சிறுகதை

இவர்கள் வித்தியாசமானவர்கள் | ராஜா செல்லமுத்து

Spread the love

வீட்டில் இருந்த படியே மாதாமாதம் பல லகரங்களைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள் தேவியும் திருக்குமரனும்.

இருவரும் கணவன் மனைவி என்றாலும் வியாபார விசயத்தில் இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் அல்ல . இருந்தாலும் தேவி தான் இந்தப் பணம் கொட்டும் தொழிலைத் துவக்கி வைத்தாள் என்பது கணவனுக்குக் கண்கூடு.

எப்படியோ இருந்த குடும்பம் இப்படி வசதி வாய்ப்புகளோடு வாழ்வதற்கு தேவி தான் முதற்காரணமென்பது உறவினர்கள் அனைவருக்கும் தெள்ளத் தெளிவாகவே தெரியும்.

வழக்கம் போல தங்கள் வேலைகளை முடித்துவிட்டு இரவு வசதி வாய்ப்புகளோடு கூடிய பஞ்சு மெத்தைப்படுக்கையில் புரண்டு படுத்த திருக்குமரன் தேவியின் பக்கம் திரும்பினான். குழந்தைகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். மெல்ல மெல்ல அருகில் வந்தவன் தேவியின் தலைகோதினான்.

‘‘என் செல்லமே.. உன்னைய நான் கல்யாணம் பண்றதுக்கு ரொம்பவே குடுத்து வச்சுருக்கனும் . எப்பிடியிருந்த இந்த குடும்பத்த நீ.. எப்படி ஆக்கிட்ட.. நீ.. உண்மையிலேயே எனக்கு கெடச்ச வரம்.. நீ.. என் தேவதை..’’ என்று தேவியை உச்சி மோந்தான் திருக்குமரன்.

‘‘ ஐஸ் .. ஐஸ் ..’’ என்று ஈர எச்சில் உதட்டில் தேவி சொன்னாள்.

‘‘இல்ல தேவி பிராமிஸ்..’’ என்று அவளின் தலையைத் தொட்டான்.

‘‘ம்..- நம்பிட்டேன்..’’ என்றாள் தேவி.

‘‘ஏன்.. தேவி.. ஒனக்கு மட்டும் எப்பிடி இந்த யோசனை வந்துச்சு..’’என்று திருக்குமரன் கேட்டார்.

‘‘வெரி சிம்ப்ள்ங்க.. எப்பவுமே மத்தவங்க செய்றத நாமளும் ஆட்டு மந்தை மாதிரி செய்யக் கூடாது.. அவங்க செய்றதுக்கும் நாம செய்றதுக்கும் எப்பவுமே ஒரு வித்தியாசம் இருக்கணும். அத நான் செஞ்சேன் அவ்வளவு தான்.. மத்தவங்கள விட நாம வித்யாசப் படணும்னா..! நாம ஏதாவது வித்தியாசமா பண்ணனும் அத தானே செஞ்சேன்..’’ என்று தேவி சொல்ல

‘‘நீ.. அறிவாளி..’’ என்று பசக் என ஒரு முத்தம் கொடுத்தான் திருக்குமரன்

‘‘சும்மா தானே.. சொன்னீங்க..?’’ என்று தேவி சொன்னாள்.

‘‘எதச் சொல்ற..?’’

‘‘நான் அறிவாளின்னு நீங்க சொன்னத..’’

‘‘ஏய்…. இல்லப்பா.. நீ.. உண்மையிலேயே அறிவாளிதான் எல்லாரும் யோசிக்கிற மாதிரி நீ.. யோசிக்கலையே..! – அதச் சொன்னேன்..’’ என்று திருக்குமரன் சொல்ல

‘‘நீங்க சொல்றது உண்மை தாங்க..எல்லார மாதிரியும் நாமளும் செய்யக் கூடாதுன்னு சொல்றதுக்கு ‘விஜிபி’ குரூப் ஒரு உதாரணம்ங்க..’’ என்று தேவி சொன்னாள்.

‘‘நீ.. எதச் சொல்ற..?’’

‘விஜிபி கோல்டன்’ பீச்ச சொல்றேன்..’’ என்றாள் தேவி.

‘‘எப்பிடி..?’’

‘‘ஆமா..எல்லாரும் தான் நிலம் வாங்குனாங்க.. ஆனா ‘விஜிபி’ கடலுக்கு அருகில் நிலத்த வாங்குனாங்க பாருங்க. அங்க தான், அவங்க புத்திசாலித்தனம் இருந்துச்சு. அப்பிடித் தாங்க.. மத்தவங்க எல்லாம் பொழுதுபோக்குக்கும் விளையாட்டுக்கும் செஞ்சிட்டு இருந்த வேலைய நான் இத ஏன் வியாபாரமாக்கக் கூடாதுன்னு நினைச்சேன். அது மாதிரியே..! செயல்படுத்தினேன். இன்னைக்கு வெற்றியடைச்சு நிக்கிறோம்..’’ என்று தேவி சொன்னபோது தேவியின் தெளிவான பேச்சைக் கேட்டுத்திணறிப் போய் நின்றான் திருக்குமரன்.

‘‘இதுக்குத்தான் ஒன்னைய அறிவாளின்னு சொன்னேன்..’’ என்ற போது தேவி இரவு விளக்கை அணைத்தாள்.

‘‘வேண்டாங்க.. குழந்தைங்க இருக்காங்க..’’ என்று தேவி சொன்னாலும் அவளின் சிணுங்கல் சம்மதமென்றே தோன்றியது.

இரவு நிலா மறைந்தது. இறுதியில் சூரியன் சுட்டெரித்து நின்று பகலானது.

‘‘சரி நாம வேலைய ஆரம்பிக்கலாமா..?’’ என்று தேவி சொல்ல செல்போனை எடுத்து ஸ்டாண்ட்டில் வைத்து பேச ஆரம்பித்தனர்

‘‘நீங்க.. குறைவான விலையில நல்ல ஜவுளி எடுக்கணுமா..? உடனே போங்க ‘கனகா ஜவுளி ஸ்டோர் சென்னை’..’’ என்று தேவி பேச

‘‘ஆம்..இந்த ஜவுளிக் கடைக்கு போய்ப்பாருங்க.. – உங்க எண்ணம் போல வண்ணங்கள் கிடைக்கும். ஒரு முறை கனகா ஜவுளிக் கடைக்குப் போய் பாருங்க..’’ என்று அவரும் பேசினார். –

‘‘அசைவ உணவுக்கு ‘ஆறு படையப்பன் ஹோட்டல்’ ‘சைவத்திற்கு சர்வம் ஓட்டல்’..’’ என்று தங்கள் செல்போனில் பேசிப்பேசி அப்லோட் செய்து கொண்டிருந்தனர். இது அத்தனையும் காற்றில் ஏறி எல்லோர் கருத்திலும் கலந்தது.

செல்போன வச்சிட்டு டிக் டாக், கேம், எப்.பி, டுவிட்டர், வாட்ஸ் அப்ன்னு நேரத்த வெட்டியா செலவழிக்கிறவங்களுக்கு மத்தியில அந்த செல்போன வச்சு, விளம்பரம் பேசி சம்பாதிக்கிற தேவியும் திருக்குமரனும் ரொம்பவே வித்தியாசமுங்க..’’ என்று ஆட்கள் பேசினர்.

நம்பிக்கைக்கும் உத்திரவாதத்திற்கும் உகந்தது ‘கொரில்லா சிமெண்ட்’..’’ என்று பேசிக் கொண்டிருந்தனர் இந்த வித்தியாசத் தம்பதிகள்.

ஆம். இவர்கள் வித்தியாசமானவர்கள் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *