செய்திகள்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்: சட்டசபையில் கவர்னர் பெருமிதம்

மாநாட்டில் கையெழுத்தான 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 81 திட்டங்கள் வணிக உற்பத்தி துவக்கம்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்:

சட்டசபையில் கவர்னர் பெருமிதம்

கொரோனா காலத்திலும் பெரிய முதலீட்டை ஈர்த்ததில் முதல்வர் எடப்பாடிக்கு பாராட்டு

சென்னை, பிப்.2

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்று கவர்னர் பன்வாரிலால் பெருமிதத்துடன் கூறினார்.

2019 ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 81 திட்டங்கள் வணிக உற்பத்தியை தொடங்கி விட்டன. மேலும் 191 திட்டங்கள் பல்வேறு நிலையில் செயல்பாட்டில் உள்ளன என்றும் அவர் கூறினார்.

நடப்பு ஆண்டின் சட்டசபை முதல் கூட்டத்தொடரை கவர்னர் இன்று துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். 2019 ஆம் ஆண்டு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 81 திட்டங்கள் வணிக உற்பத்தியைத் தொடங்கி விட்டன. மேலும், 191 திட்டங்கள் பல்வேறு நிலையில் செயல்பாட்டில் உள்ளன.

2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குப் பின்னர், மேலும் 149 திட்டங்களில்,

1,06,664 கோடி ரூபாய் மதிப்பில் முதலீட்டை ஈர்த்து, 2,42,705 நபர்களுக்கு வேலைவாய்ப்பினை தமிழக அரசு அளித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலும், இத்தகைய பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்த்ததில் முதலமைச்சரின் நேரடி ஈடுபாட்டையும், முனைப்பான முயற்சிகளையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன். வளர்ந்துவரும் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக, மின்சார வாகனக் கொள்கை மற்றும் மின்னணு வன்பொருள் உற்பத்திக் கொள்கையை அரசு அறிவித்துள்ளது. இவை இரண்டும் மேலும் முதலீடுகளை ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ளன.

தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக, ‘புதிய தொழில் கொள்கைக்கு’ அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இக்கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோருக்கான நாற்றங்காலாக விளங்குவது மட்டுமல்லாமல், பெருமளவில் வேலைவாய்ப்பு அளிப்பவையாகவும் திகழ்கின்றன.

தமிழ்நாட்டில், 2,73,241 கோடி ரூபாய் முதலீட்டுடன், 1.52 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய, 23.60 லட்சம் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. அனைத்துத் தரப்பினரிடமும் கலந்தாலோசித்து, ‘புதிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கொள்கை’ இறுதி செய்யப்பட்டு, முதலமைச்சரால் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று நோயிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மீண்டு வருவதற்கு உதவும் விதமாக, பல்வேறு வகையான மானியங்களை, அரசு முன்கூட்டியே வழங்கியது.

மேலும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைத் திறம்பட ஒருங்கிணைத்து, இந்திய அரசின் ‘அவசரகாலக்

கடன் உத்தரவாதத் திட்டத்தின்’ மூலம் தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடைவதை உறுதிசெய்துள்ளது.

பத்திரப்பதிவு மீதான முத்திரை தீர்வை விலக்கு

அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், கடன்கள் பெறுவதை எளிதாக்குவதற்கும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும், சொத்து ஆவணங்களை அடமானம் செய்யும் (சமமான அடமானங்கள்) பத்திரப் பதிவு மீதான முத்திரைத் தீர்வையை செலுத்துவதிலிருந்து அரசு, மார்ச் 31, 2021 வரை விலக்களித்துள்ளது.

மேலும், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான பதிவுக் கட்டணத்தை 1சதவீதத்திலிருந்து 0.1 சதவீதமாகக் குறைத்துள்ளது. நிறுவனக் கடன் பெறுவதை மேலும் எளிதாக்குவதற்காக, 1908ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தில் அரசு திருத்தம் மேற்கொள்ளும். இதன்படி, குறிப்பிட்ட காலக் கடன்கள் மற்றும் நடைமுறை மூலதனக் கடன்களைப் பெறும் பொருட்டு, பத்திரம் பதிவு செய்ய, பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு கடன் பெறுபவர்களும் கடன் வழங்குபவர்களும் நேரில் செல்வதைத் தவிர்த்து, சொத்து ஆவணங்களை அடமானம் செய்து பத்திரங்களை இணையவழியில் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்படும்.

இந்தக் கொரோனா கால நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு ஏதுவாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குமாறு வங்கியாளர்களை வலியுறுத்துவதற்காக, முதலமைச்சர் மாநில அளவிலான வங்கியாளர்கள் சிறப்பு குழுக் கூட்டத்தினை கூட்டினார். இந்நடவடிக்கைகளின் காரணமாக, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட, அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அதிக அளவில் பயனடைந்துள்ளது.

3 வருடங்களில் ரூ.1000 கோடி முதலீடு

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஒரு சிறந்த நீண்டகாலக் கடன் வழங்கும் நிறுவனமாகத் திகழ்வதற்கும், அதன் செயல்பாடுகளை விரிவாக்குவதற்கும், இதுவரை நிறுவனக் கடன் பெறாத குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவுகின்ற வகையில், தமிழ்நாடு அரசு, இக்கழகத்தில், 1,000கோடி ரூபாயை மூன்று வருடங்களில் முதலீடு செய்யும்.

இவ்வாறு கவர்னர் தன் உரையில் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *