சிறுகதை

டேக் இட் ஈஸி! | கௌசல்யா ரங்கநாதன்

Spread the love

“டாக்டர் என்னங்க சொன்னார்?” என்றாள் வாயிலிலேயே காத்திருந்த என் மனைவி ஜானகி.

“எல்லாமே எதிர்பார்த்ததுதான்..கவலைப்படாதீங்க..டேக் இட் ஈஸினு சொன்னார்..எனக்கும் அவர் சொன்னதில் உடன்பாடுதான்..”

“உங்களால் மட்டும் எப்படிங்க இப்படியிருக்க முடியுது. பிரச்சினைகள் மேல பிரச்சினைகளா போட்டு தாக்கறப்ப”.?

“வேற என்ன செய்ய சொல்றே, சொல்லு.. மூலையில் படுத்துக்கிட்டு அழுதுகிட்டிருந்தா தீர்வு கிடைச்சிருமா.?அதுக்காக நான் முயற்சி பண்ணாமலும் இல்லை”.

“ஊம்..போகட்டும்.. எதையும் வெளிக்காட்டிக்காம, என்னவோ சொல்வீங்களே என்ன அது “.

” துன்பம்னு வரப்ப துவண்டு போகாமலும் மகிழ்ச்சி வரப்ப துள்ளி குதிக்காம இருக்கிற ஒரு நிலை.. இறைவன் மேல பாரத்தை போட்டுட்டு அதே சமயம் நம்ம

முயற்சியையும் கை விடாம இருக்கணும்..என்ன இப்ப? அம்மா ஆப்பரேஷனுக்கு உடனடியாக ரூ. 2 1/2 லட்சமும் அப்புறம் தொடர் கீமோ செலவுக்கு ஒவ்வொரு முறையும் சில ஆயிரங்களும் வேணும்..

அம்மா உயிருக்கு முன்னால இந்த தொகை ஒண்ணும் அதிகமில்லைதான் .

எப்படியாவது எங்கேயிருந்தாவது புரட்டி அம்மாவை காப்பாத்திட முடியும்னு ஒரு திட நம்பிக்கை எனக்குள் இருக்கு..”

*

“சார்..அடுத்த வாரம் பிள்ளையாண்டான் +2 முடிவுகள் வருது. சுமாரான மார்க்குகள்தான் வரும்னு அவனே சொல்லிட்டான்..ஆனாலும் அவன் கனவு பொறியியல்..அதுவும் பேமென்ட் சீட்டை தவிர வேற வழியில்லை..”

“இதற்கும் சேர்த்து புரட்டுவோம்; பணம் எப்படியாச்சும்..இன்னம் என்ன சோதனைகள் வந்தாலும் நான் டேக் இட் ஈஸினுதான் இருப்பேன். மனித வாழ்க்கைன்றது சவால்கள் நிறைஞ்சது.. விட்டில் பூச்சி வாழ்க்கைம்பாங்க..சம்சார சாகரம்பாங்க..எதையும் தாங்கும் மனோ திடம் வேணும்..

இதையெல்லாம் வெற்றிகரமா எதிர் கொள்ள வேண்டிய மனோ திடத்தை கடவுள்தான் எனக்கு கொடுக்கணும்..”

அப்போது பார்த்து ஜானகிக்கு அவள் அக்காவிடமிருது செல்லில் ஒரு அழைப்பு..

“என்னங்க..நீங்க அக்கா புருஷன்கிட்ட கைமாத்தா அவசரத் தேவைக்குனு.” என்று பீடிகை போட்டுக் கொண்டிருக்கையிலேயே “ஊம்..ரூ..50 000 வாங்கினேன்தான்..இப்ப அவருக்கு ஒரு அவசரத் தேவைன்றப்ப கொடுக்க வேண்டியதுதானே..நமக்கு என்னைக்கும்தான் பிரச்சினைதான்..என்னைக்கு அலை ஓஞ்சு கடல்ல…ஊம்..”

“உங்களை பார்த்தா பாவமாயிருக்குங்க”.

“தட்ஸால் ரைட்..நீ இதையெல்லாம் போட்டு மனதை உழப்பிக்காதே”.

அப்போது “அண்ணா”,

என்று அழைத்தவாறு,போன வருடம் நான் கடனுடன் பட்டு என் தங்கைக்கு சீரும் சிறப்புமாய் கலியாணம் பண்ணபிறகு, தொடர் வருடாந்திர சீர்கள் ,பிரசவ செலவு எல்லாம் செய்து அவள் கணவன் வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்தவள், கண்களை கசக்கி கொண்டு, உடனடியாய்ரூ. 1 லட்சம் கேட்கிறாங்க . எங்க மாமியார்

வீட்டில் ஏதோ அவசரத் தேவைனு” என்ற போதும்

“அழாதே..அண்ணன் இருக்கேன்ல, பார்த்துக்கிறேன்” என்றேன்.

அப்போது என் மனைவி,

“எப்படிங்க இவ்வளவு பிரச்சினைகளையும்…..எளிதாக ” என்றாள் .

அப்போது ஜானகியை இடைமறித்து “பிரச்சினைகள் வந்து அழுத்தும்போது அதையே நினைச்சுக்கிட்டு இருக்காம மூதறிஞர் ராஜாஜி சொன்னாப்பல

வேற வேலைகளில் கவனம் செலுத்துவேன்.திடீர்னு பிரச்சினைகளுக்கான தீர்வு மனதில் உதிக்கும்..இப்ப அப்படி என்ன தீர்வு கிடைச்சிருக்குனு கேட்கிறியா? எஸ்..நம்ம வீட்டை வித்துதான் சின்ன,

பெரிய கடன்களை அடைக்கிறதோட இப்ப வந்திருக்கிற எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டுவேன்” என்றேன்.

அப்போது என் தம்பி அங்கு வந்து, என் கால்களில் விழுந்து, “என்னை மன்னிச்சிரு அண்ணே..நான் நம்ம பூர்வீக சொத்துக்களை உனக்கு கொடுக்காம பொய் வழக்கு போட்டு ஏமாத்திட்டேன்..அதன் பலன் இப்ப எனக்கு பிசினசில் பலத்த அடி..பிசினஸ் பார்ட்னர்ஸ் என்னை ஏமாத்திட்டாங்க..சொந்த

அண்ணனை வஞ்சித்த பாவம் சும்மா விடுமா? இப்ப நடுத்தெருவுக்கு வர வேண்டிய நிலை வந்துருச்சு..அவருக்கு நியாயமா சேர வேண்டியதை

உடனே போய், இப்ப இக்கட்டான நிலையில் இருக்கிற அண்ணன் கிட்ட கொடுத்துட்டு மன்னிப்பு கேட்டுக்குங்க..”என்றாள்.

அவளிடம் “நான் எங்கே போவேன் அவ்வளவு பணத்துக்குனு’’ கேட்டேன்.

என் சம்சாரத்துக்கிட்ட..அவ அப்பா வீட்டிலிருந்து தனக்கு கிடைச்ச சொத்தை

அடமானம் வச்சாவது உங்களுக்கு கொடுக்க வேண்டியதை உடனடியா கொடுக்கிறதோட, அவங்க கால்களில் விழுந்து ஆசிகள் வாங்கிக்கிட்டு

வாங்கனும்னு சொன்னா..அவளுக்கு இருக்கிற மெச்சூர்ட் மைண்ட் ஏன் எனக்கில்லாமல் போச்சுனு விளங்கலைண்ணே” என்றவனிடம் நான்

எப்படியாச்சும் இந்த சிக்கலிலிருந்து மீண்டு புறப்பட முடியும்..இதுக்காக உன் மனைவி வழி வந்த சொத்துக்களை நீ எக்காரணம் கொண்டும் விற்கவோ, அடமானம் வைக்கவோ மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக்கொடு”.

“எப்படிண்ணே சமாளிக்க முடியும் உங்களால்?”

“நான் என் சொந்த சம்பாத்தியத்தில் பார்த்து,பார்த்து கட்டிய வீடு இருக்குல்ல..அதை அடமானம்..அடமானம்தான் வச்சு இப்பத்திய நிலைமையை எப்படியாச்சும் சமாளிப்பேன்..நீ உன் மனைவி,குழந்தை எல்லாரும் நல்லா இருக்கணும்னு மனப்பூர்வமா ஆசீர்வதிக்கிறேன்..

போ..போய்..உன் மனைவி யோசனையை கேட்டு நீ இந்த இக்கட்டிலிருந்து வெளிவரப்பார்..அப்படியும் முடியலைனா, நான் இந்த என் வீட்டை அடமானம் வைக்கிறதுக்கு பதிலாய் வித்துடறேன்..” என்றேன்.

எல்லோரும் என் யோசனையை ஏற்றுக்கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *