செய்திகள்

புயல் சேதங்களை தடுக்க நடவடிக்கை எடுங்கள்: தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி, டிச.2-

புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அதிக சேதம் ஏற்படாமல் தடுக்கவும், அத்தியாவசிய சேவைகளை விரைவில் தொடரவும் தகுந்த ஏற்பாடுகளை செய்யும் படியும் தமிழக, கேரள அரசுகளையும், லட்சத்தீவு நிர்வாகத்தையும் மத்திய மந்திரி சபை செயலாளர் ராஜீவ் கவுபா கேட்டுக்கொண்டுள்ளார்.

தெற்கு வங்க கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் நிலையில், இதுதொடர்பாக தேசிய நெருக்கடிநிலை நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டத்தை மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா நேற்று தலைமை தாங்கி நடத்தினார்.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக, கேரள தலைமைச் செயலாளர்கள், லட்சத்தீவு நிர்வாக ஆலோசகர் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் செயலாளர்கள் பங்கேற்றனர்.

அப்போது, புயலை எதிர்கொள்ள பல்வேறு துறைகள் எத்தகைய ஆயத்த நிலையில் உள்ளன என்று ராஜீவ் கவுபா ஆய்வு செய்தார். தகுந்த முன்னேற்பாடுகளை செய்யும்படியும், புயலால் அதிக சேதம் ஏற்படாமல் தடுக்கவும், புயலுக்குப் பின் அத்தியாவசிய சேவைகளை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இயல்பு நிலைக்கு கொண்டு வரும்படியும் அவர் ஆலோசனை கூறினார். அப்போது, புயலை எதிர்கொள்ள செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து தமிழக, கேரள தலைமைச்செயலாளர்களும், லட்சத்தீவு நிர்வாக ஆலோசகரும் விளக்கிக் கூறினர்.

இந்திய வானிலை ஆய்வுத் துறை டி.ஜி. கூறும்போது, தென் தமிழக கடலோரப் பகுதிகளிலும், கேரள, லட்சத்தீவிலும் கடும்காற்று வீசக்கூடும் என்றும், இன்று முதல் நாளை வரை இப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். புயலால் பயிர்களுக்கு சேதம் ஏற்படக்கூடும், சில அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய பேரிடர் நிவாரணப் படை டி.ஜி. கூறுகையில், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் மீட்பு அணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழகம் எங்கும் அந்த அணிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *