செய்திகள்

தமிழில் உறுதிமொழி வாசித்து புதுச்சேரி மாநில 5வது துணை நிலை ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றார்

புதுவை, பிப். 18–

தமிழில் உறுதி மொழி வாசித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டு பொறுப்பேற்றார்.

அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. கிரண்பேடியை மாற்றவேண்டும் என்று நாராயணசாமி போர்க்கொடி தூக்கி வந்தார்.

இன்று பொறுப்பேற்பு

இந்நிலையில், கிரண் பேடியை திரும்பப்பெறுவதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவித்தார். இதற்கிடையே, தெலங்கானா கவர்னராக இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில ஆளுநர் பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்று காலை, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார். கிரண்பேடி நீக்கப்பட்டதையடுத்து பொறுப்பு ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க, தமிழில் பதவிப்பிரமாணத்தை கூறி தமிழிசை பொறுப்பேற்றார். இந்த விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார்.

புதுச்சேரியின் 5வது பெண் துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கையெழுத்து

பொறுப்பேற்றவுடன் இட்ட முதல் கையெழுத்து தொடர்பாக கூறுகையில், “நான் முதலில் கையெழுத்து போடுவது சாமானிய மக்களுக்கான கையெழுத்தாக இருக்க வேண்டும் என எண்ணினேன். அதனால்தான் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் கையெழுத்தை இட்டேன். இந்த கையெழுத்து நிச்சயமாக புதுவை மக்களின் தலையெழுத்தை மாற்றும் என நான் நம்புகிறேன். அடுத்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கான உதவித்தொகை வழங்கும் கையெழுத்தாக இருந்தது” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *