சிறுகதை

தன்மானம் | ஆர்.ஹரிகோபி

போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்த நாற்சந்தி சிக்னலில் சிவப்பு விளக்கு எரியத் தொடங்கியதும் தனது காரை நிறுத்தினான் சாரங்கன்.

இனி பச்சை விளக்கு தெரிவதற்கு குறைந்தது மூன்று முதல் ஐந்து நிமிடங்களாவது ஆகும் என்பதால் காரின் என்ஜினை அணைத்தான்.

வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக நின்றவுடன் வண்ணமயமான பலூன்கள், சிறிய விளையாட்டு பொம்மைகள், டிஷ்யூ பேப்பர், ஊதுபத்தி போன்றவைகளை விற்பதற்கு சிறுவர்களும் பெண்களும் இடையிடையே ஊடுருவினர். நின்றிருந்த கார்களுக்கிடையே வயதான ஒரு பெரியவர் கைகளில் நான்கைந்து ஊதுவத்தி பாக்கெட்டுகளை விசிறி போல விரித்து காண்பித்தப்படி, ‘‘ஐயா, ஒரு பாக்கெட் பத்து ரூபாய், வீட்டுக்கு வாங்கிட்டு போங்க சார், பூஜைக்கு வாங்கிட்டு போங்கம்மா. இதை நீங்க வாங்கி உதவி செஞ்சா நானும் சீக்கா இருக்கிற என் பொஞ்சாதியும் ஒரு வா சோறு சாப்பிட முடியும்’’ என்று ஒவ்வொரு காரின் அருகேயும் சென்று உடல் மெல்ல நடுங்க ஏறக்குறைய கெஞ்சிக் கொண்டிருந்தார்.

அவரது ஏழ்மையை அவர் உருவமும் அணிந்திருந்த உடைகளுமே பறைசாற்றின. சுமார் அறுபது வயதிருக்கும். அணிந்திருந்த நைந்து போன சட்டையில் பல்வேறு டிசைன்களில் பொத்தல்கள். குழி விழுந்த கண்கள். சீப்பின் கட்டளைக்கு அடிபணியாத கலைந்து போயிருந்த தலைமுடி.

எப்போது பச்சை விளக்கு எரியுமோ என்று சிக்னலையும் இடையிடையே பரபரப்பாக பார்த்துக் கொண்டிருந்தார். அருகே இருந்த நடை பாதையில் ஏழ்மையின் இயலாமை காரணமாக வயது அதிகமாக தோன்றிய பெண்மணி, அவரது மனைவியாக இருக்க வேண்டும். அது போன்ற இன்னும் நிறைய ஊதுவத்தி பாக்கெட்டுகளை தன் முன்னே பரப்பி வைத்துக் கொண்டு தளர்ந்து அமர்ந்திருந்தார்.

சாரங்கன் நிறைய முறை இந்தக் காட்சிகளை வண்டியுடன் சிக்னலில் நிற்கும் போது பார்த்திருக்கிறான். ஆனால் இதுவரை வாங்கியதில்லை. சில சமயம் அவனது வண்டியின் அருகே வரும்போது சிக்னல் கிளியர் ஆகிவிட்டிருக்கும். இன்று அதிக நேரம் சிக்னலில் நிற்க வேண்டியிருந்ததால், அந்தப் பெரியவர் அவனது காரின் அருகே வந்து, ஊதுவத்திகளை காண்பித்து கெஞ்சத் தொடங்கினார்.

அது பிராண்ட்டட் ஊதுவத்தியில்லை. வாசனை சென்ட் ஸ்ப்ரே செய்யப்பட்ட மலிவான ஒரு லோக்கல் பிராண்ட். அதனால் தான் ஒரு பாக்கெட் பத்து ரூபாய்க்கு விற்க முடிகிறது. சாரங்கனுக்கு அந்த பெரியவரை பார்க்க பரிதாகமாக இருந்தது. பிள்ளைகள் இல்லாத, அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்களால் புறக்கணிக்கப்பட்ட தம்பதிகளாக இருக்கலாம். அந்தப் பெரியவரின் கெஞ்சலையும் நோயால் பீடிக்கப்பட்டு தளர்ந்து போய் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணியின் அவதியையும் பார்த்தப்பின் சாரங்கனின் இதயத்தில் ஒரு விவரிக்க முடியாத சங்கடம் முள்ளாய் தைத்தது. அதே நேரம் எதற்குமே உதவாத அந்த தரமற்ற ஊதுவத்திகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு கொண்டு போகவும் மனம் மறுத்தது.

பெரியவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டதால் சட்டென்று நூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்து அந்த பெரியவரிடம் கொடுத்தான்.

முகம் பிரகாசமான பெரியவர் விவரிக்க இயலாத சந்தோஷத்துடன் பணத்தை வாங்கிக் கொண்டு பத்து பாக்கெட்டுகள் கொண்ட ஒரு பேக்கை நீட்டினார். சாரங்கன் அதை வாங்காமல், ‘‘பெரியரே, ஊதுவத்திகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் எனக்கு வேண்டாம்’’ என்றான்.

பெரியவர் முகத்திலிருந்து சந்தோஷ ரேகைகள் கண நேரத்தில் காணாமல் போயின. கையிலிருந்த அந்த நூறு ரூபாய் தாளை சாரங்கனின் கையில் திணித்தப்படி சொன்னார்.

‘‘சார் பிச்சை எடுக்கறத அவமானமாக நினைச்சுதான் இந்த ஊதுவத்திகளை வித்து மானத்தோட கால் வயிறோ, அரை வயிறோ சாப்பிடறோம். உங்களோட தாராள மனசு எங்களை தர்ம சங்கடமாக்குது. நீங்க ஊதுவத்திகளை வாங்கிக்காம பணத்தை மட்டும் தந்தால் எங்களுக்கு பிச்சை எடுக்கிற உணர்ச்சி தான் மேலோங்குமே தவிர உழைச்சு சாப்புடற அந்த மன நிறைவு கிடைக்காது சார். மன்னிச்சுக்கோங்க சார், நீங்க ஊதுவத்தி பாக்கெட்டுகளை எடுத்துக்கிட்டா மட்டுமே நான் உங்களிடமிருந்து பணத்தை வாங்குவேன். இல்லையென்றால் எனக்குப் பணம் வேண்டாம்…’’

உடல் ஊனமே இல்லாதவர்கள் கூட பிச்சை எடுத்து உண்பதில் உள்ள சுகத்தை கண்டு அதையே நிரந்தரத் தொழிலாக கொண்டுள்ள மனிதர்களுக்கிடையே தன்ளாத வயதிலும் உழைப்பின் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயில் மட்டுமே மனநிறைவுடன் உயிர் வாழ்வேன் என்ற கொள்கையில் உறுதியாய் இருக்கும் அந்தப் பெரியவரின் தன்மான உணர்வைக் கண்டு சிலிர்த்து போனான் சாரங்கன். அவன் மனதில் அந்தப் பெரியவர் உயர்ந்து நின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *