முழு தகவல்

தமிழ்ச் செம்மல் விருதுகள்: அரசின் நோக்கமும் பயனும்!

பாராட்டுவதும், தட்டிக்கொடுப்பதும் பொதுவாக மனிதனை மகிழ்ச்சியடைய செய்கிறது. ஒருவர் செய்த செயல்களை ஏற்று போற்றும் விருதுகள், அவர்களை மேலும் மேலும் ஊக்குவித்து, அத்துறையில் சாதனைகள் படைக்க தூண்டுகோல் செய்கிறது. அதன் மூலம் அந்த சமூகத்தின் நிகழ்காலத்துக்கு மட்டுமின்றி வருங்கால வழித்தோன்றல்களும் வழிவழியாய் பயன்தருகிறது. இதற்காகவே ஒரு அரசோ அல்லது சமூக நோக்கம் கொண்ட அமைப்புகள், தனி மனிதர்கள் கூட விருதுகள் வழங்குகிறார்கள். அதிலும் அரசு ஒரு விருது கொடுக்கும் போது, அதற்கான சமூக மதிப்பும் உயர்கிறது.

அந்த வகையில், இந்திய ஒன்றிய அரசும் சரி, தமிழ்நாடு அரசும் பல்வேறு துறைகளில் விருதுகளை வழங்கி, துறைதோறும் வளர்ச்சி பெற உறுதுணையாக இருக்கிறது. அப்படியாக, தமிழ்நாடு அரசின் கலை மற்றும் பண்பாடு இயக்ககத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தினால் 1954 முதல் இலக்கியம், இசை மற்றும் நாடகத்துறையில் சிறப்பு மிக்கவர்கள் தேர்வு செய்யப்பட்டு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல், திரைப்படத் துறையை ஊக்கப்படுத்தும் வகையில், 1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த வில்லன், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த இயக்குநர்,சிறந்த படம், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த இசையமைப்பாளர் போன்ற வகைகளில், தமிழ்நாடு அரசு சார்பில் திரைப்பட விருதுகளும் வழங்கப்படுகிறது.

இந்தநிலையில், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தி, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், 15 விருதுகளை வழங்கி தமிழ் மொழி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு வருகிறது. அதில், உ. வே. சா விருது (2012 முதல்), உமறுப் புலவர் விருது (2014 முதல்), கபிலர் விருது (2012 முதல்), கி. ஆ. பெ. விசுவநாதம் விருது (2000 முதல்), சொல்லின் செல்வர் விருது (2013 முதல்), ஜி. யு. போப் விருது (2014 முதல்), தமிழ் வளர்ச்சிக்கு சேவைபுரியும் நிறுவனங்கள்/அமைப்புகளுக்கு தமிழ்த்தாய் விருது (2012 முதல்), திரு. வி. க. விருது (1979 முதல்), திருக்குறள் நெறி பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் திருவள்ளுவர் விருது (1986 முதல்), பாரதியார் விருது (1997 முதல்), பாரதிதாசன் விருது (1978 முதல்) வழங்கப்படுகிறது.

கணினித் தமிழ் விருதுகள்

அதேபோல், கணினி வழியில் தமிழ் மொழி உலகெங்கும் பரவும் வகையில் கணினித்தமிழ் வளர்ச்சிக்காகச் சிறந்த தமிழ் மென்பொருள்களை உருவாக்குபவர்களுக்கு கணினித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு இலட்சம் ரூபாயும் தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது (2013 முதல்), இளங்கோவடிகள் விருது, கம்பர் விருது (2013 முதல்) வழங்கி வருவதுடன், அம்மா இலக்கிய விருது, மொழிபெயர்ப்பாளர் விருது, தமிழ்ச்செம்மல் விருது ஆகிய தலைப்புகளில் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கி வருகிறது. இதில் ‘தமிழ்ச் செம்மல் விருதுகள் (2015 ஆம் ஆண்டு முதல்), தமிழ்த் தொண்டாற்றும் பலரையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் என தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு அரசு வழங்கிச் சிறப்பிக்கிறது.

ஜெயலலிதா கடந்த 25.7.2014 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ் வளர்ச்சிக்காகத் தனி ஆளாகத் தொண்டு செய்தும், தமிழ் அமைப்பு வைத்துத் தமிழ் மொழிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை மாவட்டந்தோறும் கண்டறிந்து, அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்ச் செம்மல் விருது ஆண்டுதோறும், ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் என்றவாறு வழங்கப்படும் என்றும், இவ்விருது பெறுபவருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கான விருதுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு அரசு 2015-ம் ஆண்டு முதல் தமிழ்ச் செம்மல் விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

2019 ஆம் ஆண்டுக்கு தேர்வானவர்கள்

அவ்வகையில், 2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் முனைவர் கோ.ப.செல்லம்மாள் (சென்னை மாவட்டம்), முனைவர் மரியதெரசா (திருவள்ளூர் மாவட்டம்), முனைவர் எஸ்.ஸ்ரீகுமார் (காஞ்சிபுரம் மாவட்டம்), ச.இலக்குமிபதி (வேலூர் மாவட்டம்), கவிஞர் அ.க.இராசு (எ) பாளைவேந்தன் (கிருஷ்ணகிரி மாவட்டம்), கவிஞர் எறும்பூர் கை.செல்வகுமார் (திருவண்ணாமலை மாவட்டம்), கல்லைக்கவிஞர் வீ. கோவிந்தராசன் (விழுப்புரம் மாவட்டம்), முனைவர் எஸ்.எம். கார்த்திகேயன் (கடலூர் மாவட்டம்), முனைவர் த.மாயகிருட்டிணன் (பெரம்பலூர் மாவட்டம்), முனைவர் து. சேகர் (அரியலூர் மாவட்டம்), வ.முத்துமாரய்யன் (சேலம் மாவட்டம்).

கவிஞர் மா.இராமமூர்த்தி (தருமபுரி மாவட்டம்), ப. சுப்பண்ணன் (நாமக்கல் மாவட்டம்), முனைவர் எண்ணம்மங்கலம் அ.பழநிசாமி (ஈரோடு மாவட்டம்), முனைவர் சு.இளவரசி (கரூர் மாவட்டம்), கவிஞர் அ.ஞானமணி (கோயம்புத்தூர் மாவட்டம்), முத்து சுப்ரமணியன் (திருப்பூர் மாவட்டம்), சபீதா போஜன் (நீலகிரி மாவட்டம்), அ.அந்தோணி துரைராஜ் (திருச்சி மாவட்டம்), முனைவர் அ.அ.ஞானசுந்தரத்தரசு (புதுக்கோட்டை மாவட்டம்), சொ.பகீரதநாச்சியப்பன் (சிவகங்கை மாவட்டம்), ஆதி நெடுஞ்செழியன் (தஞ்சாவூர் மாவட்டம்), இரா.கல்யாணராமன் (திருவாரூர் மாவட்டம்).

37 பேருக்கு ‘தமிழ்ச் செம்மல் விருது’: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சி. சிவசங்கரன் (நாகப்பட்டினம் மாவட்டம்), மை.அப்துல்சலாம் (ராமநாதபுரம் மாவட்டம்), முனைவர் பி. சங்கரலிங்கம் (மதுரை மாவட்டம்), முனைவர் அ.சு.இளங்கோவன் (திண்டுக்கல் மாவட்டம்), சா.பி.நாகராசன் (எ) தேனி இராஜதாசன் (தேனி மாவட்டம்), முனைவர் இரா.இளவரசு (விருதுநகர் மாவட்டம்), க.அழகிரிபாண்டியன் (திருநெல்வேலி மாவட்டம்), நம். சீநிவாசன் (தூத்துக்குடி மாவட்டம்), குமரிஆதவன் (கன்னியாகுமரி மாவட்டம்), ந.கருணாநிதி (திருப்பத்தூர் மாவட்டம்), வத்சலா சேதுராமன் (செங்கல்பட்டு மாவட்டம்), த.தினகரன் (ராணிப்பேட்டை மாவட்டம்), உமாகல்யாணி (தென்காசி மாவட்டம்) மற்றும் பெ.அறிவழகன் (கள்ளக்குறிச்சி மாவட்டம்).

இந்த 37 விருதாளர்களில், 19 விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி தமிழ்ச் செம்மல் விருதுக்கான விருதுத் தொகை 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்தார். தமிழ்ச் செம்மல் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட இதர விருதாளர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் அமைச்சர்களால் தமிழ்ச் செம்மல் விருதுகள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எழுத்து, தொகுப்பு: மா. இளஞ்செழியன்.

செய்திப்பிரிவு: மக்கள் குரல் இணையதளக் குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *