புதுடெல்லி, ஜூலை 20–
நீட் தேர்வில் தமிழில் எழுதிய மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட் கிளையின் உத்தரவிற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
நீட் தேர்வில், தமிழ் விடைத்தாளில் குளறுபடி இருப்பதால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மார்க்சிஸ்ட் எம்.பி.ரங்கராஜன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் மதுரை கிளை நீதிபதிகள் தீர்ப்பு அளிக்கையில், தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். 49 வினா- விடைகள் தவறாக இருந்ததால் கேள்விக்கு 4 மதிப்பெண் என்று மொத்தமாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும். அதோடு புதிய மதிப்பெண் அடிப்படையில் சிபிஎஸ்இ புதிய தரவரிசை பட்டியல் உருவாக்க வேண்டும். அதன்பின் கலந்தாய்வு தேதிகளை அறிவிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவை கடந்த 10–ந்தேதி பிறப்பித்தது. ஐகோர்ட் கிளையின் இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் நேற்று நடந்த விசாரணையின்போது, தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் தவறாலேயே தமிழ் வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டதாக சிபிஎஸ்இ தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.