செய்திகள் முழு தகவல்

நடிகர்களில் முதல்வன் – எம்.ஜி.ஆர்! பிரம்மிப்பின் உச்சம் பொன்மனச் செம்மல்

எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள் வேண்டும் என்ற சிரத்தையுடன் எடுத்ததால்தான் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்ட பின்பும் அவர் மறைந்து ஒரு தலைமுறை இடைவெளி ஆன பிறகும்,, தமிழ் சினிமாவின் மின்னும் முதல் கதாநாயகனாக திகழ்கிறார் என்பதே சான்று! அரசியலிலும் அப்படியே!

இன்று இவ்வளவு தொழில்நுட்பம் பெருகிய காலகட்டத்திலும் எம்.ஜி.ஆரின் “நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன்’ என்று எட்டிப்பிடிக்க முடியாத சாதனையை சுமார் 50, 60 வருடங்களுக்கு முன்பே படைத்து சென்றிருக்கிறார்.

புராணக் கதைகளைப் போல அவருடைய வரலாற்று சம்பவங்களை கேட்கும்போதும் படிக்கும்போதும் எப்படி ஒரு மனிதன் தான் சந்தித்த ஒவ்வொரு நபரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஒவ்வொருவரிடமும் பழகும் போதும் தன் நிலையில் இருந்து மாறாமல் செயலாற்றினார் என்பதே மிகப்பெரிய அதிசயம் பிரமிப்பின் உச்சம்.

மண்வெட்டி கையில் எடுப்பார்…

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன் வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக ” நான் ஏன் பிறந்தேன்?” என்ற தலைப்பில் 1970ம் ஆண்டு வாக்கில் தொடர்ந்து எழுதி வந்து கொண்டிருந்தார்.

அதில் தன் தாயை தனக்கு அறிவுரை கூறியதாக நினைவு கூர்ந்து ஒரு கருத்தை எழுதி இருப்பார்.

அந்த அறிவுரை:

“பிறரை அழிக்க பள்ளம் வெட்டினால், வெட்டும் மண்வெட்டி வெட்டும் நபரைப் பார்த்துக் கொண்டிருக்கும்”. இதன் கருத்து என்னவென்றால் பிறருக்கு எதிராக செயல்படும் துரோகச் செயல்கள் ஒருநாள் நம்மை பழிவாங்கும் என்ற கருத்து அவர் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது.

தனக்கு வழிகாட்டிய இந்தக் கருத்து உலகத்துக்கே பறைசாற்ற வேண்டும் என்று ஆர்வம் கொண்ட எம்ஜிஆர் ” தலைவன் ” என்ற திரைப்படத்தில்

“அறிவுக்கு வேலை கொடு

பகுத்தறிவுக்கு வேலை கொடு “

என்ற பாடலில் தன் கருத்தை வலியுறுத்தி உள்ளார்.

அந்த அற்புத வரிகள்:

‘‘மண்வெட்டி கையில் எடுப்பார் சிலர்

மற்றவர்க்கு குழி பறிப்பார் அது

தன் பக்கம் பார்த்திருக்கும்

என்பதை தானறிய மறந்திருப்பார்’’

என்று தன் கொள்கையை பாடல் ஆட்சியில் சமுதாயத்திற்கு வழங்கியவர் மக்கள் திலகம்.

நான் ஆணையிட்டால்…

புரட்சித்தலைவரின் பிரம்மாண்ட பாடலில் ஒன்று” எங்க வீட்டுப் பிள்ளை ” திரைப்படத்தில் இடம்பெற்ற ” நான் ஆணையிட்டால் ” பாடல். அந்தப் பாடலில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சுட்டிக்காட்டுகிறார் கவிஞர் வாலி.

அந்தப் பாடலில் ஒரு சரணத்தில்

” சிலர் ஆசைக்கும் தேவைக்கும்

வாழ்விற்கும் வசதிக்கும் ஊரார்

கால் பிடிப்பார்;

ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை

அவர் எப்போதும் வால் பிடிப்பார்

எதிர்காலம் வரும் என் கடமை வரும்

இந்த காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்

ஒரு நீதியிலே புதுப் பாதையிலே…

இந்த வரிகளைப் படித்த மக்கள் திலகம் முகம் சற்று மாறிப் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். எம்ஜிஆர் அவர்களே குழப்பத்துடன் பார்த்துள்ளார்.

சிறிது நேரம் பிறகு பேசிய புரட்சித்தலைவர் ” சிலர் (1965 இல் படம் வெளியான ஆண்டின் நிலை) காமராஜரை காக்கை என்று மேடையில் தவறாக பேசி வருகிறார்கள். இந்தப் பாடலை கேட்கும் ரசிகர்களும் மக்களும் காமராஜரை தான் நாமும் குறிப்பிடுகிறோம் என்று தவறாக நினைக்கக் கூடும். எனவே இந்த வார்த்தையை மாற்றுங்கள் ” என்று கேட்டு இருக்கிறார். அதை மாற்ற சொன்ன பிறகு

எதிர்காலம் வரும் என் கடமை வரும்

இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பேன் “

என்று மாற்றி எழுதினார் வாலி. பாடலும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

கண்ணை நம்பாதே…

நினைத்ததை முடிப்பான் திரைப்படத்தில் வரும் ” கண்ணை நம்பாதே…” இன்றும் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் ஆக வலம் வரும் மிக அற்புதமான பாடல். இந்தப் பாடலை எழுதிய மருதகாசி ஒரு சரணத்தில்

” பொன் பொருளை கண்டவுடன்

வந்த வழி மறந்து விட்டு

தன் வழியே போகிறவர் போகட்டுமே

என் மனதை நான் மறவேன்

என் உறவை நான் மறவேன்

எதுவான போதிலும் ஆகட்டுமே “

இதைப் படித்துப் பார்த்த மக்கள் திலகம், மருதகாசியைப் பார்த்து

“வந்த வழி மறந்து விட்டு தன் வழியே போகிறவர் போகட்டுமே என்று எழுதி இருக்கிறீர்கள்! ஒருவர் ” தன் வழியே ” ஒருவர் போகிறார் என்றால் அதை தவறு என்று எப்படி சொல்ல முடியும். அந்த வழியில் நல்ல வழியாக கூட இருக்கலாமே; ‘தன் வழியே’ என்ற வார்த்தைக்கு மாற்று வார்த்தை வேண்டுமே ‘ என்று கேட்டிருக்கிறார்.

இதன் பிறகுதான் மருதகாசியின் ” தன் வழியே போகிறவர் போகட்டுமே ” என்பதை ” கண் மூடி போகிறவர் போகட்டுமே என்று ” மாற்றி எழுதி தந்தார்.

இதை மக்கள் திலகம் ஏற்றுக்கொள்கிறார். ஒருவர் கண்மூடி போகும் போது கண்டிப்பாக அவர் தவறான பாதையில் தான் செல்வார் என்பதில் ஐயமில்லை என்று.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு தமிழ் மீதும் திருக்குறள் மீதும் உள்ள ஞானத்திற்கும் சில உதாரணங்கள்:

” இன்று போல் என்றும் வாழ்க” என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை பத்திரிகையாளர் நாகை தருமன் நினைவு கூறுகிறார்.

அந்தத் திரைப்படத்தில்

நாட்டை காக்கும் கை இது

வீட்டை காக்கும் கை

என்ற பாடலில் நடிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருந்தது. இடைப்பட்ட நேரத்தில் ” அண்ணா ” நாளிதழில் கழகத் தொண்டர்களுக்கு ” நெஞ்சோடு நெஞ்சம் ” என்ற தலைப்பில் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார் எம்ஜிஆர்.

அந்தப் பாடல் காற்றில் காட்சி படி மாணவர்களுக்கு திருக்குறள் பாடம் சொல்லித் தருவது போல் இருக்கும்.

“தமிழன்றும் ஏர்ப்பின்னது உலகு; ஆதனால்

உழந்தும் உழவே தலை “

என்ற குறல் கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தது. காட்சியில் நடிக்க வந்தவர், கரும்பலகையில் எழுதியிருந்த திருக்குறளை பார்த்தவர் அதில் உள்ள பிழையை சுட்டிக் காட்டி,

” மூ.வ. (டாக்டர் மு.வரதராஜன்) எழுதிய திருக்குறள் தெளிவுரையிலிருந்து அந்தத் திருக்குறளை திருத்தி எழுதுங்கள் என்று சொன்னார் என்றால் அவரின் திருக்குறள் பற்றிய தெளிவு பிரமிப்பின் உச்சம் தானே!

மனிதாபிமானத்தின் பிரம்மிப்பு…

மதுரை சுந்தர பாரதி ஒரு சிறந்த தமிழ் கவிஞர். இவர் தொழுநோயால் பெரிதும் பாதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்றவர். அப்போதைய புரட்சித்தலைவர் அரசு வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தது. இதுகுறித்து 1978 இல் கவிஞர் சுந்தர பாரதி அன்றைய தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு விண்ணப்பித்த ஒரு கடிதத்தில்

“ஆட்சியினர் ஆதரித்தாலும் பணத்தை காட்சிதரும் நோயினருக்கு காட்சிதரும் மாட்சிமிகு தொண்டுக்கே ஆக்குவேன் சொந்தமா யானேதும் உண்டு களிக்கக் கொள்ளேன்.ஓ’’!

என மனம் திறந்து குறிப்பிட்டார்.

1979 ஜனவரி 15 நாளில் வள்ளுவர் தினத்தன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் முதல்வர் எம்.ஜி.ஆர்., சுந்தர பாரதிக்கு பரிசளிக்க வந்தபோது , மேடைக்கு தொழுநோய் பிடித்த கவிஞரை அழைத்துவந்த கவிஞரின் செயலர் எம்.ஆர். நரசிம்மன், புரட்சித்தலைவரிடம்

” கவிஞர் சுந்தர பாரதி தேசபக்தர் சுப்பிரமணிய சிவாவின் பிரதம சீடர் ” என்று அறிமுகப்படுத்திய உடன் கவிஞரை கட்டித்தழுவி பரிசளித்த போது எல்லோரும் வியப்படைந்தனர். வாலி எம்.ஜி.ஆரை பற்றி கூறிய கருத்து எம்.ஜி.ஆரை தெளிவாய் படம்பிடித்துக் காட்டும்.

“மனிதர்களில் எத்தனையோ நடிகர்கள் உண்டு;

நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன் நீதான்.

வாழ்க எம்.ஜி.ஆர். புகழ் அதை வளர்க்க வேண்டிய பொறுப்பு நம்முடையது என சபதம் ஏற்போம்.

தொகுப்பு: எம்.ஸ்டீபன் ரபேல் (தரமணி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *