போஸ்டர் செய்தி

தமிழகத்தில் வெற்றிடம் இல்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு

Spread the love

விக்கிரவாண்டி தொகுதியில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்

* தேர்தலில் தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்கள்

* உண்மை, தர்மம் வென்றிருக்கிறது

* அண்ணா தி.மு.க.வுக்கு மக்கள் நற்சான்றிதழ்

தொடர்ந்து அண்ணா தி.மு.க. கூட்டணியே வெற்றியை குவிக்கும்

எம்.ஜி.ஆருக்கு இணையாக எந்த ஒரு தலைவரும் திரை துறையிலிருந்து வர முடியாது

ஸ்டாலின் எண்ணங்களையெல்லாம் மக்கள் தவிடுபொடியாக்கி விட்டார்கள்

விக்கிரவாண்டி, நவ. 8–

தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பதை நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவு மூலம் மக்கள் நிரூபித்து காட்டியிருக்கிறார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இனி தொடர்ந்து அண்ணா தி.மு.க. கூட்டணி தான் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறும் என்றும் முதல்வர் உறுதிப்பட கூறினார்.

தி.மு.க.வுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துவிட்டார்கள். ஸ்டாலின் எண்ணங்களை எல்லாம் மக்கள் தவிடு பொடியாக்கிவிட்டனர் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து விழுப்புரம் வடக்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நேற்று மாலை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத் தேர்தலின் வெற்றி எவ்வாறு இருக்கும் என்று தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய திருநாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு என்று பிரித்துக் காட்டிய தேர்தல் இந்த இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளையும், பொய் மூட்டைகளையும் அவிழ்த்துவிட்டு, நிறைவேற்ற முடியாத திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவோம் என்று மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றார். சாலையில் விளையாடிக் கொண்டிருக்கக்கூடிய குழந்தைக்கு மிட்டாயைக் கொடுத்து ஏமாற்றுவது போல நிறைவேற்ற முடியாத புதிய, புதிய கவர்ச்சியான அறிவிப்புகளை அறிவித்து மக்களை ஏமாற்றி பெற்ற வெற்றி என்று நான் குறிப்பிட்டேன். அதற்கு ஸ்டாலின் அண்மையில் ஒரு பேட்டியில் நாடாளுமன்றத் தேர்தலில் மிட்டாய் கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றதாக முதலமைச்சர் தெரிவித்தார், ஆனால் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் முதலமைச்சர் அல்வா கொடுத்து வெற்றி பெற்றாரா என்று கேட்டார். அல்வா கொடுத்து வெற்றி பெறவில்லை, விக்கிரவாண்டி, நாங்குநேரி வாக்காள பெருமக்கள் மிகப்பெரிய அல்வாவை ஸ்டாலினுக்குக் கொடுத்துவிட்டார்கள். அது தான் நடந்த உண்மை.

உண்மை, தர்மம் வென்றது

தி.மு.க.வின் பொய்ப் பிரச்சாரம் இந்தத் தேர்தலில் எடுபடவில்லை. உண்மையும், தர்மமும் நிலைநாட்டப்பட்டுள்ளது. நீதி வென்றது. உண்மையைப் பேசினோம், வெற்றியைக் கொடுத்தீர்கள். இடைத் தேர்தலில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தீர்கள், மிகப் பெரிய வெற்றி. தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கின்ற அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் திரும்பிப் பார்க்கின்ற அளவிற்கு இந்த இரண்டு தொகுதிகளும் வெற்றியைத் தந்தன.

ஆகவே ஸ்டாலினின் உங்களின் பொய்ப் பிரச்சாரம் எப்பொழுதும் எடுபடாது. என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள், தவறுதலாக பல வார்த்தைகளைக் குறிப்பிடுகின்றீர்கள், அது நா தவறியும் வரலாம், இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் நிலை தடுமாறிப் பேசுகின்ற நிலையைத் தான் எங்களுடைய துணை ஒருங்கிணைப்பாளர் இங்கே சுட்டிக்காட்டினார். அடுத்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று இப்பொழுது பலர் புறப்பட்டு விட்டார்கள். இந்தத் தேர்தல் வெற்றியைப் பார்த்தும் அவர்களுக்கு இப்படி ஒரு எண்ணம் வருகிறதா என்கின்ற சந்தேகம் எங்களுக்கு வருகிறது. இது சாதாரண வெற்றியா? இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி மக்கள் அளித்திருக்கின்றார்கள். இதனைப் பார்த்தும், சிலர் நான் கட்சியை தொடங்குவேன் என்கின்றனர். சிலர் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். அது யார்? என்பது மக்களுக்கே தெரியும்.

இது தொழிலா?

சில நாட்கள் இங்கேயும், சில நாட்கள் வெளியிலேயும் இருப்பார்கள், எங்கிருப்பார்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். 67, 68 ஆண்டு காலம் வேறு தொழிலில் இருந்துவிட்டு இப்பொழுது இதை தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அரசியல். இரவு, பகல் பாராமல் உழைப்பவர்களால் தான் மக்களின் நன்மதிப்பைப் பெற முடியும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். திடீரென்று பிரவேசித்து, உடனே பதவிக்கு வந்துவிட முடியாது. அப்படிப்பட்ட மக்களும் தமிழ்நாட்டு மக்கள் அல்ல. எடை போட்டுப் பார்த்து சீர் தூக்கி வாக்களிக்கக்கூடிய மக்கள் தமிழ்நாட்டு மக்கள் என்பதை பல தேர்தல்களில் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் ஆட்சிக்கு வருவது அண்ணா தி.மு.க. ஒன்று தான் என்பதை ஆணித்தரமாக மக்கள் முடிவு செய்திருக்கின்றார்கள்.

எம்.ஜி.ஆர். போல் யாரும் வர முடியாது

டாக்டர் எம்.ஜி.ஆர். முதலில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து நாட்டு மக்களுக்கு நன்மை செய்தார், பல ஆண்டு காலமாக மக்களுக்கு சேவை செய்தார். பலமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்களின் அன்பைப் பெற்றார். தான் வாழ்நாளில் சாதிக்க நினைத்ததை திரைப்படங்களில் நடிக்கும் பொழுதே மக்களுக்கு எடுத்துச் சொன்னார். ஆனால் விஷமிகளாக இருக்கின்ற சில துரோகிகள் அவரின் உழைப்பை மட்டும் பெற்றுக் கொண்டு, அவர் பதவிக்கு வருவதை விரும்பவில்லை. அவருக்குக் கொடுக்கின்ற அந்தஸ்தைக் கூட கொடுக்க மறுத்த காரணத்தினால் தான், மக்களுக்கு நன்மை செய்ய முடியாத நிலை இருந்த காரணத்தினால் தான், அண்ணா கண்ட கனவை நனவாக்க வேண்டுமென்பதற்காக அண்ணா தி.மு.க. என்ற அமைப்பை உருவாக்கினார்.

அவருக்கு இணையாக எந்தவொரு தலைவரும் திரைத் துறையிலிருந்து வர முடியாது என்பதை மக்கள் முடிவு செய்திருக்கின்றார்கள். தன் உயிர் இருக்கும் வரை நாட்டு மக்களுக்காக உழைத்த ஒப்பற்ற தலைவர் எம்.ஜி.ஆர். அதேபோல, அம்மா எம்.ஜி.ஆரின் ஒரே அரசியல் வாரிசாக அடையாளம் காட்டப்பட்டவர். அம்மா காலத்தில் ஏராளமான நலத் திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். கிராமத்திலிருந்து நகரம் வரை ஏழை, எளிய மக்கள் உயர்நிலையை அடைவதற்கு அடித்தளமாக விளங்கிய ஒரே தலைவி அம்மா. உங்களைப் போல் வீட்டிலிருந்து பேட்டி கொடுப்பவர் அல்ல. உழைப்பின் மூலமாக மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்ட தலைவர்கள் இருபெரும் தலைவர்களாவார்கள்.

அண்ணா தி.மு.க. இயக்கம் உழைப்பால் உயர்ந்த இயக்கம். அரசியலில் எத்தனையோ கட்சித் தலைவர்கள் வருகிறார்கள், ஆனால் காணாமல் போய்விடுகிறார்கள். இந்த இயக்கதை உடைக்க வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த முயற்சியை வேரோடு சாய்த்துக் காட்டிய இயக்கமாக அண்ணா தி.மு.க. திகழ்கிறது.

பலமான கூட்டணி

அதேபோல், நம்முடைய கூட்டணி பலம் பொருந்திய கூட்டணி. யாரும் நெருங்க முடியாத கூட்டணியை நாங்கள் அமைத்திருக்கின்றோம். அண்ணா தி.மு.க., தொண்டர்களால் சூழப்பட்ட இயக்கம், தொண்டர்களுடைய உழைப்பால் உருவாக்கப்பட்ட இயக்கம், தொண்டர்களுடைய உழைப்பால் இந்த நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வாரி, வாரி வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம் அண்ணா தி.மு.க. இயக்கம், அரசு, அண்ணா தி.மு.க. அரசு.

நம்முடைய கூட்டணியில் இடம் பெற்றிருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அய்யா இரவு, பகல் பாராமல் நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் வருவதற்கு முன்னோடியாக விளங்கிக் கொண்டிருக்கிறார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும் நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்பதற்காக தன் உடல்நிலையைக்கூட பொருட்படுத்தாமல் தினந்தோறும் அறிவிப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

தமிழகம் வளர வேண்டும், தமிழகத்தில் இருக்கின்ற மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்று அரசுக்கு துணையாக, பக்கபலமாக அவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியும் நம்முடைய கூட்டணியில் அங்கம் வகித்திருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டதன் விளைவால் தான் மிகப்பெரிய வெற்றியை வாக்காளர்கள் தந்திருக்கின்றார்கள்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் ஸ்டாலின் கிட்டத்தட்ட 12 நாட்கள் முகாமிட்டு பல்வேறு கூட்டங்களில் இந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களின் வெற்றி அடுத்து வருகின்ற உள்ளாட்சி மற்றும் ‘‘2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோடி” என்று தெரிவித்தார். இரண்டு தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றி பெறும், தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும், எனவே, அடுத்து வருகின்ற தேர்தல்களிலும் தி.மு.க. தான் வெற்றி பெறுமென்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்து வைத்தார்.

தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி

உங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. ஏனென்றால், நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை ஏமாற்றிவிட்டீர்கள், ஆகவே அந்த வாய்ப்பு உங்களுக்கு மறுக்கப்படுகின்றது என்று அதற்கு இந்த இரண்டு தொகுதி வாக்காளப் பெருமக்களும் சம்மட்டி அடி கொடுத்தார்கள். நீங்கள் கூறியதை நிரூபிக்கின்ற வகையில் அண்ணா தி.மு.க. கூட்டணி தான் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறும். அவர் சொன்னதைப் போல் இந்த வெற்றியின் மூலம் நம்முடைய இயக்கத்திற்கும், நமது கூட்டணிக் கட்சிக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறினார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, இன்னும் பல கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து தி.மு.க.வினர் போட்டியிட்டார்கள். அதிகார போதையில், அகம்பாவத்தோடு பேசினார் ஸ்டாலின். குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இனி அண்ணா தி.மு.க. கூட்டணிக்கே வெற்றி

அதன் பின் 70 நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் 12 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றார். இனி எந்தத் தேர்தல் வந்தாலும் அண்ணா தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று அப்பொழுதே தெரிந்துவிட்டது. இது சாதாரண வெற்றியல்ல. அண்ணா தி.மு.க., பா.ம.க., தே.மு.திக. த.மா.க மற்றும் நமது கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களின் முகமலர்ச்சியை பார்க்கின்றபொழுது இது மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றி உங்களால் கிடைத்த வெற்றி. விக்கிரவாண்டித் தொகுதியில் 45 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திலும், நாங்குநேரியில் 34 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றியை தேடித் தந்திருக்கின்றீர்கள். வாக்காளர்களிடம் நாங்கள் வெற்றி பெற்றால் என்ன செய்வோம் என்று உண்மையைச் சொன்னோம். அதனால் இந்த வெற்றி.

வெற்றிடம் இல்லை

அதுமட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளவர்கள் அண்ணா தி.மு.க. வெற்றிடம், வெற்றிடம் என்று கொக்கரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் இந்த சட்டமன்ற இடைத் தேர்தல். எங்கே வெற்றிடம் இருக்கின்றது. நம்முடைய வேட்பாளர்கள் இவ்வளவு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றிடம் என்ற நிலை இனி தமிழகத்தில் இல்லை என்ற நிலையை இந்தத் தேர்தலிலே மக்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள், நற்சான்றிதழை கொடுத்திருக்கின்றார்கள். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இந்த இடைத் தேர்தல் எங்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கின்ற தேர்தலாக இருக்குமென்று சொன்னார். அவருக்கு நற்சான்றிதழ் கொடுக்கவில்லை, அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு நற்சான்றிதழ் கொடுத்த தேர்தல் இந்த இடைத்தேர்தல்.

அம்மா மறைவிற்குப் பிறகு எவ்வளவோ சோதனைகளை சந்தித்தோம். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எப்பொழுது பார்த்தாலும் போராட்டத்தை தூண்டிவிடுவார். எப்படியாவது இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்து, அதன் மூலமாக மக்களிடம் வெறுப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமாக இந்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும். இதுதான் அவரது குறிக்கோளாக இருந்தது. ஆக்கபூர்வமான கருத்தை எப்பொழுதும் எடுத்துரைக்கவில்லை. இன்றைக்கு அவருடைய ஆசையெல்லாம் நிராசையாகி விட்டது. ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்கலாம் என்று நினைத்தார், அதுவும் நடைபெறவில்லை, கட்சியை உடைக்கலாமென்று நினைத்தார், அதுவும் நடைபெறவில்லை. இடைத்தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைத்தார், அதுவும் நிராசையாகிவிட்டது.

ஸ்டாலினை கருணாநிதியே நம்பவில்லை

அவரது எண்ணங்களையெல்லாம் மக்கள் தவிடுபொடியாக்கி விட்டார்கள். ஸ்டாலின் முதலமைச்சராக ஆகவேண்டுமென்று நினைக்கிறார், நாங்களா வேண்டாம் என்றோம். உங்களுக்கு அந்த கொடுப்பனை இல்லை, நல்ல எண்ணம் இருந்தால்தான் முதலமைச்சராக ஆகமுடியும். அவரது அப்பா இருக்கும் வரைக்கும் தி.மு.க. கட்சிக்கு தலைவராக ஆக முடியவில்லை. கருணாநிதியே ஸ்டாலினை நம்பவில்லை. ஏனென்றால் கருணாநிதி இரண்டாண்டுகள் உடல்நிலை சரியில்லாமல் பேசமுடியாத நிலையில் இருந்தபோதுகூட தனது மகனுக்கு கட்சித் தலைவர் பதவி கொடுக்கவில்லை, செயல் தலைவர் பதவி தான் கொடுத்தார். உங்களுடைய தந்தையே உங்களை நம்பாதபொழுது, இந்த நாட்டு மக்கள் எப்படி உங்களிடம் தமிழ்நாட்டை ஒப்படைப்பார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஆகவே, ஸ்டாலினால் ஒன்றும் முடியவில்லை. எப்பொழுதும் ஊழல், ஊழல் என்பார். ஆனால் இந்த இடைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அதை நிறுத்திக்கொண்டு விட்டார்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தொடக்க உரையாற்றினார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன் அனைவரையும் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, பிரபு, விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் சிந்தாமணி வேலு, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர்கள் தங்கஜோதி, சிவக்குமார், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, பா.ம.க. மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில துணைத்தலைவர் அரிகரன், மாநில துணை அமைப்பு செயலாளர் பழனிவேல், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன், த.மா.கா. மாவட்ட தலைவர் தசரதன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் விநாயகம், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்ட வைத்திலிங்கம் எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பித்துரை, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், கருப்பண்ணன், உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக் கண்ணு, வீரமணி, பெஞ்சமின், நிலோபர் கபில், பாண்டியராஜன், சேவூர் ராமச்சந்திரன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு கொறடா ராஜேந்திரன், செம்மலை எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. அருண்மொழிதேவன் ஆகியோர் கலந்துகொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்புரையாற்றினர். இதில் முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விக்கிரவாண்டி நகர செயலாளர் பூர்ணராவ் நன்றி கூறினார்.

உற்சாக வரவேற்பு

முன்னதாக சென்னையில் இருந்து விக்கிரவாண்டிக்கு காரில் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூரில் வடக்கு மாவட்ட அண்ணா தி.மு.க. செயலாளரும் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம், தெற்கு மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதில் முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., ஆவின் தலைவர் பேட்டை முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் குமரன், நகர ஜெயலலிதா பேரவை நிர்வாகி கோல்டுசேகர், விக்கிரவாண்டி நகர செயலாளர் பூர்ணராவ், ஒன்றிய செயலாளர்கள் சிந்தாமணி வேலு, கண்டமங்கலம் ராமதாஸ், கோலியனூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் சுரேஷ்பாபு, வளவனூர் நகர செயலாளர் சங்கரலிங்கம், முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகவேல், முண்டியம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் லட்சுமிநாராயணன், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சங்கர், பா.ம.க. நகர செயலாளர் சங்கர், தே.மு.தி.க. நகர செயலாளர் பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *