செய்திகள்

கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில் தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கவேண்டும்: வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் பேச்சு

Spread the love

வேலூர், அக்.12

‘கிராவிடாஸ் -19’ எனும் சர்வதேச தொழில் மேலாண்மை அறிவுத்திருவிழா வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நேற்று (11 ந் தேதி) தொடங்கியது. தொடர்ந்து 3 தினங்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் உயர்கல்வித் துறைச் செயலர் ஆர்.சுப்பிரமணியம் காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைத்தார்.

விழாவில் வி.ஐ.டி. வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் தனது தலைமையுரையில் பேசியதாவது:

தொழில்நுட்பம் பெரும்பாலும் நகரத்தில் தான் பயன்படுத்தப்படுகிறது. கிராமங்களில் தான் இந்தியா வாழ்கிறது என மகாத்மா காந்தி கூறியுள்ளார், கிராமப்புறம் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான கண்டுபிடிப்புகளை நாம் உருவாக்க வேண்டும், அத்தகைய கண்டுபிடிப்புகள் சமுதாயத்திற்கும் பயன் உள்ளதாக இருக்க வேண்டும்.

கடை கோடி மக்களும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். கடந்த 25 ஆண்டுகளில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது, ஆனால் சமுதாயத்தின் அனைத்து துறைகளிலும் பொருளாதார வளர்ச்சி முழுமையடைய வில்லை. விரைவில் இந்த நிலை மாற வேண்டுமானால் தொழில்நுட்பம் நாட்டின் அனைத்து பகுதிக்கும் குறிப்பாக கிராமப்புறங்களுக்கும் சென்றடைய வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து நாம் நிறையவற்றை இறக்குமதி செய்கிறோம், ஆனால் வருடா வருடம் அந்நிய செலவாணி நாம் அதிகரிக்கிறோம். குறிப்பாக ராணுவத்துறையில். பாரத பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் படி நாம் அனைத்தையும் உள்நாட்டிலே உற்பத்தி செய்ய வேண்டும், இதனால் நாம் வேலை வாய்ப்பை அதிகரிக்கலாம். தொழிநுட்ப பயன்பாட்டால் பொருட்களின் விலை குறைவதோடு மட்டுமல்லாமல் பொருட்களின் தரம் உயரும்.

விவசாயம் நம்பியே 50% பேர்

இந்தியாவில் 50 சதவிகிதம் மக்கள் விவசாயத்தை சார்ந்து தான் உள்ளனர், இவர்களுக்கு பல்வேறு வகையான தொழில்நுட்பங்களை நாம் அறிமுகப்படுத்த வேண்டும். குறிப்பாக இஸ்ரேல் போதிய அளவிற்கு விவசாயத்துக்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். வி.ஐ.டி.யில் விவசாய துறைக்கு பல்வேறு வகையான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

காணொலி காட்சி மூலம் ‘கிராவிடாஸ்’19 நிகழ்ச்சியை துவக்கி வைத்த மத்திய மனித வள மேம்பாட்டின் உயர் கல்வி துறையின் செயலாளர் சுப்பிரமணியம் பேசியதாவது:

உலக பல்கலைக்கழக தர பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பெறுவதற்கு கல்வி நிறுவனங்கள் நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவேண்டும். உலக தர வரிசை பட்டியலில் இடம் பெறுவதற்கு நாம் கடுமையாக உழைப்பதோடு நாம் காப்புரிமைகளை பதிவு செய்ய வேண்டும். மத்திய அரசு ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு அதிகமான நிதி உதவியும் வழங்கி வருகிறது. மத்திய மனித வள மேம்பாட்டு பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி செய்கிறது என்றார்.

‘கிராவிடாஸ்’19 நிகழ்ச்சிக்கு காணொலி மூலம் பேசிய மத்திய சுற்றுப்புறச்சூழல் , வனத்துறை அமைச்சர் பிரகாஸ் ஜவடேகர் கூறுகையில், இந்தியா கண்டுபிடிப்புகளில் தீவிர கவனம் செலுத்தவேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் உலகில் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளது, இவை அனைத்திலும் இந்தியர்களின் பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாம் புதிய கண்டுபிடிப்புகளில் ஒரு முக்கிய பங்கு தான் வகிக்கிறோம். ஆனால் நாம் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்தால் தான் இந்திய நாட்டிற்கு உலக அளவில் பெருமை சேர்க்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாபு ராஜேந்திரன்

சொசைட்டி ஜெனரல் உதவி துணைத்தலைவர் பாபு ராஜேந்திரன், ஆட்டோ டெஸ்க் நிறுவனம் மூத்த நிர்வாகி தீபன்கர் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புறை ஆற்றினர்.

வி.ஐ.டி. துணைத்தலைவர் டாக்டர். சேகர் விசுவநாதன், செயல் இயக்குனர் டாக்டர் சந்தியா பெண்ட்ட ரெட்டி, துணைவேந்தர் டாக்டர் ஆனந் சாமுவேல், இணை துணை வேந்தர் டாக்டர் எஸ்.நாராயணன் , பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *