நாடும் நடப்பும்

திஷா விவகாரம் சொல்லும் பாடம்

நாடே பார்த்து அதிர்ந்த டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் அரசியல்வாதிகளின் கைவரிசை இருக்கிறது என்று பாரதீய ஜனதா கட்சியினர் கூறி வந்தாலும் சமூக வலைதளங்களின் உதவி பெரிதாக இருந்தது என்பதை நாடே அறியும்.

பலமுறை பல்வேறு சந்தர்ப்பங்களில் யாருடைய தலைமை அழைப்பு ஏதுமின்றி ‘ திடீர் ‘ என ஒரு பெரும் கும்பல் கூட பெரும் கலவரமாக மாறி, பலவித விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் அரங்கேறி விடும் அபாயத்தை பார்த்துள்ளோம்.

அந்த பட்டியலில் முன்னணியில் இருப்பது ‘அரபு வசந்தம்’ என்று அழைக்கப்படும் கலவரமாகும். டெல்லியிலும் இளம் மாணவி ‘ நிர்பயா ‘ வன்கொடுமை சம்பவத்திற்குப் பிறகு போராட்ட சங்கமத்தை கண்டது.

அதுபோன்றே சென்னை மெரினாவிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி ‘ திடீர் ‘ போராட்டம் வெடித்ததை நம் கண் முன்னே கண்டுள்ளோம்.

இவையெல்லாம் எப்படி நடைபெறுகிறது? நிச்சயம் ஒரு சில இளைஞர்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் எதேச்சையாக போராட்டத் தகவலை பகிர அது சுனாமியாக உருவெடுத்து கண் மூடி திறப்பதற்குள் பெரும் கலவரமாக மாறி விடுகிறது.

இதைத் தடுப்பது அவசியம் தான், காரணம் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்ற நிலைப்பாட்டிலிருந்து அன்றாட வாழ்வில் பொதுமக்களின் நடமாட்டத்தை தடை செய்வது சரியாகாது.

தற்போதைய விவசாயிகள் போராட்டத்திற்கும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருக்கும் 22 வயது மாணவி திஷா ரவிக்கும் என்ன சம்பந்தம்?

குடியரசு தின நாள் போராட்டத்தின் பின்னணியில் திஷா பகிர்ந்த ‘டூல்கிட்’ முக்கிய காரணம் என்று டெல்லி நீதிமன்றத்தில் பெங்களூரில் இருந்து திஷாவை கைது செய்து வந்த காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

திஷா எந்த கட்சியையும் சார்ந்தவர் இல்லை! கலவரவாத சக்திகளுடன் தொடர்பு கொண்டவரும் இல்லை! ஆனால் இப்படி ஒரு ‘ டூல்கிட்டை’ பகிர அது ஒரு பயங்கர கலவரமாக மாறும் சக்தியை பெறுமா?

‘டூல்கிட்’ (Toolkit) என்பது ஒரு தகவலை பற்றிய முழு விபரத் தகவல் தொகுப்பு ஆகும். அப்படி அவர் தொகுத்து இருந்தது பல்வேறு செய்தித் தளங்களில் இருந்த தகவலைத் தவிர வேறு ஏதும் இருந்திருக்கவும் முடியாது. காரணம் அவர் வெளியே பயணித்து தகவல் திரட்டியதாக ஆதாரங்கள் இல்லை.

இவர் தகவலை பகிர்ந்ததும் விவசாய தலைவர்களுடனுமில்லை! ஸ்வீடன் நாட்டு இயற்கை பாதுகாப்பு போராட்டப் புகழ் கிரெட்டா தன்பர்க்குடன் மட்டுமே.

டுவிட்டரில் தகவலை பகிர்ந்து விட்டு அதை டெலீட் அதாவது அழித்தும் உள்ளார் என்பதே குற்றச்சாட்டு.

நமது அரசியல்வாதிகள் தொண்டர்களை நேரிடையாக தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதை நாம் பார்த்திருக்கிறோம், அதன் பின் விளைவுகளை அனுபவித்தும் இருக்கிறோம். ஆனால் இதுவரை அப்படி எழுப்பப்படும் பல்வேறு சர்ச்சைக்குரிய செயல்பாடுகளை தடுக்க உரிய சட்டத்திட்டம் இல்லாத நிலையில் கணினி யுக பகிர்வுகளில் இருக்கும் சாதக பாதகங்களை எப்படி வரையரை செய்ய இருக்கிறது இந்திய சட்டத்துறை?

டெல்லி சைபர் கிரைம் பிரிவு திஷா ஒரு பயங்கரவாத கும்பலுக்கு தொடர்பு கொண்டு தூண்டுதல் சக்தியாக மாறி இருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறியே சிறைபிடித்து அடைத்து வைத்திருக்கிறார்கள்.

இந்த நொடியில் கூட பல லட்சம் அவதூறு தகவல்கள், தேசத்தை துண்டாடக் கூடிய இன, மத, தூவேச தகவல்கள் பரவிக் கொண்டு இருப்பதை அறிவோம். ஆனாலும் அதை நேரடியாக போராட்டமாக வெடிக்காததால் அதைப்பற்றி கவலைப்படுவதேயில்லை!

பிரதமர் மோடி இளம் தலைமுறை திறன்மிகு சமுதாயமாக வளர வேண்டும் என்று கூறி வருவதை ஏற்றுத்தானே தானும் ஒரு வகையில் மூன்று மாத விவசாயிகள் போராட்டத்தைப் பற்றிய தகவல் களஞ்சியத்தை கிரெட்டா தன்பர்க்குடன் பகிர்ந்து இருக்க வேண்டும்! அப்படி ஒரு பார்வையுடன் இச்சம்பவத்தை பார்ப்போமேயானால் 22 வயது இளம் பெண்ணின் மனக் குமுறலைப் புரிந்து கொள்ளாமல் அவருக்கு அநீதி இழைக்கிறோமோ? என்ற அச்சக் கேள்வியும் எழுகிறது.

நம் கல்வித் துறையில் சமுதாய வலைதள விவகாரங்கள் பற்றிய பாடத்தை எந்த வகுப்பில் இருந்து சொல்லித் தருவது? எதையெல்லாம் சொல்லித் தருவது? போன்ற எந்த பாடத்திட்ட வரையறையையும் செயல்படுத்த வழிகாட்டாமல் மாணவர்களை’ கடலில் குதித்து தாங்களே நீந்த கற்றுக் கொள்ள ‘ வைக்கும் நிலையை ஏற்படுத்தி இருப்பது போல் தான் நவீன தொலைத்தொடர்பு வசதிகள் இன்றைய இளைஞர்களின் கையில் கிடைத்திருக்கிறது.

இனியும் தாமதிக்காமல் ஆரம்பப் பள்ளி பாடத்திட்டத்திலேயே யார் யாருடன் எப்படி பேசுவது? எந்த தகவல்களை பகிரலாம் ? என்பது போன்ற தகவல்களை பாடமாக கற்றுத் தர வேண்டிய அவசியத்தை உணந்தாக வேண்டும். அதை அதிவேகமாக செயல்படுத்தவும் வேண்டும்.

ஆன்லைனில் சிறுவயதிலேயே படிப்பை மேற்கொள்ளும் மாணவ மாணவியர் அதன் சாதக பாதகங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தால் எது தவறு என்பது புரியாது அல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *