நாடும் நடப்பும்

கொரோனாவின் புதிய பாதிப்பு உஷார்!

கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் அதன் புதுப்பிக்கப்பட்ட வெளியீடாக ‘பிறழ்ந்த’ அதாவது Mutated பாதிப்பு உலகெங்கும் பீதியை கிளப்பி வருகிறது. இங்கிலாந்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதுடன் உலகெங்கும் பரவ ஆரம்பித்து வருவதால் லண்டன் சர்வதேச விமான சர்வீஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டது.

இந்தியா உட்பட பல நாடுகளில் இங்கிலாந்திலிருந்து வந்த பயணிகளுக்கு இந்த புது பரிமாணத்தினால் பாதிப்பு தெரிந்துவிட்டதால் பல விமான பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இப்பகுதியில் இருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.

பிரிட்டனில் லண்டன் மாநகரத்திலும் தென்கிழக்கு இங்கிலாந்திலும் கடுமையான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

டிசம்பர் 2020-ல் கண்டறியப்பட்ட வேற்று வடிவமான வியுஐ–-202012/01 மொத்தம் 23 மாற்றங்களைக் கண்டுள்ளது. இவற்றில், ‘என்501ஒய்’ என்னும் புரத மாறுபாடானது மிகவும் எளிதில் பரவக் கூடியதாக உள்ளது. நவம்பர் முதல் இந்த மாறுபட்ட புதிய வடிவம் பரவ ஆரம்பித்திருக்கலாம் என்றும் பிரிட்டனில் கொரோனா அதிகளவில் பரவிவருவதற்கு இந்த வைரஸின் புதிய வடிவம்தான் முக்கியக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

மாதிரி ஆய்வுகளின் அடிப்படையில், இந்தப் புதிய மாறுபாட்டின் தொற்றும் வேகம் 70% அதிகம் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது முதல் நிலை ஆய்வு என்றும் இந்தப் புதிய தொற்று பரவ ஆரம்பித்தால், உலகளவில் ஆயிரம் பேரில் நான்கு பேர் பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு இருக்கிறது என்றும் நோய் முன்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் எச்சரித்துள்ளது. எனினும், நோயின் தீவிரத்திலோ அல்லது மறுதொற்றுக்கான வாய்ப்பிலோ இதுவரை எந்த மாற்றங்களும் கண்டறியப்படவில்லை.வைரஸின் புரதப் பகுதியில் உருவாகியிருக்கும் மாற்றங்களானது கொரோனா தடுப்பூசிகளிலும் புதிய தேவைகளை உருவாக்கியுள்ளன. தடுப்பூசியால் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பாற்றல் வைரஸின் புரதங்களில் மாற்றங்களை உருவாக்குகிறது. வைரஸ் வெவ்வேறு விதமான புரத மாற்றங்களை அடைகிறபோது, தடுப்பூசிகளுக்கு மேலும் வீரியம் தேவைப்படுகிறது. அதன் காரணமாக, தடுப்பூசிகளால் ஏற்பட்ட விளைவுகளைக் கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தையும் இந்தப் புரத மாறுபாடுகள் ஏற்படுத்தியுள்ளன.

இப்படி அன்றாடம் பல லட்சம் கிருமிகள் நம் பூமிக்கு அச்சுறுத்தலாகவே இருக்கிறது. பல ஆயிரம் கிருமிகளில் சில கிருமிகளே மனிதனை கொன்று விடும் தன்மையை பெற்றிருக்கிறது.

இப்படி ஒரு அச்சுறுத்தல் வரும் என்பதை எதிர்பார்த்தே பல ஐரோப்பிய நாடுகளில் தீவிரமான கண்காணிப்பு ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நோய் வருமுன் காக்கப்பட வேண்டிய உயிரைப் பற்றிய ஆய்வுகள் பல உலகெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

‘ஐஸ்லாண்ட்’ என்ற சிறிய நாட்டில் கொரோனா கிருமியினால் பாதிப்படைந்தவர்கள் அனைவரின் மாதிரியையும் பெற்று, அதன் சிறு, சிறு மாற்றங்களை கூட மிகத் துல்லியமாக கண்காணித்து வருகிறார்கள், அந்நாட்டு ஆய்வாளர்கள். இந்த புது மாற்றலாக வெளிவந்துள்ள தற்போதைய கொரோனா வைரசின் தன்மையை முன்பே எதிர்பார்த்து அதை பற்றிய எச்சரிக்கையை உலகிற்கு முன்பே அறிவுறுத்தலாக விவரித்து விளக்கம் தந்துள்ளார்கள்.

புதிய ரக வைரசின் தாக்கம் துவங்கி விட்டதை தமிழகம் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டது. அதேபோல் நாடெங்கும் விழிப்புணர்வு வந்துவிட்டதால் புது ரக நோயினால் பெரிய சேதம் இருக்காது என நம்புவோம்.

எது எப்படியோ கொரோனா தொற்றின் வீரியம் குறைந்ததாக தெரியவில்லை. ஆகையால் நாம் நமது சமுதாய விலகலையும் முகக்கவசம் அணியும் அவசியத்தையும் மறந்துவிடாமல் கடைப்பிடிப்பதே ஆரோக்கியமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *