செய்திகள்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் ரூ.2 கோடி நிலம் மீட்பு

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் ரூ.2 கோடி நிலம் மீட்பு

அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

காஞ்சீபுரம், அக்.16 –

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலத்தினை அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. மலை மீதுள்ள இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோவில் அடியில் தாழகோவில் வடக்கு கோபுர மாடவீதியில், பதினெட்டரை சென்ட் வாகன மண்டபத்துடன் கூடிய காலி நிலம் கடந்த 1904-ம் ஆண்டு அலமேலு அம்மாளுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. அந்த நிலத்தை சம்பந்தம், விநாயகசுந்தரம், பாபு ஆகியோர் அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில் 2003-ம் ஆண்டு குத்தகை காலம் முடிவடைந்தது. இதையடுத்து அந்த நிலத்தை ஒப்படைக்குமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால் அந்த நிலம் தங்களுக்கே சொந்தம் என கூறி குத்தகை எடுத்தவர்கள் நிலத்தை ஒப்படைக்க மறுத்தனர். இதனால் 2008-ல் வேலூர் இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தல்படி கோர்ட்டில் கோவில் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

இதனை எதிர்த்து சென்னை ஐகோட்டில் குத்தகைதாரர்கள் 2013ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், சம்பந்தப்பட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என அறிவித்து அந்த இடத்தில் உரிமை கொண்டாடுபவர்களை அகற்றி கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

இதன் அடிப்படையில் வேலூர் இணை ஆணையர் மாரிமுத்து உத்தரவின்படி, காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கி.ரேணுகா தேவி தலைமையில் கோவில் செயல் அலுவலர்கள் ஆ.குமரன், சோ.செந்தில்குமார், மேகவண்ணன், வெங்கடேசன், அறநிலையத்துறை கோவில் நிலங்கள் தாசில்தார் முருகன், கோவில் மேலாளர் விஜயன், ஆய்வாளர் கோவிந்தராஜ், திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீசார் உதவியுடன் ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டனர். பின்னர் அங்கு ‘இது கோவிலுக்கு சொந்தமான இடம்’ என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *