செய்திகள்

தை அமாவாசை: ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்

சென்னை, பிப். 11–

தை அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் ஏராளமான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பித்ரு தோஷம் நீங்க முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்க அனுமதிமறுக்கப்பட்டது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று தை அமாவாசை தினத்தையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கருட மண்டபம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் குவிந்தனர். இதற்காக தயாராக இருந்த சிவாச்சாரியார்கள் மற்றும் புரோகிதர்கள் வரிசையில் அமர்ந்திருந்தனர். அம்மா மண்டபம் படித்துறையில் வைத்து முன்னோர்களின் நினைவாக பல்வேறு பூஜைகள் செய்து வழிபட்ட பொது மக்கள் பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட பிண்டங்களை காவிரி ஆற்றில் கரைத்து புனித நீராடி வழிபட்டனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தீயணைப்பு படையினர் அங்கு தயார் நிலையில் இருந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ராமேஸ்வரம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்தகடலில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று முதலே ஆயிரக்கணக்காண பக்தர்கள் கார், வேன், அரசு பஸ் மூலம் வந்தவண்ணம் இருந்தனர். இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை, தோ‌ஷங்கள் அடங்கிய பூஜைகள் செய்தனர். பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராடினர்.

இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில், கோவில் குளங்களிலும் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *