செய்திகள்

மேட்டூர் அணை உபரி நீரை ஏரிகளுக்கு கொண்டு செல்லும் பணி விரைவில் முடிவடையும்

ரூ.565 கோடி செலவில்

மேட்டூர் அணை உபரி நீரை ஏரிகளுக்கு கொண்டு செல்லும் பணி விரைவில் முடிவடையும்

ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு திட்டம் 2022–ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடியும்

சென்னை, பிப்.23–

ரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை வறண்ட ஏரிகளுக்கு கொண்டு செல்லும் பணி விரைவில் முடிவடையும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:–

முதலமைச்சர், தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரங்களை பாதுகாப்பதை தனது முதன்மையான நோக்கமாக கொண்டு அயராது உழைத்துள்ளார். இதன் விளைவாக, ஜல் சக்தி அமைச்சகத்தினால் வழங்கப்பட்ட 2019ஆம் ஆண்டிற்கான தேசிய நீர் விருதுகளில், தமிழ்நாடு முதலிடத்தை வென்றுள்ளது. மிகவும் புகழ்பெற்ற குடிமராமத்து திட்டத்தின் கீழ், மொத்தம் 1,418 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதுவரையில் 6,211 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் 5,586 பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படவுள்ளன. 2020–21 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் குடிமராமத்து திட்டப்பணிகளுக்காக 485.68 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020–21ஆம் ஆண்டில், காவேரி டெல்டா பகுதிகளில் ஆற்றினை தூர்வாரும் 413 பணிகள் 69.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 412 பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டதுடன், மற்றொரு பணியும் விரைவில் முடிக்கப்படும்.

54) பல்வேறு உபவடிநிலங்களைக் கொண்ட காவேரி வடிநிலத்தில் நீர்ப்பாசன உட்கட்டமைப்பினை நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் (நுசுஆ) பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 184 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டளை உயர்மட்டக் கால்வாய் பாசன அமைப்பிலும், 335.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜவாய்க்கால் நீர்ப்பாசன அமைப்பிலும் மற்றும் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நொய்யல் உப வடிநிலத்திலும் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2,639 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கல்லணைக் கால்வாய் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டம், பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான நிதியுதவி ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

3,384 கோடி ரூபாய் செலவில் காவேரி உப வடிநிலத்தில் நீட்டித்தல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள், நபார்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்துவதற்கு, நபார்டு வங்கி அனுமதித்துள்ளது. இத்திட்டத்தை, முதலமைச்சர் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார்.

933 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் உதவியுடன், கீழ் பவானி பாசனப் பகுதிகளில் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டம் விரைவில் தொடங்கப்படும். காவேரி டெல்டாவில், கீழ் வெண்ணாறு வடிநிலத்தில், காலநிலை மாற்றத் தழுவல் திட்டத்தின் முதற்கட்டம் தற்போது ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் அப்பணிகள் நிறைவடையும்.

அத்திகடவு – அவினாசி திட்டம்

1,652 கோடி ரூபாய் செலவில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 24,468 ஏக்கர் பரப்பளவு ஆயக்கட்டு நிலங்கள் பயனடையும் வகையில், அத்திக்கடவு–அவிநாசி வெள்ளக் கால்வாய் திட்டம் 2021 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 565 கோடி ரூபாய் செலவில் மேட்டூர் அணையிலிருந்து வெள்ள உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பணிகள் விரைவில் முடிவடையும். நபார்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் நிதியுதவியுடன், கரூர் மாவட்டத்தில் நஞ்சை புகலூரில் 406 கோடி ரூபாய் செலவில் காவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அணை புனரமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு 803.49 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்ட 89 அணைகளில், 87 அணைகளின் பணிகள் முடிவடைந்தன. மேலும், இத்திட்டம் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அணை புனரமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 610.26 கோடி ரூபாயில் 37 அணைகளுக்கான பணிகளின் ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 4,778 குளங்கள், 477 அணைக்கட்டுகள் மற்றும் செயற்கை முறையில் நீர் செறிவூட்டும் கிணறுகள் புனரமைக்கும் பணிகள், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டத்தில், அனைத்துப் பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. 2020–21ஆம் ஆண்டில் இரண்டாம் கட்டப் பணிகள், 649.50 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தாமிரபரணி இணைப்பு திட்டம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் கொட்டாரை கிராமத்திற்கு அருகில் மருதையார் ஆற்றின் குறுக்கே புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கான பணிகள், 124.20 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன. தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கான பணிகள், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். இத்திட்டத்தால், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் வறட்சி பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள 56,909 ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பயனடையும்.

காவேரி–தெற்கு வெள்ளாறு நதிகள் இணைப்பிற்காக, 6,941 கோடி ரூபாய் மதிப்பில் கொள்கை அளவிலான ஒப்புதலை அரசு அளித்துள்ளது. முதல் கட்டப் பணியாக, கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 331 கோடி ரூபாய் செலவில் வெள்ள நீர் செல்லும் கால்வாய்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 21 ஆம் நாளன்று, முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். 2014ஆம் ஆண்டிலிருந்து, ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் 2,280 கோடி ரூபாய் செலவில் புதிய அணைக்கட்டுகள், புதிய பாசன வாய்க்கால்கள், புதிய பாலங்கள் மற்றும் குளங்களை புனரமைத்தல் ஆகியவற்றுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், 1,522.58 கோடி ரூபாய் செலவில் 288 திட்டங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நடுத்தர சிறிய பாசனத்துக்கு ரூ.6453 கோடி

நீர்ப்பாசனப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, தடுப்பணைகள், குடிநீர் வழங்கல் பணிகள், வெள்ள நீர் கால்வாய்கள் மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு அரசு ஒப்புதலளித்துள்ளது.

இவை, மூலதனப் பணிகளில் செலவினத்தை அதிகரிக்க வேண்டும் என டாக்டர் சி.ரங்கராஜன் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்புடையதாக உள்ளது. அதற்கிணங்க, பெரிய, நடுத்தர மற்றும் சிறிய பாசனம் குறித்த பணிகளுக்கான மூலதன நிதி ஒதுக்கீடு, 2020–21ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 4,882.45 கோடி ரூபாயிலிருந்து, 2020–21ஆம் ஆண்டு திருத்த மதிப்பீடுகளில் 6,389.22 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

2021–22ஆம் ஆண்டு இடைக்கால வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 6,453.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

16 ஆயிரம் ஹெக்டேரில் புதிய மரங்கள்

பசுமைப் போர்வையினை அதிகரித்தல் மற்றும் சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்தல் ஆகிய நோக்கங்களுடன் மாபெரும் மரம் நடும் திட்டத்தினை 2011–12 ஆம் ஆண்டிலிருந்து வனத்துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், அரசு நிலங்கள், தனியார் நிலங்கள் மற்றும் தரம் குன்றிய வனப்பகுதிகளில், நடப்பாண்டில் நடப்பட்டு வரும் 72 இலட்சம் மரக்கன்றுகள் உட்பட, 6.12 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு, அவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, 2019 ஆம் ஆண்டின் இந்திய வனநிலை அறிக்கையின்படி 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, தமிழ்நாட்டில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. மரங்களின் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

நீர்நிலைகள் மாசுபடுவதையும், நீர்நிலைகளில் வண்டல் படிவதையும் குறைக்கும் வகையில், நபார்டு வங்கியின் நிதி உதவியுடன், வைகை, நொய்யல் மற்றும் பாலாற்றின் வடிநிலங்களில் நதிகளுக்குப் புத்துயிர் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அவை சிறந்த பயனை அளித்துள்ளன. தமிழ்நாட்டிலுள்ள மிக முக்கியமான சதுப்பு நிலங்களில் ஒன்றாகவும், வெள்ளம் ஏற்படுவதைத் தடுத்து, நிலத்தடி நீர் வளத்தை மீள்நிரப்புவதிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை காப்பதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது. 165.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக, பள்ளிக்கரணை சதுப்புநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தேசியத் தழுவல் நிதியிலிருந்து நிதியுதவி எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அண்மையில் சென்னை மாநகரின் தெற்குப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளங்களை கருத்திற்கொண்டு, பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதிக்கு நீரைக் கொண்டு செல்லும் நீர்வழிகளை தூய்மைப்படுத்தவும், சதுப்பு நிலத்தின் நீர் உறிஞ்சும் தன்மையை மீட்டமைக்கவும், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்து செயல்படுத்தும் திட்டம் 816.80 கோடி ரூபாய் உத்தேச மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

மனித-வன உயிரின மோதல்களைக் குறைப்பதற்காக வாழ்விட மேம்பாடு, வனப்பகுதிகளில் நீர்வளங்களைப் பெருக்குதல், தீவனப்பயிர் வளங்களை மேம்படுத்துதல், வன எல்லைகளில் தடுப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளைச் செயல்படுத்த பன்முக உத்திகள் மேற்கொள்ளப்படும். பயிர்கள் மற்றும் உடைமைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு பருவநிலை மாற்றம் குறித்த செயல்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு முகமையாக சுற்றுச்சூழல் துறை செயல்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதல் திட்டமாக, மன்னார் வளைகுடாப் பகுதியின் கடற்பகுதி மேலாண்மைக்கான திட்டம் மொத்தம் 24.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்காக பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தேசியத் தழுவல் நிதி அமைப்பின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதுடன், எதிர்காலங்களில் இது போன்ற எண்ணற்ற புதிய திட்டங்களுக்கு முன்னோடித் திட்டமாகவும் அமையும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *