செய்திகள்

திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா

தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்

திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா

* முன் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

* கொரோனா இல்லை என சான்றுடன் வர உத்தரவு

காரைக்கால், டிச.26–

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நாளை காலை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதற்கு வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என சான்றுடன் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சந்நிதி கொண்டு சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கிறார்.

தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு நாளை காலை 5.22 மணிக்கு சனி பெயர்ச்சியாவதை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் செய்யப்படுகிறது.

உற்சவர் சனீஸ்வரபகவான் தங்க காக வாகனத்தில் பிராகாரம் எழுந்தருளச் செய்து, வசந்த மண்டபத்தில் வைத்து சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட உள்ளன.

சனிப்பெயர்ச்சி விழாவிற்காக ஐகோர்ட் உத்தரவுப்படி கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயது கடந்த முதியவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும், நளன் குளத்திற்கு செல்ல அனுமதி இல்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்குள் ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். கோவிலுக்குள் வரக்கூடிய பக்தர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆர்.டி.பி.சி.ஆர் அல்லது ஆண்டிஜன் முறையில், 48 மணி நேரத்துக்கு முன்பு பெறப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழுடன் வர வேண்டியது கட்டாயம். ஏற்கெனவே பதிவு செய்தோர் மட்டுமே 26ம் தேதி மற்றும் 27ம் தேதி வரமுடியும். முன்பதிவு செய்யாத புதியவர்கள் யாரும் வரமுடியாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சனிப்பெயர்ச்சி நாளில் 17 ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சனிப்பெயர்ச்சி விழா பாதுகாப்புக்கு காரைக்கால், புதுச்சேரியை சேர்ந்த 2,200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *