நாடும் நடப்பும்

சுவிஸ் வங்கி ரகசிய கணக்குகள் அம்பலம்

பொருளாதாரம் கொரோனா பெருந்தொற்று காரணமாக திணறிக்கொண்டிருக்கும் இந்நிலையில் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளவர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள்.

வரி ஏதும் செலுத்தப்படாமல் அதாவது கணக்கில் வராத பணத்தை சுவிஸ் வங்கியில் வைத்திருப்பது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கமாகும்.

உலகெங்கும் உள்ள பெரிய பணக்காரர்கள் உள்நாட்டு வரி சட்டத்தை புறக்கணித்து விட்டு சுவிஸ் வங்கியில் பதுக்கி வைப்பதால் சில ஆண்டுகளுக்கு அப்பணத்தை உபயோகிக்க முடியாது என்றாலும் உலக பணக்காரர்களின் வழக்கமாக இருக்கிறது. தவறான முறையில் சம்பாதிப்பவர்களும் இப்படி பணத்தை ரகசிய கணக்கில் வைத்து இருப்பார்கள்.

சுவிஸ் வங்கி சட்டத்தின்படி எந்த தகவலையும் எந்த அரசுக்கும் வெளிப்படுத்த உரிமையும் சுவிஸ் வங்கியாளருக்கு கிடையாது. கள்ளக்கடத்தல் ஆசாமிகளுக்கும், லஞ்சப் பெருச்சாளிகளுக்கும் சுவிஸ் வங்கி என்றால் மகிழ்ச்சி தரும் இனிய சொல்லாக இருந்தது, ஆனால் சமீபமாக வேப்பிலையைவொடக் கசப்பாக மாறி வருகிறது! ஸ்விட்சர்லாந்தின் பெடரல் வரி நிர்வாகத்துடன் இந்தியா உள்ளிட்ட 86 நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளனர். சர்வதேச நிதி கணக்கியல் தகவல் பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்நாட்டின் பணத்தை பதுக்கி உள்ளவர்கள் விவரத்தை அந்தந்த நாடுகளுக்கு அளிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் சுவிட்சர்லாந்து இடமிருந்து முதலாவது விவரப் பட்டியல் மத்திய அரசுக்கு கிடைத்தது. இந்த ஆண்டு பகிர்ந்து கொள்ளப்பட்ட விவரங்களின் அடிப்படையில் சுவிஸ் வங்கி மூலம் பகிரப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 31 லட்சமாகும். கடந்த ஆண்டு 75 நாடுகளிடையே, இதே எண்ணிக்கையிலான கணக்குகள் பகிரப்பட்டுள்ளன.

பகிரப்பட்ட கணக்குகளில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளார்களா? மொத்தம் தொகை எவ்வளவு என்பன போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. சுவிஸ் வங்கி மற்றும் பிற சுவிஸ் நிதி நிறுவனங்களில் செலுத்தப்பட்ட பண விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவுக்கு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிதி முறைகேடு மற்றும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கியவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அடிப்படையில் இந்த விவரங்கள் கோரி பெறப்பட்டன. இவ்விதம் பெறப்பட்ட விவரங்கள் அனைத்துமே 2018ம் ஆண்டுக்கு முன்பு கணக்கை முடித்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றியதாகும்.

இந்தியா – சுவிட்சர்லாந்து நாடுகள் இடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தானியங்கி முறையில் தகவல் பரிவர்த்தனை செய்து கொள்ளும் விதிமுறையின் கீழ் இந்த பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.

இப்படி கண்டுபிடிக்கப்பட்டவர் யார்? என்ற விவரத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியிடுமா? நிர்பந்தித்து, மிரட்டி நிதி வசூல் செய்ய இந்த இரண்டு சுவிஸ் வங்கி கணக்கு வைத்து மாட்டிக் கொண்டவர்கள் பட்டியலில் இருப்பவர்களை மறைமுகமாக மிரட்டி தேவைப்படும் போது எல்லாம் வாங்கிக்கொள்ள வசதி செய்து கொடுப்பதை விட மத்திய அரசே கறுப்பு பணத்தை வரி செலுத்தியவுடன் உள்ள பணத்தை உரியவருக்கு ஐந்து ஆண்டு பாண்டுகளாக தரவேண்டும்.

இன்றைய சிக்கல்களில் பிரதானமானது பண நெருக்கடி தான். ஆகவே இப்படி ஒன்றுக்கும் உதவாமல் முடங்கி இருக்கும் சுவிஸ் வங்கியில் கணக்கில் உள்ள பணத்தை வெளியே கொண்டு வர வரி சலுகையை தந்தால் கையிருப்பு கறுப்பு பணத்தை மீண்டும் மறு சுழற்சிக்கு கொண்டு வர இது நல்ல முயற்சியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *