செய்திகள்

பட்டா மாற்ற ரூ 15,000 லஞ்சம்: சர்வேயர், உதவியாளர் கைது

Spread the love

காஞ்சீபுரம், அக் 10–

பட்டா மாறுதலுக்கு ரூ 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த விண்ணம்பூண்டியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (62). இவர் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய மதுராந்தகம் தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு சர்வேயரான மதுரையை சேர்ந்த ராஜகுரு (45 ) என்பவரை அணுகினார்.

அப்போது அவர்,‘‘ரூ 23 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்படும்’’ என கூறினார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்லப்பன் இது குறித்து காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரனிடம் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின் பேரில் முதல் தவணையாக ரசாயனம் தடவிய ரூ 15 ஆயிரத்தை செல்லப்பன் ஒரத்தி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். அங்கு சர்வேயர் ராஜகுருவிடம் பணத்தை கொடுத்தபோது, அவர் அந்தப் பணத்தை அருகில் இருந்த தனது உதவியாளர் திருப்பதி என்பவரிடம் கொடுக்கும்படி கூறினார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன் தலைமையிலான போலீசார் பணம் கொடுக்கும்போது இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர் . அவர்களை மதுராந்தகம் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்து ஆவணங்களை சரிபார்த்தனர்.

பின்னர் அவர்களை மதுராந்தகம் குற்றவியல் நடுவர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *