நாடும் நடப்பும்

10 ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சியில் தமிழக பொருளாதாரம் கண்ட அபார வளர்ச்சி

ஜெயலலிதாவின் செயல்திட்டம் வெற்றி நடை போடும் தமிழகம்

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்! அண்ணா தி.மு.க. வலுவான கூட்டணியை மீண்டும் உருவாக்கி புதிய சாதனையாய் மூன்றாவது முறையாக தொடர்ந்து வெற்றி என்ற இலக்கை அடைய களமிறங்கி விட்டனர்.

எம்.ஜி.ஆர் கட்சியை துவக்கியவுடன் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை பிடித்தார். நடுவே பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியையும் சந்தித்ததை அறிவோம்.

பிறகு ஜெயலலிதா எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அண்ணா தி.மு.க.வின் தலைமை பொறுப்பை ஏற்றார். தமிழக மக்களின் இதயத்தில் இடம் பிடித்தார். தேர்தல் வெற்றி தோல்வியை அடுத்தடுத்து சந்தித்தார்.

ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக பணியாற்றியபோது மக்கள் நலன் மீது அக்கறையுடன் செயல்பட்டவர் ஆவார். மொத்தம் ஆறு முறை 1991 முதல் ஜெயலலிதா தலைமையில் தான் அண்ணா திமுக தமிழகத்தில் தேர்தலை சந்தித்தது. அதில் நான்கு முறை வெற்றியை பெற்று முதல்வராக பணியாற்றிய பெருமை அவருக்கு உண்டு.

இடையே இரண்டு முறை வென்ற திமுகவின் ஆட்சியின்போது கருணாநிதியே முதல்வராக பொறுப்பில் இருந்தார். உடன் இருந்த ஜூனியர் அமைச்சர் ஸ்டாலின் பிறகு சென்னையின் மேயராக பணியாற்றினார், 2006–ல் தான் துணை முதல்வராக பொறுப்பில் இருந்தார்.

ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ‘தினமும் ஒரு போராட்டம்’ என்ற உறுதியுடன் திமுக ஆட்சியின் அவலங்களை தோலுரித்து காட்டி திமுக ஆட்சியின் தவறுகளை தட்டிக் கேட்டு தமிழக மக்களின் இதயத்தில் இடம்பிடித்த வரலாறு மறுக்கவோ மறக்கவோ முடியாத ஒன்றாகும்.

இதையெல்லாம் மனதில் கொண்டே மீண்டும் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பை ஏற்க முடிந்தது.

ஆட்சியில் இருந்தபோது பின்தங்கிய தூசி படிந்த தமிழக கிராம மக்களின் நலன் காக்க‘ அவர்களின் ‘கிராம தேவதை’ என்பது போல் தான் ஜெயலலிதா, அவர்களின் நலன் காக்க பல்வேறு நல திட்டங்களை வகுத்து அவற்றை நல்ல முறையில் செயல்படுத்தியும் மொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கும் உந்துதல் தந்தார்.

தாய் தன் பிள்ளைகளின் நலன் காக்க அயராது பாடுபடுவது போல செயல்பட்ட ஜெயலலிதாவை தமிழகம் ‘அம்மா’ என்று மனமகிழ்வுடன் அழைத்து என்றென்றும் வாழ்த்தியது.

பள்ளி மாணவர்களுக்கும் இளம்பெண்களுக்கும் அவர் காட்டிய விசேஷ கவனத்தால் இன்று தன் காலில் சுயமாய் நின்று வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ளும் சக்தியை பெற்று அவர்களது குடும்பத்து பாரத்தையும் சுமக்கும் வலுவையும் பெற்றுள்ளனர்.

இப்படிப் பல தமிழக குடும்பங்களில் சுமைதாங்கிகளை உருவாக்கி ஜெயலிதா காலத்தின் கட்டாயத்துக்கு தலைவணங்கி மரணத்தை எதிர் நோக்கிய நாட்களிலும் தமிழகத்தில் நல்லாட்சி தொடர அவர் ஏற்படுத்திய மந்திரிசபை அவர் காட்டிய வழியில் நல்லாட்சியை தொடர்ந்ததை கண்ட திருப்தியோடே மறைந்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியல் சதி தலைவிரித்தாட பல்வேறு குழப்ப அரசியல்கள் அரங்கேற அதிலிருந்து உருவான ‘பீனிக்ஸ்’ பறவைபோல் மீண்டெழுந்த அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் எடப்பாடியாரை முதல்வராகவும் பன்னீர்செல்வத்தை துணை முதல்வராகவும் மற்றும் நிதியமைச்சராகவும் கொண்டு ஜெயலிதா நியமித்த மந்திரிசபை புதிய எழுச்சியுடன் செயல்பட ஆரம்பித்தது.

கட்சிப் பிளவு, எதிர்க்கட்சிகளின் சதி அரசியல், தேசிய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் என பல்வேறு சிக்கல்களை எல்லாம் சமாளித்து மீண்டும் வலுவுள்ள பலமான கட்சியாக உயர்ந்து தற்போது மீண்டும் தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க புதிய வேகத்துடன் செயல்பட ஆரம்பித்துவிட்டது.

2019–ல் பாராளுமன்ற தேர்தலில் அண்ணா திமுகவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சறுக்கல் அண்ணா தி.மு.க.வினரின் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பித்த கட்டத்தில் ஏற்பட்ட கோளாறு, அதை சரிசெய்ய 2020–ல் கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க இணைந்து செயல்பட நல்ல சந்தர்ப்பமாக மாறியது.

தொடர்ந்து 10 வருடங்களாக தமிழகத்தின் நிதி நிலையை நன்கு உணர்ந்த அனுபவசாலி துணை முதல்வர் பன்னீர்செல்வமும் எல்லா அரசியல் சதிகளையும் இன்முகத்துடன் சமாளித்த அரசியல் அனுபவ முதிர்ச்சி பெற்று விட்ட எடப்பாடியாரும் மீண்டும் ஆட்சியில் அமர வாக்கு கேட்டு தமிழகமெங்கும் பிரச்சார பயணத்தை மேற்கொள்ள தயாராகி விட்டனர்.

தங்களது தேர்தல் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக சமர்ப்பிக்க அதற்கு இறுதி வடிவம் தந்து வரும் நிலையில் அரசியல் சாமர்த்தியத்துடன் புதுப்புது அறிவிப்புகளை தர துவங்கிவிட்டனர்.

* வருடம் ஆறு சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசம்;

* மாதம் ரூ.1500 குடும்ப தலைவிகளுக்கு நிதி ஆதாரம்

இந்த இரு அறிவிப்புகளையும் தேர்தல் அறிக்கைக்கு முன்னோடியாய் அறிவித்து விட்டனர். இது சர்வதேச மகளிர்தின அறிவிப்புகள், அண்ணா திமுகவின் கொள்கை முழக்கம்!

கடந்த ஆண்டு 2020–ல் கொரோனாவை எதிர்த்து போராட முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்தது.

அந்நேரத்தில் தினக்கூலி சாதனைகளின் நலன் காக்கவும் அன்றாட பணிகளுக்கு செல்ல முடியாத நிலையில் பல குடும்பங்கள் உணவுக்கு வழியின்றி தவித்துக் கொண்டு இருந்ததை எல்லாம் கண்டு ரூபாய் ஆயிரம் ரொக்கமும் தமிழகமெங்கும் நிறுவப்பட்ட அம்மா உணவகங்களில் உணவும் இலவசமாக வழங்கியதால் தமிழகம் நிம்மதி பெருமூச்சு விட்டது.

ஜெயலலிதா வழியில் மக்கள் நல ஆட்சி தொடர்கிறது என்று தமிழகமே நம்பிக்கை பெற்றது. இயற்கை இடர் ஏற்பட்ட போதும் உடனடி நிவாரணம் தரப்பட்டது. பொங்கல் தொகுப்பாக புத்தாடைகள், கரும்பு மற்றும் பொங்கல் பொங்க பண்டங்கள் தந்ததுடன் ரூ.2,500யையும் ரொக்கமாக தந்து உதவியது.

தமிழக பொருளாதாரம் இப்படி பல்வேறு நலத்திட்டங்களுக்கு உதவிட செழிப்பாக வைத்திருந்த பெருமை கடந்த 10 ஆண்டு அண்ணா திமுகவின் சாதனையாகும்.

ஜெயலலிதா வகுத்த விஷன் 2023 கோட்பாடு தமிழகத்தில் பிரம்மாண்ட வளர்ச்சி காண வைத்தது. இன்று தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருக்கும் சாதனை மாநிலம் ஆகும். அதற்கான முழு புகழும் கடமை, கடமை, கடமை என்று தமிழகத்தின் வளர்ச்சியே தனது உயிர்மூச்சாக கடமையாற்றிய ஜெயலலிதாவையே சாரும்.

அவரது சீரிய திட்டங்களால் தமிழகம் செழிப்பான பொருளாதாரமாக உயர்ந்துவிட்டது. எந்த வழியும் போட கூட வழியின்றி ஜிஎஸ்டி அமுலுக்கு வந்த பிறகும் தமிழகம் சுயமாய் தனது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் நிதி ஆதாரத்துடன் கம்பீரமா நடைபோடுகிறது.

இத்தகைய நிதிநிலை பெற்றிருப்பதால் ஸ்டாலின் தேர்தல் உறுதியாக குடும்பத்துக்கு ரூ.1000 அறிவித்தாலும் அதை உண்மையில் தர முடியுமா? அதை செய்வாரா? அல்லது முந்தைய ‘சுரண்டல்’ ஆட்சியை நினைவுபடுத்தும் பணமோசடிக்கான முதல் அடி எடுத்து வைக்கிறாரா? எது எப்படியாக இருந்தாலும் ஸ்டாலினால் அதை, அதாவது குடும்பத்தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் மாதம் ரூ.1000 தர முடியும். அதை வழங்கும் அட்சய பாத்திரமாக இருக்கிறது ஜெயலலிதா கண்ட தமிழகத்தின் பொருளாதாரம்.

ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? என்பதை தமிழகம் ஏப்ரல் 6 முடிவு செய்யும். அதற்கு முன்பு தமிழகம் பல்வேறு அறிவிப்புகள், நலத்திட்டங்கள் வரும் என்றும் எதிர்பார்க்கிறது. அவற்றை உறுதியாக வழங்கும் சக்தியை உருவாக்கி இருப்பது அண்ணா தி.மு.க. ஆட்சி தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *