்த தலம் வந்து வழிபட்டால் நீண்ட நாள் தடைபெற்ற திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். நினைத்த காரியங்கள் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. இந்த திருத்தலத்தின் பெருமையும் சிறப்பும் இங்கு சாஸ்தா, முருகன் வேடத்தில் மயில் மீது அமர்ந்துள்ளார். மேலும் இதன் அருகில் பாதாள கன்னியம்மன் அமர்ந்துள்ளார்.

இந்த தலத்தின் வரலாறு மிகவும் உருக்கமாக உள்ளது. இந்த கிராமத்தில் ஏழு அண்ணன்களுக்கு ஒரே தங்கையாக கன்னியம்மாள் இருந்தாள். அழகில் ரதி போன்ற தோற்றமுடையவள். இவருக்கு திருமண வயது நெருங்கியதும் மாப்பிளை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர் அவளது அண்ணன்மார்கள். அந்த நேரம் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். ஒரு ஆங்கிலேய தளபதி இவளைக் கண்டு, மணம் புரிய ஆசை கொண்டு தன் விருப்பத்தினை தெரிவித்தான். அதை அண்ணன்மார்களும் கன்னியம்மாளும் விரும்பவில்லை. மறுப்பு தெரிவித்து, அதை தவிர்த்தனர்.

ஆனாலும் ஆங்கிலேயர் தனது ஆட்களை அனுப்பி கட்டாயப்படுத்தினார். பின்னர் பயமுறுத்தவும் ஆரம்பித்தார். எனவே அண்ணன்மார்கள் தங்கையும் ஆலோசனை செய்து, தங்கள் குல தெய்வமான மயிலேறும் பெருமான் சாஸ்தா கோவில் முன்பு ஒரு பெரிய பள்ளம் ஏற்படுத்தி அதில் கன்னியம்மாளை இறக்கி மூடிவிட்டனர். அந்த இடத்தில் தான் தங்கையின் ஞாபகார்த்தமாக ஒரு கோவில் எழுப்பி கன்னியம்மன் கோவில் அமைத்து வழிபட்டனர். தினமும் இரண்டு கால பூஜை நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திரத்து அன்று இந்த செயல் நடைபெற்றதால் ஒவ்வொரு பங்குனி உத்திரத்தன்றும் தாமிரபரணி ஆற்றின் கால்வாய் நீர் கும்பத்தில் எடுத்து வந்து அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

இந்த கோவிலில், விநாயகர், சுடலை மாடசுவாமி, நாகராஜர், வீரபத்திரர் மற்றும் சாஸ்தாவின் இருபுறமும் சந்திரகலா, புஷ்பகலா என்ற அம்பாள்களும் வீற்றிருக்கின்றனர். தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 1.30 மணி வரையும் மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரையும் கோவில் திறந்து இருக்கும். முக்கியமாக பங்குனி உத்திரம், பௌர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும். இது சேனைத் தலைவர் சமுதாயத்தினரால் நிர்வகிக்கப்படும் கோவில். இக்கோவில் முன்பு ஒரு கால்வாய் ஓடுகிறது. பசுமையான கிராமம். பார்க்க கவர்ச்சியாக இருக்கும் திருக்கோவில். உள்ளே நுழைந்தவுடன் மனநிறைவு தரும் கோவிலாக உள்ளது. பரிசுத்தமாக பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது திருவைகுண்டம் என்ற ஊரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வரதராஜபுரம் என்ற கிராமத்தில் உள்ளது. இங்கு பங்குனி உத்திரத்தின் போது பால்குடம் எடுத்து, சிறுவர்களுக்கு மொட்டை அடித்தல், காது குத்தும் வைபவம் ஆகியவற்றை ஆர்வத்துடன் செய்கின்றனர்.

“மயிலேறும் பெருமான் மக்களைக் காப்பாய்

குயில் கூவு மனை சூழ் நலமான குடியில்

வரதராசபுரக் கிராமம் வரமருள் பரமா

திருவைகுண்டம் பாசானம், வடகால் வடபுறம்

வீற்றவரதா! திடமான நெஞ்சு திகழ வைப்பாய்”

அருள்மிகு மயிலேறும் பெருமாள் சாஸ்தா திருக்கோவில், வரதராஜபுரம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, தூத்துக்குடி மாவட்டம் தொலைபேசி எண். 9364236976, 9894107945

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *