செய்திகள்

பொதுவெளியில் தோன்றினார் அலிபாபா நிறுவனர் ஜாக் மா

ஷாங்காய், ஜன. 20–

அலிபாபா நிறுவனரும், சீனத்தின் பணக்காரர்களில் முன்னணியில் இருப்பவருமான ஜாக் மா கடந்த மூன்று மாதங்களாக எங்கே போனார் என்று தேடப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக பொதுவெளியில் தோன்றினார்.

சீனத்தைச் சேர்ந்த முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவை நிறுவியவர் ஜாக் மா. சீனத்தின் இ-வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந்தையை, அலிபாபா நிறுவனத்தின் மூலம் தனதாக்கிக் கொண்டவர். சீனத்தில் தனது வெற்றிக்கொடியை நிலைநாட்டிய அலிபாபா நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் தனது கிளையைப் பரப்பி வருகிறது.

இந்த நிலையில்தான், சீன அரசுக்கும் ஜாக் மாவுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. அலிபாபா நிறுவன வளர்ச்சியைத் தடுக்கும் வகையில், சில கோட்பாடுகளை சீன அரசு வகுப்பதாகவும் பழமைவாதத்தை சீன அரசு கைவிட வேண்டும் என்றும் ஜாக் மா கடந்த அக்டோபர் மாதம் வெளிப்படையாகவே விமரிசித்திருந்தார்.

3 மாதமாக காணவில்லை

இந்த விமரிசனத்தைத் தொடர்ந்து சீன அரசின் பல்வேறு தொல்லைகளுக்கு அலிபாபா நிறுவனமும், ஜாக் மாவும் ஆளானதாகக் கூறப்படும் நிலையில், கடந்த 3 மாதங்களாக ஜாக் மா பொதுநிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. மேலும், அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதகாவும் கூறப்பட்டது.

‘ஆப்ரிக்காவின் வணிக கதாநாயகர்கள்’ என்ற தனது சொந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதித் தொடரில் கூட ஜாக் மா பங்கேற்கவில்லை. இதுதான் அவர் எங்கிருக்கிறார் என்ற கேள்வியை அதிகரிக்கச் செய்திருந்தது. ஜாக் மா வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை.

கடந்த மூன்று மாதங்களாக எங்கே போனார் என்று பல்வேறு ஊகங்கள் வெளியாகி வந்த நிலையில், இன்று காலையில், சீனத்தின் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 100 ஆசிரியர்களுடன் முதல் முறையாக காணொலி வாயிலாக ஜாக் மா வின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து பல்வேறு வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *