செய்திகள்

ஜவ்வாதுமலை பழங்குடியின மகளிருக்கு ஆடை உற்பத்தி பயிற்சி

திருவண்ணாமலை, ஜன. 7–

ஜவ்வாது மலைவாழ் பழங்குடியினருக்கான ஆடையகம் உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான பயிற்சி வகுப்பை கலெக்டர் சந்தீப்நந்தூரி துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம், கோவிலூர் ஊராட்சி, ஜமுனாமரத்தூர் சமுதாயக் கூடத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் திட்டம் மூலமாக ஜவ்வாது மலைவாழ் பழங்குடியினருக்கான ஆடையகம் மற்றும் உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான பயிற்சி வகுப்பினை கலெக்டர் சந்தீப் நந்தூரி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, தையல் பயற்சி உபகரணங்கள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாடு அரசின் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், ஜவ்வாதுமலை ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்திடும் வகையில் பழங்குடியினர் நலத் துறையின் நிதி உதவியுடன் ஆடையகம் மற்றும் காலணி உற்பத்தி தொழில் செய்வற்காக 1000 பழங்குடியினர் பயன்பெறும் வகையில் ரூ.90 லட்சம் முதலீட்டில் மேற்கண்ட நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கீழ்அணைக்கரை மேலத்திக்கான், பீமாரப்பட்டி ஆத்திப்பாடி, ஆவூர், கோவிலூர் அம்பேத்கார் நகர் ஆகிய ஊராட்களில் பழங்குடியின மகளிருக்கு ஒரு மாதம் பயிற்சியுடன் ஆடையகம் மற்றும் காலணி புதிய உற்பத்தி நிறுவனம் அமைத்து தரப்படவுள்ளது.

இப்பயிற்சி அளிப்பதன் முக்கிய நோக்கம் பெரும்பாலும் மலைப் பகுதி மக்கள் அதிகமாக விவசாயம் மற்றும் காட்டில் உள்ள பொருட்களை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். அடுத்த தலைமுறையினர் படித்து முடித்தவுடன் இளைஞர்கள், மகளிருக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உருவாக்கும் நோக்கத்தில் இன்று முதல் ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முடிந்தவுடன் இப்பகுதிகயில் ஆடைகள் உற்பத்தி நிறுவனம் ஆரம்பித்து, பெரிய துணி தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து ஆர்டர் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு நீங்கள் நன்றாக பயிற்சி எடுத்துக் கொண்டு, உங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், பயிற்சி முடிந்தவுடன் ஆடைகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான தையல் இயந்திரங்கள் வாங்கி கொடுக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு அரசு மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு 3000 பசுமை வீடுகள் கட்டுவதற்கு ரூ.82.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் 1500 வீடுகள் கட்டப்படவுள்ளது, தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக்கொள்கிறேன். உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வையுங்கள். மலைவாழ் மக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகள் செய்து தரப்படும். அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு, பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்ச முகமை திட்ட இயக்குநர். பா. ஜெயசுதா, ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஜீவாமூர்த்தி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பயிற்சி பெறும் மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *