சிறுகதை

சுமை | ராஜா செல்லமுத்து

Spread the love

நட்சத்திரங்கள் பூக்க ஆரம்பிக்கும் ஓர் இரவு நேரம்..

கூட்டம் பிதுங்கி வழியும் பேருந்துகள் வந்து போகும் கோடம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஆளுக்கொரு ஆசைகளை நெஞ்சில் சுமந்து கொண்டு பேருந்துக்காக நின்றிருந்தனர் மக்கள் .

எத்தனை எத்தனையோ மனிதர்களின் கனவுகளையும் லட்சியங்களையும் கொஞ்சங்கூட ஈவு இரக்கமில்லாமல் நசுக்கிய அந்தத் தார்ச்சாலையில் விர் விர்ரென விரைந்து கொண்டிருந்தன வாகனங்கள் . அப்போது போரூர் செல்லும் ஒரு பேருந்தை நோக்கி வந்து கொண்டிருந்தது ஒரு கூட்டம். அந்தக் கூட்டத்தில் முண்டியடித்து உள்ளே ஏற முற்பட்டார் முனியாண்டி.

‘‘இதுல எடம் இல்ல.. அடுத்த பஸ்ல ஏறு.. போ..போ..’’ என்று விரட்டினார் கண்டக்டர்.

‘‘சார்.. ஒரு ஓரமாக நின்னுக்கிறனே..!’’ என்று கெஞ்சாத குறையாக முனியாண்டி கேட்டான்.

போ..போ.. இந்த வண்டியில எடம் இல்ல , அடுத்த வண்டியில வா..’’ என்று மீண்டும் விரட்டினார் கண்டக்டர்.

தோளில் சுமந்து கொண்டிருந்த சுமையோடு அந்தப் பேருந்தை விட்டு விலகிய முனியாண்டி ஆட்கள் நின்று கொண்டிருக்கும் பகுதிக்கு வர பேருந்துக்காகக் காத்திருந்த கூட்டம் முனியாண்டியைப் பார்த்து சற்று விலகியது. இது எதையும் கவனிக்காத முனியாண்டி இந்த வயதான காலத்திலும் தோளில் கனக்கும் சுமையைச் சுமந்து கொண்டே நின்றுகொண்டிருந்தார்.

‘‘அடப்பாவி பயலுகளா.. ஒரு பஸ்லயும் ஏறவிட மாட்டேன்கிறானுகளே..! நானும் மனுசன் தாண்டா..! என்னைய மட்டும் ஏன்? ஏற வேணாம்னு சொல்றிங்க.. நானும் இந்த நாட்டுக்காரன் தானே..!’’ என்று புலம்பிய படியே கவலைப்பட்டுக் கொண்டார்.

அந்தச் சுமையோடே நின்று கொண்டு எதிர்வரும் அடுத்த பேருந்தை எதிர்நோக்கிக் காத்துக் கிடந்தார்.

‘‘பாம்…பாம்..’’என்ற பெரும் சத்தத்துடன் இன்னொரு பேருந்து வர அந்தப் பேருந்தை நோக்கி ஜனக் கூட்டம் ஓட அதையும் விடாமல் அதிலும் முண்டியடித்து ஏற முயற்சி செய்தார் முனியாண்டி.

ம்ஹூகும். அதிலும் அவர் ஏற அந்தப் பேருந்தின் கண்டக்டர் அனுமதிக்க வில்லை.

‘‘போ..போ.. இந்த பஸ்ல எடம் இல்ல.. அடுத்த வண்டியில வா.. என்று அந்த கண்டக்டரும் விரட்டினார் .

‘‘என்னசாமி.. எல்லா பஸ்லயும் என்னைய ஏறவிடமாட்டேன் கிறீங்க..? நான் மனுசன் இல்லையா..?’’ என்று புலம்பியவாறே மறுபடியும் தோளில் தொங்கும் அந்த மூட்டையைச் சுமந்த வாறே பிளாட்பாரம் நோக்கி வந்தார் முனியாண்டி. அவர் தோளில் பிளாஸ்டிக் பையால் ஆன அந்த சுமையைத் தூக்கி வரவும் பேருந்துக்காக நெருங்கி நின்றிருந்த ஆட்கள் கொஞ்சம் வழி விட்டனர்.

‘‘ஏன்..? நம்ம பாத்து இப்பிடி ஒதுங்குறாங்க..’’ என்ற முனியாண்டி தன் சட்டை,வேட்டியைப்பார்த்தார், அது கொஞ்சம் அழுக்காகவும் கொஞ்சம் கிழிந்தும் இருந்தது. காலில் கட்டு, அழுக்கேறிய தேகம் என்று இருந்தார் முனியாண்டி.

‘‘ஓ.. – இது தான் – இவங்களுக்குப் பிரச்சினையா..? அதான் நாம வரவும் இந்த ஆளுக.. எல்லாம் தள்ளிப்போறாங்களா..? இருக்கட்டும்..இருக்கட்டும்.. ரோட்டுல குப்ப பொறுக்கிற நம்மல எவன் மதிப்பான்.. நம்ம போட்டுருக்கிற டிரஸ்ஸ பாத்திட்டு.. தான் எவனும் நம்மள பஸ் ல ஏத்த மாட்டேன்கிறானுக போல..’’ என்று புலம்பிய படியே நின்று கொண்டிருந்தார் முனியாண்டி. அப்போது தினமும் அவரை கவனித்துக் கொண்டிருந்த சார்லஸ்

‘இன்று இந்தப் பெரியவரிடம் கேட்டு விடலாம்..’ என்ற முடிவோடு முனியாண்டியை நோக்கி வந்தான். தோளில் சுமந்த அந்தப் பிளாஸ்டிக் பையைச் சுமந்து கொண்டும் வாயில் ஏதோ வார்த்தையை முணுமுணுத்துக் கொண்டுமிருந்த முனியாண்டியிடம் வந்த சார்லஸ்

‘‘ஐயா..’’ என்று மெல்லக் கூப்பிட இது எதையும் காதில் வாங்காத முனியாண்டி பேருந்து வரும் திசையையே பார்த்துக்கொண்டிருந்தார்.

‘‘ஐயா..’’என்று மறுபடியும் சார்லஸ் கூப்பிட தோளில் சுமந்து கொண்டிருந்த சுமையோடு அப்படியே திரும்பி சார்லஸை ஒரு பார்வை பார்த்து விட்டு மறுபடியும் பேருந்து வரும் திசையை நோக்கி எதிர்பார்த்துக் கிடந்தார்.

‘‘பாம்…பாம்..’’ என்று ஒரு பேருந்து சத்தமிட்டுக் கொண்டுவர அந்தப் பேருந்திலும் ஏற ஒரு கூட்டம் ஏறியது. கொஞ்சங்கூட வருத்தப்படாமல் மறுபடியும் தோளில் சுமந்த சுமையுடன் அந்தப் பேருந்தை நோக்கி ஓடினார் முனியாண்டி. வழக்கம் போலவே அந்தப் பேருந்து நடத்துனரும் அந்தப் பஸ்ஸில் முனியாண்டியை ஏற விடவில்லை ஆட்களை முண்டியடித்து ஒரு வழியாக ஏறி ஒரு படியில் முனியாண்டி கால் வைக்க

‘‘ஏய்..ஏய்.. இந்த பஸ்ல ஏறாத.. அடுத்த பஸ்ல வா.. கீழ எறங்கு..’’ என்று அந்தக் கண்டக்டரும் விரட்ட

‘‘ஐயா.. போரூர்ல எறங்கிக்கிறேன்..’’ என்று அழாத குறையாகக் கேட்ட முனியாண்டியின் வார்த்தையைக் கொஞ்சங் கூட காதில் வாங்காத அந்தக் கண்டக்டர்.

‘‘இல்ல.. நீ.. அடுத்த பஸ்ல வா..’’ என்று விடாப்பிடியாக அவரை ஏறவே அனுமதிக்கவில்லை. இது அத்தனையும் கவனித்துக் கொண்டிருந்த சார்லஸ் மறுபடியும் முனியாண்டியிடம் வந்தான்.

‘‘ஐயா..’’ என்று மறுபடியும் கூப்பிட தோளில் சுமந்த சுமையுடன் அடுத்த பேருந்தை நோக்கிப்பார்த்துக் கொண்டிருந்த முனியாண்டி இந்த முறை சார்லஸை உற்று நோக்கினார்.

‘‘தம்பி என்னைய வா.. கூப்பிட்டிங்க..!’’என்று ஆச்சர்யமும் வியப்பும் கலந்து கேட்டார்.

‘‘அப்ப இருந்து உங்கள தான் கூப்பிட்டுட்டு இருக்கேன் ஐயா..’’என்று சார்லஸ் சொல்லவும் முனியாண்டியின் கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் வழிந்தது.

‘‘ஐயா ஏன்.. அழுறீங்க..?’’ அக்கறையோடு கேட்டான் சார்லஸ்.

‘‘தம்பி.. என்னைய.. எல்லாரும் ,ஏய், நாயே ,,பன்னி, கழுத , பைத்தியம், அவன், இவன்னு இப்பிடி தான் என்னைய கூப்பிடுவாங்க..ஏன்னா..? என்னோட டிரஸ், என்னோட சாக்குப்பையி.. என்னோட கால்ல போட்டுருக்கிற கட்டு.. ரொம்ப நாள் குளிக்காம அழுக்குப்படிஞ்ச என்னோட உருவம், எல்லாமே மத்தவங்க பார்வைக்கு கேவலமா தானே இருக்கும் – என்னோட வாழ்க்கையில மொத மொதலா என்னைய ஐயா ன்னு கூப்பிட்ட மொத ஆளு நீங்க தான் தம்பி. எப்பிடி நீங்க மட்டும் என் கூட பேசணும்னு ஆசப்பட்டிங்க..’’ என்று முனியாண்டி கேட்டார்.

‘‘இல்லய்யா.. நானும் தெனமும் இதே கோடம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுல.. இருந்து தான் பஸ் ஏர்றேன்.. – நீங்க இந்த மூட்டைய தூக்கிக்கிட்டு ஓடுறதும் கண்டக்டர் ஒங்கள எந்த பஸ் லயும் ஏற விடாம துரத்தி விடுறதயும் தெனமும் நான் பாத்திட்டுத்தான் இருக்கேன். எங்க போகப் போறீங்க..? இந்த சாக்கு பையில என்ன இருக்கு..?’’என்று அக்கறையோடு சார்லஸ் கேட்டான்.

‘‘ஒன்னுல்லப்பா.. ராத்திரி ஆனா.. பனி ஓவரா இருக்கு.. வெளிய படுக்க முடியல.. சரி கோடம்பாக்கத்தில இருக்கிற பார்க்குக்கு வெளிய படுக்கலாம்னு போனா..இங்க எல்லாம் படுக்கக் கூடாதுன்னு போலீஸ்காரங்க அடிச்சு தொரத்துறாங்க.. அதான் போரூர்ல ஒரு கோயில் இருக்கு, அங்க போய் படுத்துக் கிரலாம்னு பாக்குறேன்.. எந்த பஸ் லயும் என்னைய ஏத்த மாட்டேன்கிறாங்க.. கால்ல அடிபட்டிருக்கு அரசாங்க ஆசுப் பத்திரியில கட்டு போட்டுருக்கேன் – என்னால நடக்க முடியல.. இல்லன்னா நடந்தே போயிருவேன் -தெனமும் பஸ்ல ஏறப் பாப்பேன் – முடியாது – அப்பிடியே இந்த கோடம்பாக்கத்திலயே எங்கனயாவது தூங்கிருவேன்..’’என்று முனியாண்டி சொன்னபோது சார்லஸ்க்கு அவரை பார்க்க பாவமாக தோன்றியது. அப்போது அவன் ஏறவேண்டிய பஸ் வர,

‘‘ஐயா நான் வாரேன்..’’ என்று ஓடி ஏறினான்.

அன்று இரவும் முனியாண்டி கோடம்பாக்கத்திலேயே தூங்க வேண்டியதாயிற்று.

மறுநாள் அதே இரவு, அதே பை, அதே உடை, அதே கோடம்பாக்கம் பஸ் ஸ்டாப், அதே முனியாண்டி, அதே பேருந்து, அதே கண்டக்டரின் திட்டுகள்,

‘‘இந்த கிறுக்குப் புடிச்ச கெழவனுக்கு வேற வேல இல்லையா..? தெனமும் பைய தோள்ல போட்டு, பஸ் ஏற வாராதே ஒரு வேலையா போச்சு..’’ என்று கண்டக்டர் திட்டினர்.

அன்றும் சார்லஸ் பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்த முறை முனியாண்டியிடம் பேசும் சார்லஸின் பேச்சின் நீளம் கூடியது.

‘‘தம்பி.. எனக்கு ரெண்டு ஆம்பளபுள்ள, ஒரு பொம்பள புள்ள..ஊரு திருநெல்வேலிப்பக்கம், எம் பொண்டாட்டி என்னைய விட்டுட்டு செத்துப் போகவும் மகனும் மருமக புள்ளைகளும் யாரும் பாக்கலப்பா.. காடே பரதேசமா.. ஊர் ஊரா சுத்திட்டு, கடைசியில இந்த மெட்ராஸ்ல வந்து சேந்திட்டேன் – இன்னி என்னப்பா..! இன்னும் கொஞ்சக்காலம் தான் வாழ்க்கை அடுத்த கதவ தொறந்தா மரணம் – இனி எனக்கு என்ன இருக்கு..? கெடைக்கிறத சாப்பிட்டுட்டு போய்ச் சேர வேண்டியதுதான்..’’ என்று வாழ்க்கைச் சித்தாந்தங்களை ரொம்பவே சாதாரணமாகப் பேசினார் முனியாண்டி.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சார்லஸுக்கு கண்களிலிருந்து கண்ணீர் கட கடவென வழிந்தது.

‘‘தம்பி.. நீ.. ஏய்யா அழுற..? என்னோட விதி அவ்வளவு தான்..’’ – என்று சொல்லிக் கொண்டே முதுகில் தொங்கும் பையை த் தூக்கி மறுபடியும் ஒரு முறை போட்டுக் கொண்டார்.

‘‘ஒண்ணல்லய்யா.. அம்மா, அப்பா, இருக்கிறவன், அவங்கள சரியா பாக்க மாட்டேன்கிறேன்.. – சரியா பாத்துக்கிறவனுக்கு அம்மா அப்பா இருக்கிறது இல்ல இதுதான் உலகம்..’’ என்று சார்லஸ் சொல்ல முனியாண்டியும் அழுதார்.

‘‘ஐயா.. நீங்க ஏன் அழுறீங்க..?’’ என்று சார்லஸ் கேட்க

‘‘ஒண்ணுல்லயா..?’’ என்று சொல்லியவாறே வழியும் கண்ணீரை இடது கையில் துடைத்துக் கொண்டார்.

‘‘ஐயா.. நீங்க எங்க வீட்டுக்கு வாரீங்களா..?’’ என்று சார்லஸ் கேட்ட போது

‘‘என்னய்யா.. இந்தப் பிச்சக்காரனப் போயி வீட்டுக்கு கூப்பிட்டுட்டு இருக்க..? வேணாம்யா.. ஒங்க.. வீட்டுல ஒன்னைய திட்டப்போறாங்க..’’ என்று முனியாண்டி சொல்ல

‘‘இல்லய்யா.. என்னோட வீட்டுல நான், என் பொண்டாட்டி என்னோட புள்ளைங்க தான் இருக்காங்க.. – எனக்கும் அப்பா, அம்மா ரெண்டு பேரு மே இல்ல.. நீங்க வாங்க.. எங்க வீட்டுல இருங்க..’’ என்று சார்லஸ் சொன்னபோது முனியாண்டிக்கு மடை திறந்த வெள்ளமாய், கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு அன்றே சார்லஸ் தன் வீட்டிற்கு முனியாண்டியை அழைத்துச் சென்றான். எவ்வளவோ சொல்லியும் முனியாண்டி வீட்டிற்குள் வரவே இல்லை. – முனியாண்டியைக் காலையில் எழுப்பிக் குளிக்க வைத்தான் சார்லஸ்.

புதிய உடையைக் கொடுத்தான். இதையெல்லாம் பார்த்த முனியாண்டிக்கு தன் பிள்ளைகளின் மீது கோபம் வந்தது.

முனியாண்டி எவ்வளவோ சொல்லியும் சார்லஸ் விடவே இல்லை வீட்டிற்குள் அழைத்துச் சாப்பாடு போட்டான்.

‘‘அப்பா.. சாப்பிடுங்கப்பா..’’ என்று சார்லஸ் மனைவி சொன்ன வார்த்தையும் முனியாண்டியை என்னவோ செய்தது.

அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தார். எல்லாம் வறுமை நிறைந்து வழிந்தது சார்லஸின் கஷ்டத்தை உணர்ந்து கொண்டார் முனியாண்டி. இந்த வறுமையிலும் நேர்மை, அன்பு, பாசம், காட்டும் சார்லஸை முனியாண்டிக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால் அவர் மனதில் ஏதோ ஒன்று சிக்கிக்கொண்டு தவித்தது.

‘‘ச்சே.. – பாவம் இவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கிற இந்த நல்ல மனுசனுக்கு நாமளும் கஷ்டம் குடுக்கக் கூடாது..’’ என்று நினைத்த முனியாண்டி ஓர் இரவு சார்லஸ் வீட்டை விட்டுக் காணாமல் போயிருந்தார். சார்லஸ் முனியாண்டியை எல்லா இடத்திலும் தேடிப்பார்த்தான், அவர் கிடைக்கவே இல்லை.

‘‘ஏங்க..அந்தப் பெரிய வரு.. எப்பவுமே இந்தப் பைய தோள்லயே போட்டுட்டு இருப்பாருல்ல.. இதக் கூட மறந்து வச்சிட்டுப் போயிட்டாருங்க..’’ என்ற போது சார்லஸ் அந்தப் பையை எடுத்து ஓரம் வைத்தான்.

‘‘ஏங்க அந்தப் பையில என்ன இருக்குன்னு பாருங்க..’’ என்று சார்லஸ் மனைவி சொன்னபோது

‘‘வேணாம் அடுத்தவங்க பொருள தொடக் கூடாது..’’ என்று சார்லஸ் சொல்ல

‘‘அதில ஏதாவது டிரஸ் இருந்தா தொவச்சு போடலாம்ங்க அதான் சொன்னேன்..’’ என்று சார்லஸ் மனைவி சொல்ல அந்தப் பையை எடுத்து மெல்லத் திறந்தான் சார்லஸ். பார்த்தவனுக்குப் பகீரென்றது. அந்தப்பையில் கத்தை கத்தையாய் பணம் மெய்சிலிர்ந்து நின்றான் சார்லஸ். அதில் கடிதம் ஒன்று இருந்தது. அதை எடுத்து படித்தான் சார்லஸ்

‘‘பெத்த புள்ளைக கூட பாக்காத இந்த உலகத்தில யாருன்னே தெரியாம என்னைய அப்பான்னு சொன்ன சார்லஸ்.. நீ.. நல்ல மனுசன்.. நீ.. நல்லா இருக்கணும்..எனக்கு இந்தப் பணம் வேண்டியதில்ல.. எல்லாமே உனக்குத் தான்..

‘‘அன்புடன் முனியாண்டி’’ என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தை படித்து முடித்ததும் சார்லஸ்க்கு கண்கள் கலங்கியிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *