செய்திகள்

கல்வித்தகுதி பட்டியலில் தமிழ்படிப்பை சேர்க்கவேண்டும்: பிரதமருக்கு எடப்பாடி கடிதம்

தொல்லியல் முதுநிலை பட்டய படிப்பில் சேர

கல்வித்தகுதி பட்டியலில் தமிழ் படிப்பை சேர்க்க வேண்டும்:

பிரதமருக்கு எடப்பாடி கடிதம்

சென்னை, அக்.9-

தொல்லியல் முதுநிலை பட்டய படிப்பில் சேர்வதற்கான கல்வித்தகுதி பட்டியலில் தமிழ் படிப்பையும் சேர்க்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

தொல்லியல் துறைக்கான தீனதயாள் உபாத்யாயா கல்வி நிறுவனத்தில் 2020–2022ம் ஆண்டுகளுக்கான 2 ஆண்டுகள் முதுநிலை பட்டய படிப்பில் (தொல்லியல் கல்வி) சேர்வதற்கான கல்வித்தகுதியை நிர்ணயித்து சமீபத்தில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த விளம்பரத்தை மத்திய கலாசார துறையின் கீழ்வரும் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இது இந்தியாவில் உள்ள பழமையும், பெருமையும் வாய்ந்த நாகரிகத்தை வெளியே கொண்டு வருவதற்கான சிறந்த கல்வியை அளிக்கக்கூடிய நிறுவனமாக உள்ளது.

அந்த கல்வி சேர்க்கைக்கான கல்வித்தகுதியாக சில மொழிகளில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய செம்மொழியான சமஸ்கிருதம் மற்றும் பாலி, பிரக்ரித், அரபிக், பெர்ஷியா ஆகிய மொழிகளில் முதுகலை பட்டத்தை படித்து இருக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் நிராகரிப்பு

ஆனால் 2005-ம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்ட சமஸ்கிருதம் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஆனால் 2004–-ம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் அந்த பட்டியலில் இடம்பெறாமல் துரதிஷ்டவசமாக முற்றிலும் நிராகரிகப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்திய தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் முகமைகளால் அனைத்து மொழிகளுக்கான 48 ஆயிரம் கல்வெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் 28 ஆயிரம் அதாவது பாதிக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் மொழியில் உள்ளன. இதை மனதில் கொள்ள வேண்டும்.

மேலும், மேற்கூறப்பட்ட தொல்லியல் கல்வியில் சேர்வதற்கான கல்வித்தகுதியில் தமிழ் மொழியில் முதுகலை பட்டம் படித்தவர்களையும் சேரத் தகுதி உள்ளவர்களாக அறிவிக்கும்படி, அதற்கான வழிகாட்டியில் தகுந்த திருத்தத்தை மேற்கொள்வதற்கு இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு நீங்கள் உத்தரவிட வேண்டும் என்று மிகுந்த அழுத்தமாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *