செய்திகள்

நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள்

நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள்

மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை

சென்னை, நவ.27-

நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் இடையே நோய் தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் புயல் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அவர் அனுப்பி உள்ள குறுஞ்செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-–

மருத்துவ பரிசோதனை

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்கள் ஒருவருக்கு ஒருவர் தனி மனித இடைவெளியை முறையாக கடைப்பிடிக்கவும், முக கவசங்கள் அணிந்துள்ளதையும் உறுதி செய்ய வேண்டும். நிவாரண முகாம்களில் உள்ளவர்களில் யாருக்காவது கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். வீடுகள், கடைகளில் உள்ள கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளை சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட மக்களுக்கு பிளீச்சிங் பவுடர்கள் வழங்க வேண்டும். மழைநீர் தேங்கிய பகுதிகளில் அதனை உடனடியாக வெளியேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.

தீபாவளி மற்றும் நிவர் புயல் தாக்கம் ஆகியவற்றுக்கு பிறகு ஏற்படும் நோய் பரவல் பாதிப்புகளைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் அதனை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, கொரோனா, காலரா, டைபாய்டு, டெங்கு, கழிவுநீர் கலப்பால் ஏற்படும் நோய் தொற்றுகள் ஆகியவை பொதுமக்களிடையே பரவாமல் தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக தேவையான இடங்களில் மருத்துவ பரிசோதனைகளை விரிவாக நடத்த வேண்டும்.

பொதுமக்களுக்கு வினியோகிக்கும் குடிநீரில் உரிய அளவு குளோரின் கலந்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். உரிய நேரத்தில் வீணாகும் உணவு பொருட்களையும், மீதமுள்ள சமைத்த உணவுகள் முறையாக அகற்றப்பட வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நடமாடும் கொரோனா பரிசோதனை குழுக்கள், மருத்துவ குழுக்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேற்கண்ட பணிகளுக்காக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *