வாழ்வியல்

சென்னையில் நாட்டு மருந்துகளுக்கு மக்கள் தரும் அமோக ஆதரவு

இன்று பல்வேறு சமூக சிக்கல்களின் விளைவாக, நோய்களின் பரிணாமம் வெவ்வேறு வகைகளில் கிளைவிட்டு பரவுகிறது. அதை எதிர்கொள்ள,

சென்னையிலேயே நாட்டு மருந்துகளுக்கு என்று சில புகழ்பெற்ற இடங்கள் உள்ளன.

பாரிமுனை, ராசப்பா செட்டி தெரு: பிள்ளையார் கோவில்ல சுண்டல் வாங்க நிக்கிறவங்க மாதிரி, ஒரு கடையை சுத்தி கூட்டம். அது, 1888ல் ஆரம்பிக்கப்பட்ட, ராமசாமி செட்டி நாட்டு மருந்துக் கடை. இலைகள், பட்டைகள், குச்சிகள், உலர் பழங்கள், விதைகள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவையோடு அங்கு கூடி இருந்தனர்.

அந்த கடையின் நிர்வாகி கேசவனிடம் பேசி, தெரிந்துகொண்டது:– அந்த கடை, ஐந்து தலைமுறைகளை கண்டது. மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்தும் கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்தும், நாட்டு மருந்து பொருட்களை தருவிக்கின்றனர். கடை ஊழியர்கள், சாப்பிட கூட நேரம் இல்லாமல் பறந்து கொண்டிருக்கின்றனர்.

அடுத்து அதே தெருவில் உள்ள, கந்தசாமி செட்டி நாட்டு மருந்து கடை நிர்வாகி… ‘எங்களோட கடை, 1937ல் துவங்கப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளாக, நாட்டு மருந்துகளை பத்தின விழிப்புணர்வு பெருகிட்டு வருது. இணையம், வலைதளங்கள், தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் தான், இந்த விழிப்புணர்வுக்கு காரணம்.

ஆனா, 20 ஆண்டுகளுக்கு முன்னால, படிப்படியா நாட்டு மருந்து மேல இருந்த நம்பிக்கை குறைஞ்சு, ஆங்கில மருந்துகள் மேல மோகம் வந்துச்சு. அப்புறம், அதனால உண்டான பக்க விளைவுகளை பார்த்ததும் கொஞ்சம் கொஞ்சமா பழைய வரவேற்பு வந்திட்டு இருக்கு.

தென்மாவட்டங்கள்லே இருந்து ஆவாரம் பூ, கோரைக்கிழங்கு, வல்லாரை, ஆமணக்கு வேர், வெட்டி வேர், சீந்தல் பொடி, நிலவேம்பு, சிறுகுறிஞ்சான், நாவல் கொட்டை உள்ளிட்ட மூலிகைகளும்; கேரளாவில இருந்து, சுக்கு, மிளகு, ஏலக்காய், தசமூலம், நெருஞ்சி, வல்லாரை, வில்வம் உள்ளிட்டவற்றையும்; அதிமரும், மஞ்சிரட்டி வேர், கடுக்காய், நெல்லி, சித்தரத்தை, அஸ்வகந்தா, ஓமம், சதகுப்பை உள்ளிட்ட மூலிகைகளை வடமாநிலங்கள்லே இருந்தும் வாங்குறோம். அதோட பேரீச்சை, நெல்லிக்காய் மரப்பா, கடுக்காய் மரப்பா, பேல் மரப்பா, சால்ட் பிஸ்தா உள்ளிட்ட உலர் பழங்களையும் விற்கிறோம்’ என்றார்.

மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள, டப்பா செட்டி கடை நிர்வாகியிடம் பேசினோம். ‘எங்ககிட்ட மூலிகைகள் மட்டும் இல்லாம, சந்தனம், மஞ்சள், குங்குமம், பன்னீர், வரகு, தினை உள்ளிட்ட பூஜைப் பொருட்களும் உண்டு. நாங்க வியாபாரி மட்டும்தான்; மருத்துவர் இல்லை. வாடிக்கையாளர்கள் என்ன கேட்கறாங்களோ அதை கொடுக்கிறோம்’ என்றார்.

மேற்கு மாம்பலம் – ஆர்யகவுடா தெரு, கே.கே.நகர் – அம்மன் கோவில் தெரு, திருவல்லிக்கேணி – பைகிராப்ட்ஸ் சாலை உள்ளிட்ட, சென்னையின் எல்லா பகுதிகளிலும் நாட்டு மருந்துக் கடைகள் நிறைந்து இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *