செய்திகள்

தென்பெண்ணை ஆற்றில் களைகட்டிய தீர்த்தவாரி

Spread the love

விழுப்புரம், ஜன. 20–

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட உற்சவர் சிலைகளுக்கு புனித தெளிக்கப்பட்டன. விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

தட்சணா பினாகினி என போற்றப்படும் புண்ணிய நதியாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றில் தை மாதம் முதல் நாளில் இருந்து 5 தினங்களுக்கு அனைத்து நதிகளும் தத்தம் தீவினையை போக்கிக் கொள்ள தென்பெண்ணையில் சேர்கிறது என்பது ஐதீகம். இதைத் தொடர்ந்து தென்பெண்ணையாற்றில் ஆண்டுதோறும் பொங்கல் விழா நிறைவாக தை மாதம் 5-ஆம் தேதி ஆற்றுத் திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டும் ஆற்றுத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள அரகண்டநல்லூர், கல்பட்டு, எல்லீஸ்சத்திரம், பிடாகம், பேரங்கியூர், சின்ன கள்ளிபட்டு, மணலூர் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கண்டமங்கலம், வளவனூர், சிறுவந்தாடு, கோலியனூர், பஞ்சமாதேவி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் உள்ள உற்சவர் சுவாமிகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மாட்டு வண்டி, டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களில் வைத்து ஊர்வலமாக தென்பெண்ணை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு, சுவாமிகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டு, புனித நீர் தெளிக்கப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், ஐம்பது ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பிடாகம், பேரங்கியூரில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவுக்கு விழுப்புரம், மரகதபுரம், கண்டம்பாக்கம், ஆணத்தூர், கரடிப்பாக்கம், சாலாமேடு உள்ளிட்ட ஊா்களில் இருந்து உற்சவர் சிலைகள் அலங்காரத்துடன் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன. இந்தப் பகுதியில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல, அரகண்டநல்லூர், எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணை ஆற்றிலும், விக்கிரவாண்டி அருகே வீடூர், சின்னதச்சூர், சங்கராபரணி ஆற்றிலும் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

ஆற்றுத் திருவிழாவையொட்டி, விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், கூடுதல் எஸ்.பி. சரவணக்குமார் மேற்பாா்வையில் 1,400 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர் பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில், உற்சவர் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதற்காக சுற்றுவட்டாரப் பகுதி கோயில்களில் இருந்து உற்சவர் சிலைகள் அலங்கரித்து ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்

தென்பெண்ணை நதியில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆண்டு தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இதன்படி திருவண்ணாமலையில் இருந்து உற்சவர் சிலைகள் பரதம் தாங்கிகளில் புறப்பட்டு நேற்று மதியம் 12 மணிக்கு மணலூர்பேட்டை வந்தடைந்தார். விநாயகர், அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் அருணாச்சலேஸ்வரரை எதிர்கொண்டு தென்பெண்ணைக்கு அழைத்துச் சென்று தீர்த்தவாரி வைபவம் நடந்தது. வசந்த பந்தலில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் எழுந்தருளி மண்டகப்படி, மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *