வாழ்வியல்

திங்களூர் கைலாசநாதர் கோவில்: சந்திரனுக்குரிய ஆலயம்

*சோழப்பேரரசர்களால் கட்டப்பட்டது

*1800 வருடம் பழமையானது

*இறைவனை வழிபட திருமணத்தடை நீங்கும் * குழந்தை பாக்கியம் கிடைக்கும் * அறிவுத்திறன் பெருகும்

*மன உளைச்சல், மன அழுத்தம் * குடும்பத்துக்குள் உண்டான சச்சரவு; வேற்றுமைகள் தீரும்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், திங்களூர்

சந்திர கிரகம் பூமியில் இருந்து நான்கு லட்சத்து ஆறரயிரம் கிலோ மீட்டர் தொலை தூரத்தில் இருப்பதாக கணித்து உள்ளனர். அங்கும் மனிதர்கள் சென்று ஆராய்ச்சி செய்து திரும்பி விட்டனர். இந்த கிரகமும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு முறை பூமியைச்சுற்ற 29 1/2 நாட்கள் ஆகிறது.

இந்த திருத்தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திங்களூர் என்ற இடத்தில் உள்ளது. இது சோழப்பேரரசர்களால் கட்டப்பட்டது. 1800 வருடம் பழமையானது.

இங்கு திருநாவுக்கரசர் மூத்த திருநாவுக்கரசர், இளைய திருநாவுக்கரசர் என்று இருவரது சிலைகள் உள்ளன. திங்களூரில் அப்பூதி அடிகளும் அவரது மனைவியும் வசித்து வந்தனர். இருவரும் சிவ பக்தர்கள். அதுவும் தவிர பிறருக்கு உதவியும் தொண்டும் செய்வதையே குறிக்கோளாக கொண்டிருந்தனர். இவர்களுக்கு பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் மூத்த திருநாவுக்கரசர் இளைய திருநாவுக்கரசர் என்று பெயர் சூட்டினார்கள். இவர்களும் மக்கள் சேவையே, மகேசன் சேவை என்று பொது சேவை செய்து பெயர் பெற்றனர். அவர்கள் பெயரில் அன்ன சத்திரம், தண்ணீர் பந்தல், பள்ளிக்கூடம் அமைத்தனர்.

ஒருநாள் இந்த தலத்திற்கு தேவாரம் பாடிய திருநாவுக்கரசர் வருகை தந்தார். அவரை உபசரித்து அப்பூதி அடிகளும் அவர் மனைவியாரும் மகன்களான பெரிய திருநாவுக்கரசரும் சின்ன திருநாவுக்கரசரும் வணங்கி தங்கள் இல்லத்திற்கு வந்து உணவு அருந்த அன்பாய் அழைத்தனர். அதனை ஏற்று அவர்களது இல்லத்திற்கு வந்தார். அவருக்கு சமையல் செய்து வைத்து முடித்த பின்பு, பரிமாறுவதற்கு வாழை இலை கொண்டு வருமாறு பெரிய திருநாவுக்கரசரை அப்பூதி அடிகளின் மனைவி தோட்டத்திற்கு அனுப்பினார். நேரம் அதிகமாகியும் வரவில்லையே என்று அப்பூதி அடிகளும் அவரது மனைவியும் தோட்டத்திற்கு வந்த பொழுது, பெரிய திருநாவுக்கரசர் பாம்பு தீண்டி இறந்து கிடச்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பெரும்புலவரும் சிவனடியாரும் ஆகிய திருநாவுக்கரசர் விருந்துக்கு அழைத்த நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தி, அவர் மனம் நோகக்கூடாது என்பதற்காக, உடனே, பெரிய திருநாவுக்கரசரின் உடலை ஒரு வாழை இலையில் சுற்றி அங்கேயே வைத்து விருந்துக்கு ஒரு வாழை இலையை வீட்டிற்குள் எடுத்துவந்து சமையல் செய்த உணவைப்பரிமாறி திருநாவுக்கரசரை அழைத்தனர். ஆனால் தன் ஞான திருஷ்டியால் நடந்த சம்பவங்களை அறிந்த திருநாவுக்கரசர் அப்பூதி அடிகளிடம் அவர் குழந்தைகளையும் தன் அருகில் வந்து உட்காருமாறு பணித்தார். வேறு வழியின்றி, நடந்த உண்மையைக் கூற அவர்களுடைய சிறந்த விருந்தோம்பலைப் பாராட்டி சந்திரபுஷ்கரணியில் இருந்து நீரை எடுத்து வந்து இறந்து போன பெரிய திருநாவுக்கரசரை உயிர்ப்பித்தார். அனைவரும் ஆச்சரியமும் ஆனந்தமும் கொண்டு நாவுக்கரசரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். ஆனால் பெரும்புலவரும் சிவனடியாரும் இவை அனைத்தும் எம்பெருமான் சிவனுடைய மகிமை என்று விளக்கினார்.

அந்த நாளில் இருந்து இன்று வரை, இந்த தலத்தில் ஒருவர் கூட பாம்பு தீண்டி இறந்தது கிடையாது என்று கூறுகின்றனர். ஏதாவது, விஷக்கடியாக இருந்தாலும் சந்திர புஷ்கர்ணியின் நீரைப்பருக ஒரு வித துன்பமும் நேராது என்பது உண்மை என்கின்றனர்.

எனவேதான் குழந்தைகளுக்கு முதல் அமுது ஊட்ட இந்த திருத்தலம் வந்து திங்களூர் கைலாசநாதர் சன்னதியில் வைத்து பூஜை செய்து ஊட்டும் வழக்கம் உள்ளது. கொஞ்சம் வசதி படைத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதல் அன்னம் ஊட்டும் வைபவத்தை குருவாயூர் சென்று, குருவாயூரப்பன் சன்னதியில் இந்த சடங்கை நிறைவேற்றுவர். ஆனால் இந்த திருத்தலத்தில் இந்த வைபவத்தை விமரிசையாக நடத்துகின்றனர். இது சந்திரனுக்குரிய கோவில் என்பதால், நிலாச்சோறு தரும் இடம் என்கின்றனர். இப்படி செய்ய வேண்டிய நாட்கள், அசுவினி, மிருகசீரிடம், உத்திரம், சுவாதி, திருவோணம், ரேவதி, சதய நட்சத்திரநாட்களாக இருக்க வேண்டும். சந்திர ஹோரையில், சந்திரனையும் பசுவையும் காண்பித்து, வெள்ளிக்கிண்ணத்தில் சாதத்துடன், பால், தேன், நெய் கலந்து ஊட்டினால் அந்த குழந்தைக்கு எந்த வியாதி பாதிப்பும் இருக்காது, அப்படியே வியாதி வந்தாலும் மருந்து கொடுத்தவுடன் உடனடியாக பலன் கிட்டி பூரண நலன் அடைவர் என்கின்றனர். அம்புலியை (சந்திரனை)காட்டி, அன்னம் கொடுத்ததால். ஜலதேவதையின் அருளும், ஔஷதி தேவதையின் அரவணைப்பும் எப்பொழுதும் இருக்கும் என்பது ஐதீகம்.

மூலஸ்தானத்தில் அம்பாளுடன் திருக்கைலாசநாதர் இருக்கிறார். அன்னையின் பெயர் பெரிய நாயகி. வெளி பிரகாரத்தில் சந்திரன் காட்சி தருகிறார். மற்றும், துர்க்கை, தட்ஷிணாமூர்த்தி, மனைவியுடன் சண்டிகேஸ்வரர் ஆகியோர் அம்சமாக காட்சி அளிக்கிறார்கள். இங்கு உள்ள தீர்த்தக்குளத்தின் பெயர் சந்திரபுஷ்கர்ணி ஆகும். ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் விஷேட பூஜை, அபிஷேகம், அர்ச்சனை நடைபெறும்.

மேலும் இந்த திருக்கோவிலில் வந்து இறைவனை வழிபட, திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், அறிவுத்திறன் பெருகும். மன உளைச்சல், மன அழுத்தம், குடும்பத்துக்குள் உண்டான சச்சரவு, வேற்றுமைகள் தீரும். தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றினால், சுவாமிக்கும், அம்பாளுக்கும் வஸ்திரம் அணிவித்து, கோவில் திருப்பணிக்கும் பொருள் உதவி செய்து பூர்த்தி செய்கின்றனர்.

இந்த கோவிலின் நடந்த ஒரு சுவையான சம்பவம் உண்டு. மறைந்த பிரபல கன்னட நடிகர் திரு ராஜ்குமார் சந்தன கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டு காட்டுக்குள் கொண்டு செல்லப்பட்ட பின்பு, அவரது குடும்பத்தினர் அனைவரும் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகினர். அவர்கள் இந்த தலத்தின் பெருமையை அறிந்து, இங்கு வந்து ஒரு யாகம் நடத்தினர். யாகம் முடிவு அடைந்தவுடன் நடிகரும் விடுவிக்கப்பட்டது இந்த தலத்தின் ஈசனின் மகிமை என்று பெருமையுடன் கூறுகின்றனர்.

இங்கு முக்கிய வைபவமாக, மகா சிவராத்திரி, பிரதோஷம், மார்கழி திருவாதிரை,திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், ஆகியவை கொண்டாடப்படுகிறது. தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது.

இந்த கோவில் இந்து அறநிலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போதைய டிரஸ்டி கோவிந்தராஜன் மிகவும் சிறப்பாக இந்த கோவிலைப்பராமரித்து வருகிறார்.

இந்த கோவிலின் அர்ச்சகர் கண்ணன் இங்கு வருகை தரும் பக்தர்களுக்கு நல்லமுறையில் இந்த தலத்தில் சிறப்புகள் பற்றி எடுத்து உரைக்கிறார்.

நஞ்சமும் அமுதமா நயக்கு நாயகன்

செஞ்சடைக் கானகம் செறியும் அம்புலி

விஞ்சிடு பண்ணவர் விருந்து அருந்துறும்

தஞ்சமாம் தானவன் தாள் வழுத்துவாம்.

– சந்திர கவசம்.

கோவில் காலை 6 மணியில் இருந்து பகல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், திங்களூர், தஞ்சை மாவட்டம். 613 204 தொலை பேசி எண்:04362-262499, 9344589244, 9443586453

திருவையாற்றிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *