சினிமா செய்திகள் முழு தகவல்

‘ஈ எறும்புக்குக் கூட… தீங்கு நினைக்காத ஆத்மா…!’

ஆண்களே பொறாமைப்படும் அழகுள்ளவர் ஜெமினிகணேசன். அலை, அலையான தலை முடி, அளவான நெற்றி. கிளிமூக்கு. முத்துப்பல் வரிசை. வடிவான முகம். யோகாசனம் 16 வயதிலிருந்து செய்து வந்தபோதும் நான் செய்ய முடியாத, சிரமமான ஆசனங்களையெல்லாம் தன் வாலிபப் பருவத்தில் செய்து காட்டியவர்.

அதேபோல கடுமையான உடற்பயிற்சியும் செய்து,  ‘சரஸ்வதி சபதம்’ படத்தில் பீமனைப் போல தோற்றமுள்ள ‘மல்லனை’ தலைக்கு மேல் தூக்கிப் போடும் காட்சியில் நடித்து, ஏ.பி.என்.(ஏ.பி.நாகராஜன்), அவர்களே மூக்குமேல் விரல் வைக்கும்படி செய்தவர்.

சினிமாவுக்கு நான் வருவதற்கு முன்னால், சென்னைக்குப் புறப்படுவதற்கு முன்னால் நடிகர்களின் படங்களை ஓவியமாக வரைந்து அனுப்பியவர்களில் ஒருவர் ஜெமினிகணேசன். அவர் தன்னுடைய லெட்டர் பேடில் தனிப்பட்ட முறையில் என் ஓவியத்தைப் பற்றிப் பாராட்டி, ‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பது போல வருங்காலத்தில் நீ பெரிய ஓவியனாக வாழ்த்துகள்’னு எழுதி ஆங்கிலத்தில் ‘ஆர்.கணேஷ்’ என்று கையெழுத்துப் போட்டு -அழகான அவரது புகைப்படம் ஒன்றையும் இணைத்து அனுப்பியிருந்தார்.

சினிமா உலகத்தையே அன்று வென்று விட்ட மகிழ்ச்சி எனக்கு. ஊரைச் சுற்றி கம்பீரமாக ராஜநடை போட்டேன்.

காலம் மாறி, ஓவியன் நடிகனாக அவதாரம் எடுத்த பின்னர், ‘கந்தன் கருணை’யில் நான் முருகனாக நடித்தபோது சிவன்- பார்வதியாக ஜெமினி -சாவித்திரி நடித்தனர். அந்தச் சூழலில் பேச வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஏ.பி.என்., ‘சரஸ்வதி சபதம்’ என்ற சொந்தப் படம் எடுத்தபோது ஜெமினி மாமாவுடன் பேச வாய்ப்புக் கிடைத்தது.


பெரிய நடிகர்ங்கிற பந்தா கிடையாது

‘அம்புலிமாமா’ பத்திரிகையை பல ஆண்டுகளாக நடத்தி வரும் நாகி ரெட்டியாரின் 1966 – ஜூலையில் சந்தமாமா பப்ளிகேஷன்ஸ் சார்பில் ‘பொம்மை’ என்ற இதழைக் கொண்டு வந்தது. அதில் முதன்முதல் என் பேட்டி வந்தது. அந்தப் பேட்டியை படித்த ஜெமினி மாமா, ‘டேய் சிவகுமாரா… பொம்மை பேட்டில உன் முகத்தை நீயே வரைந்த ‘செல்ஃப் போர்ட்ரைட் (Self Portrait) பாத்து பிரமிச்சுப் போயிட்டேன். ‘லைன் டிராயிங்’ல (Line Drawing) கன்னத்தில வேர்வை துளி நிக்கற மாதிரி வரைஞ்சிருக்கியே, சூப்பர்!’ அப்படின்னாரு. தான் ஒரு பெரிய நடிகர்ங்கிற பந்தா இம்மியளவு கூட அவர்கிட்ட பார்க்க முடியாது.


பி.ஆர். பந்துலு ‘கங்கா கெளரி’ன்னு ஒரு புராணப்படம் மைசூர் பிரிமியர் ஸ்டுடியோவுல எடுத்தாரு. அதுக்காக பெங்களூரு வரைக்கும் ஜெமினி மாமாவோட விமானத்தில போய், அங்கிருந்து 90 மைல் மைசூர் கார்ல போவோம்.

திடீர்னு என் கை பிடிச்சு ரேகை பார்க்க ஆரம்பிச்சுட்டாரு. ‘டேய்! மாப்பிள்ளே -பொம்பளைங்ககிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இருந்துக்க – அப்படின்னாரு.

‘நீங்க மட்டும், பிருந்தாவனத்து நந்தகுமாரன் மாதிரி கோபிகா ஸ்திரிகளோட விளையாடுவீங்க. நான் மட்டும் யோக்கியனா இருக்கணுமா?’-ன்னேன்.

ஒளிக்கத் தெரியாத உயர்ந்த உள்ளம்

‘‘டேய், டேய்.. வேண்டாண்டா. இப்ப இருக்கிற பெரிய ஹீரோக்கள்ல நான் படிச்சு பட்டம் வாங்கினவன். உலக வரலாற்றை இன்னும் படிச்சிட்டிருக்கிறவன். அன்டர் த சன் (Under The Sun) எனக்குத் தெரியாத விஷயமில்லே. ஆனா, பெண்கள் விஷயத்தில் மட்டும் கடவுள் எனக்கு ஒரு வீக்னஸ் வச்சிட்டான். நீ மாட்டிக்காதே!’ன்னாரு.

ஜெமினி மாமா சிவன் வேடம், நான் விஷ்ணு வேடத்தில் அப்படத்தில் நடித்தோம். மாமா எப்போதும் அசைவம்தான் சாப்பிடுவார். நான் கடவுள் வேடம் போடும் சமயம். அசைவம் சாப்பிட மாட்டேன் என்று ஏ.பி.என் அவர்களுக்கு வாக்குக் கொடுத்திருந்தேன்.

‘இதோ லெக் பீஸ், கடி’ லிவர் பீஸ் புடி

படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பு. ‘டேய் மாப்பிள்ளே’ படமே முடிஞ்சு போச்சு. இன்னிக்கு ஊருக்குப் போறப்பவாவது அசைவம் சாப்பிடலாம் வா!’ன்னு கூப்பிட்டாரு.

அவருக்கு அடுக்கடுக்கா அசைவ அயிட்டங்கள் கேரியர்ல வந்திருந்திச்சு. சுஜாதா ஓட்டல் எவர்சில்வர் பிளேட் பெரியது. பல ஆண்டுகள் பயன்படுத்தி ஷைனிங் எல்லாம் போனது.

‘என்னோடயே சாப்பிடலாம் வா!’ன்னு அவர் பிளேட் முன்னாடி உட்கார வச்சு இந்த ‘லெக் பீஸ்’ சாப்பிடுன்னு எடுத்து என் கையில குடுத்தாரு.

‘லிவர் பீஸ்’ ஒண்ணு எடுத்தாரு. ஒரு வாய் கடிச்சிட்டு ‘டேய், செம டேஸ்ட் இந்தா!’ன்னு மீதிய என் வாயில ஊட்டி விட்டாரு. ‘பிறந்த 10-வது மாதம் அப்பாவை இழந்தவன் நான். ஒரு வேளை அப்பா இருந்தா இப்படித்தான் பாசம் காட்டியிருப்பாரோ!’ன்னு நினைக்க கண்கள் ஓரத்தில நீர் கட்ட சபரி கொடுத்த பழத்தை ராமர் சாப்பிட்ட மாதிரி -சிலிர்ப்போட சாப்பிட்டேன்.

சதாபிஷேகம்: ஓவியமே பரிசு

ஜெமினி மாமாவோட 80-வது பிறந்த நாள். சதாபிஷேகம். கலைஞர் திருமண மண்டபத்தில் நடந்தது. துணைவியோடு போயிருந்தேன்.

அவருக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று பிள்ளைகளிடம் கேட்டேன். ‘உங்களைப் பார்க்கும் போதெல்லாம், ‘டேய், மாப்பிள்ளே! என் ஓவியத்தை குடுடா!’ன்னுதானே கேட்டிருக்காரு. உங்க பெயிண்டிங்கை விட சிறந்த பரிசு எதுவுமே இருக்க முடியாது!’ன்னு சூர்யா சொல்ல, பார்சல் செய்து எடுத்துப் போனோம். க்யூ வரிசை. எனக்குப் பின்னால் கவிஞர் வைரமுத்து நின்று கொண்டிருந்தார். ‘என்ன பிரதர் பரிசு தரப்போறீங்க?’ன்னு கேட்டாரு.

‘அதுதான் சஸ்பென்ஸ். இதுக்குள்ள என்ன இருக்குன்னு மாமா சரியா சொன்னா குடுப்பேன். இல்லை எடுத்திட்டுப் போயிடுவேன்னு சொன்னேன்.

‘காதல் மன்னன்’ என்று பட்டம் பெற்று கோகுல கிருஷ்ணனாக வாழ்ந்த மாமா, -பாப்ஜியுடன் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார்.

‘மாமா, இதுக்குள்ளே என்ன இருக்கு. சொல்லுங்க பார்க்கலாம்!’ என்றேன்.

‘வேற என்னடா, என்னோட ஓவியம்தான்!’ அப்படின்னாரு. பிரிச்சுக் கையில கொடுத்தேன். அப்படி ஒரு புன்சிரிப்பு. டாக்டர் கமலா செல்வராஜ் ஓடி வந்தார். படத்தை வாங்கிப் பார்த்தார். அவரும் அழகாக வரைவார்.

ஈ, எறும்புக்குக் கூட தீங்கு நினைக்காத ஆத்மாம்மா உங்கப்பா!’ என்றேன். நெகிழ்ச்சியில் கண்களை துடைத்துக் கொண்டார்.

எழுத்து, தொகுப்பு: வீ. ராம்ஜீ

மேலும் படிக்க….

கூடப் பொறக்கலை; ஆனா ஆழமான சகோதர பாசம்…! – செளகார்ஜானகி

ஆல் ரவுண்டர்; ஜென்டில் மேன்; அவரைப் புடிக்காம இருக்க முடியாது! – ஏவிஎம் சரவணன்

கண்களில் மட்டுமே காதலை காட்டி கண்ணியம் காத்தவர்

‘காதல் மன்னன்’: பிளாஸ்பேக்!

ஜெமினியோடு திரை பிரபலங்களின் சுவையான பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *