செய்திகள்

இந்தியாவிலேயே சேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலையம் 2–வது இடம்

சிறந்த காவல்நிலையங்களில்

இந்தியாவிலேயே சேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலையம் 2–வது இடம்

மத்திய அரசு விருது

தொடர்ந்து தமிழகத்துக்கு விருதுகள் குவிகிறது

சென்னை, டிச.3–

நாட்டிலேயே சிறந்த காவல்நிலையங்களுக்கான விருதுப் பட்டியலில், சேலம் மாநகரத்தில் அமைந்துள்ள சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையம் இரண்டாம் இடம் பிடித்திருப்பதன் மூலம் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் தலை சிறந்த 10 காவல் நிலையங்களைத் தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.

இந்த விருது, குற்றங்களைக் கண்டறிதல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சட்டம், ஒழுங்கை பாதுகாத்தல், விபத்துக்களை குறைத்தல், விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுதல், சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுதல், குற்றப்பதிவேடுகளை கணினி மூலம் பராமரித்தல், புகார் அளிக்க வரும் பொதுமக்களை வரவேற்கும் முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது

நாட்டின் சிறந்த காவல் நிலையங்களாக அறிவிக்கப்பட்ட 10 காவல் நிலையங்களின் விவரம்:

1. மணிப்பூர் -– தௌபல், – நோங்போக்செக்மை காவல்நிலையம்

2. தமிழ்நாடு – சேலம் மாநகர்,- சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையம்

3. அருணாசலம் -– சாங்லங், கர்சங் காவல்நிலையம்

4. சட்டீஸ்கர் -– சூரஜ்புர், – ஜில்மிலி காவல்நிலையம்

5. கோவா – – தெற்கு கோவா,- செங்குயெம் காவல்நிலையம்

6. அந்தமான் – நிகோவார் தீவுகள் –- வடக்கு மற்றும் மத்திய அந்தமான், – காலிகட் காவல்நிலையம்

7. சிக்கிம் –- கிழக்கு மாவட்டம், – பாக்யோங் காவல்நிலையம்

8. உத்தரப்பிரதேசம் -– மொராதாபாத், – காந்த் காவல்நிலையம்

9. தாத்ரா மற்றும் நாகர் ஹேவேலி –- தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, – கான்வெல்

10. தெலங்கானா -– கரீம்நகர், – ஜம்மிகுண்டா நகரம் காவல்நிலையம்.

விரைவில் இதற்கான விருதுகள், அந்தந்த காவல் நிலையங்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

முந்தைய ஆண்டுகளில் பெற்ற விருதுகள்

கடந்த 2017-–ம் ஆண்டில் நாட்டின் 10 சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில், கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் இடம் பிடித்தது.

அதேபோல கடந்த 2018-–ம் ஆண்டு தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலையம் 8-ஆவது சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது.

2019-–ம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களில், தமிழ்நாட்டின் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் 4-வது இடத்தைப் பிடித்தது.

இதன் மூலம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தமிழக காவல்துறையைச் சேர்ந்த காவல் நிலையங்கள், சிறந்த காவல் நிலையங்களில் பட்டியலில் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதில் இரண்டு முறை தேனி மாவட்ட காவல்துறைக்கு கீழ் இருக்கும் காவல் நிலையம், சிறந்த காவல் நிலைய பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

விருதுகள் குவிகிறது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து தொடர்ந்து பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது. அந்த வகையில் இன்று சேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலையம் விருது பெற்று மற்றொரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *