செய்திகள்

தமிழ்நாடு மாநில வனக் கொள்கை 2018: எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

சென்னை, ஜூலை 25–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், ‘‘தமிழ்நாடு மாநில வனக்கொள்கை 2018″ புத்தகத்தை வெளியிட, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் பெற்றுக் கொண்டார்.

தனித்துவம் வாய்ந்த பூகோள, பருவநிலை, மண் சார்ந்த சூழலியல், சுற்றுப்புறம் மற்றும் மக்கள்தொகை போன்ற சிறப்பியல்புகளை தமிழ்நாடு தன்னகத்தே கொண்டுள்ளதால், நம் மாநிலத்திற்கென தனியே ஒரு மாநில வனக்கொள்கை இருக்கவேண்டியது அவசியமாகிறது. எனவே, இயற்கை வளங்கள் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாத்தல், சூழலமைப்புகள் மற்றும் அவற்றின் மரபியல் வகைகளைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலை பராமரித்தல், வன உற்பத்தித் திறனை பெருக்குதல், வனங்களில் நீர் வள ஆதாரங்களை அதிகரித்தல் மற்றும் பருவநிலை மாறுபாட்டினை சீர் செய்ய மரங்கள் அடர்ந்த பகுதிகளைப் பெருக்குதல் போன்றவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாநில வனக்கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் 2½ சதவிகிதம் ஒதுக்கீடு

வன மற்றும் வன உயிரின மேம்பாட்டிற்காக வரவு செலவு திட்டத்தில் 2.5 விழுக்காடு ஒதுக்கீடு செய்ய தேசிய வன ஆணையம் பரிந்துரை செய்துள்ளதைத் தொடர்ந்து, இவ்வனக் கொள்கையின் இலக்கினை அடைய ஆண்டுதோறும் வனத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். இனிவரும் காலங்களில் வனங்கள் மற்றும் மரங்கள் மூலம் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை மாநில வனக்கொள்கையின் அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. சண்முகம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுத்தின், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனத்துறை தலைவர்) ஆர்.கே. உபாத்யாய், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (தலைமை வனஉயிரின காப்பாளர்) டி.பி. ரகுநாத் ஆகியோர் உடனிருந்தனர்.

முக்கிய அம்சங்கள்

வனக் கொள்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–

மொத்த நிலப்பரப்பில், மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பிலும், மொத்த மலைப்பகுதியின் பரப்பில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு பரப்பிலும், மரங்களை வளர்த்து, அவற்றை வனப்பகுதியாக உருவாக்குகிற அல்லது அடர்த்தியான மரவளர்ப்பு சாதனையை எய்துவது மேற்சொன்ன இக்கொள்கையின் நோக்கமாகும்.

வளங்குறைந்த வனப்பகுதிகளுக்கு புத்துயிர் அளித்து சீரமைத்தல்,

வனத்தின் உள்ளேயும் மற்றும் வெளியேயும், மரம் வளர்ப்பதை அதிகரிப்பதன் வாயிலாக தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படுகிற தாக்கத்தைத் தணிப்பது, மாற்றி அமைப்பது.

வன விலங்குகளால் ஏற்பட்ட உயிரிழப்பு, சொத்து இழப்பு மற்றும் பயிர் சேதத்திற்கு குறித்த காலத்தில் இழப்பீடு வழங்கும் நடவடிக்கை செயல்படுத்தப்படும். இது மனிதர்களால் வனவிலங்குகளுக்கும், வன விலங்குகளால் மனிதர்களுக்கும் ஏற்படுகிற பிரச்சினைகளைக் குறைக்கும்.

புலிகள் காப்பகங்கள் உள்ள பகுதிகளில் அமைந்திருக்கிற வனவாசிகளின் வசிப்பிடங்களை உரிய இடமாற்ற வசதிகளுடன் அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றுகிற நடவடிக்கை ஊக்குவிக்கப்படும்.

உள்ளூர் மக்களின் ஈடுபாட்டுடன், வனப்பகுதிகளில் மேய்ச்சல் முறைப்படுத்தப்படும்.

காட்டுத் தீயைக் கண்டறிவதற்காகவும், அதை அணைப்பதற்காகவும், நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் துறையின் திறன்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உயிரின வாழ்க்கைச் சூழலை பேணுவதற்காக, தற்போதுள்ள வனப்பகுதியைப் பாதுகாக்கும் பொருட்டு, வனப் பாதுகாப்பு சட்டம் 1980 கண்டிப்பாக செயல்படுத்தப்படும். ஒவ்வொரு இனத்திற்கும் ஏற்றுவாறு, வன நிலங்களை, வேறு நோக்கத்திற்குப் பயன்படுத்துவதற்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.

கிராம வனக்குழு

காடுகளை மீண்டும் வளர்ப்பதில் உள்ளூர் மக்களின் தன்னார்வப் பங்கேற்பைக் கோருவதன் மூலமாகவும், இத்தகைய காடுகள் மூலம் கிடைக்கும் நீடித்த பயன்களை, அம்மக்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமாகவும், தரம் குறைந்தவையாக ஆகிவிடக்கூடிய 40 சதவீதத்திற்கும் குறைவான மர அடர்த்தியைக் கொண்டுள்ள திறந்தவெளி வன நிலங்கள் மற்றும் கிராமங்களுக்கு அருகில் அமைந்துள்ள மற்றும் 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையில் மர அடர்த்தியைக் கொண்டுள்ள வனங்கள், நிர்வகிக்கப்படும். காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கிராமத்திலும் கிராம வனக்குழுவை ஏற்படுத்துவதன் மூலம் கூட்டு வன நிர்வாகத்தின் வாயிலாக இந்த முயற்சியில் மக்களின் ஈடுபாடு ஊக்குவிக்கப்படும்.

கடற்கரையில் தோட்டங்கள்

காற்றினால் ஏற்படுகிற மண்ணரிப்பைக் குறைப்பதற்காகவும், சுனாமி, புயல், அலையேற்றங்கள் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் உட்பட இயற்கையின் போக்குகளுக்கு எதிராக, கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு அரணாகச் செயல்படுவதற்காகவும், காற்றின் வேகத்தைக் குறைக்கும் வகையில் கடலோர இடைநிலைப் பகுதியில் தோட்டங்கள் வளர்க்கப்படும்.

1988ம் ஆண்டு தேசிய வனக்கொள்கையானது, நாட்டின் மொத்த புவியியற்பரப்பில் வனம் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதிகள் 33 சதவீதமாக அதிகரிக்கப்படுவதற்கு வகை செய்கிறது. தற்போது மொத்த புவியியற் பரப்பில் 21.76 சதவீதமாக உள்ள வனம் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதியை 33 சதவீதமாக அதிகரிப்பதற்கு, மாநில அரசு, புதிய உத்திகளை உருவாக்கும். 2030ம் ஆண்டுக்குள் 33 சதவீத வனம் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதியை உருவாக்க அரசு பாடுபடும்.

மரம் வளர்ப்பு குறித்து தேவைப்படும் அறிவியல் சார்ந்த தகவல்களை உழவர்களுக்கு வழங்கும். மாறுபட்ட சூழ்நிலையிலும் தொடர்ந்து வளரக்கூடிய வேளாண் காடு வளர்ப்பு மாதிரிகளும் தொடர்ந்து உருவாக்கப்படும்.

மரம் நடும் உழவர்கள் கூட்டுறவு சங்கங்களை உருவாக்குவதற்கு ஊக்கமளிக்கப்படும்.

மரம் நடுவதில் உள்ள இடைஞ்சல்கள் மற்றும் கட்டுப்பாடுகளைக் களைய, அச்சட்டத்தில் மற்றும் விதிகளில் தேவையான மாற்றம் அல்லது திருத்தங்கள் கொண்டு வர மாநிலம் தொடர்ந்து பாடுபடும்.

சாலை ஓர பூங்கா

மாசுபாடு அளவை குறைப்பதற்கும், நகர்ப்புற சுற்றுச்சூழலை சீராக்குவதற்கும் வனத்துறையானது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து சாலையோரங்களில் பொருத்தமான மர வகைகளை நடுவதற்கும், மரப்பூங்கா அமைப்பதற்கும் ஊக்குவிக்கப்படும்.

மாநிலத்தில் மரங்களை பெருக்குவதற்கு, வனம் அடிப்படையிலான தொழிலகங்கள் மரம் வளர்க்கும் உழவர்களுடனும், வங்கியாளர்களுடனும் முக்கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளவும் ஊக்குவிக்கப்படும்.

உழவர்கள், குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் அவர்களின் குறு மற்றும் அழிந்துவிட்ட நிலங்களில் மரத்தொழிலகங்களுக்கு தேவையான மர இனங்களை வளர்க்குமாறு ஊக்குவிக்கப்படும்.

நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அப்போது தான், தற்போதுள்ள மற்றும் வருங்கால தலைமுறையினருக்கு சுற்றுச்சூழல் பயன்களை தொடர்ந்து அளிக்க இயலும். இதற்காக 2017ம் ஆண்டு ஈரநில (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் செயல்படுத்தப்படும்.

வனப் பாதுகாப்புப்படையில், குறிப்பாக வனப்பாதுகாப்பு மற்றும் மேலாண்மை துறையில் மகளிரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

வன மற்றும் வன உயிரின மேம்பாட்டிற்காக வரவு செலவு திட்டத்தில் 2.5 விழுக்காடு ஒதுக்கிடு செய்ய தேசிய வன ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அந்தந்த ஆண்டுகளில் ஏற்படக்கூடிய நிதி நிலையினை கருத்தில் கொண்டு இவ்வனக் கொள்கையின் இலக்கினை நிறைவேற்ற ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டத்தில் வனத்துறைக்கான நிதி ஒதுக்கத்தை அதிகரிக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் தமிழ்நாடு மாநில வனக்கொள்கை குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *