செய்திகள்

ஆந்திர அணைகளில் போதிய அளவு தண்ணீர்: தமிழகத்துக்கு 3.5 டிஎம்சி கிருஷ்ணா நீா் கிடைக்க வாய்ப்பு

Spread the love

சென்னை, ஜன 2–

ஆந்திர மாநில அணைகளில் தற்போது போதிய அளவு தண்ணீர் இருப்பதால் அடுத்த மாதம் (பிப்ரவரி) வரை சென்னை அருகே உள்ள பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்பட உள்ளது.

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டிஎம்சியும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும் வழங்க வேண்டும்.

கண்டலேறு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் 2-வது தவணையாக வழங்க வேண்டிய கிருஷ்ணா நீர் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி தாமதமாக பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்டது. இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் பருவமழை கொட்டி தீர்த்ததால், சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு அதிக அளவு தண்ணீர் அனுப்பப்பட்டது. இதன் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் அதிகபட்சமாக 850 கனஅடி வரை திறக்கப்பட்டது. இதனால், வறண்டு கிடந்த பூண்டி ஏரியின் நீர் இருப்பு படிப்படியாக அதிகரித்தது. தொடர்ந்து பூண்டி ஏரிக்கு 350 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

பூண்டி ஏரியில் இன்று காலை நிலவரப்படி 1,430 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது (மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி). சென்ற ஆண்டின் இதே நாளில் 294 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருந்தது.

இந்த ஏரியிலிருந்து இருந்து சென்னை குடிநீருக்காக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

கண்டலேறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் அடுத்த மாதம் (பிப்ரவரி) வரை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்படும் என்று ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை 3.5 டிஎம்சி கிருஷ்ணா தண்ணீர் கிடைத்து உள்ளது. பிப்ரவரி மாதம் வரை கிருஷ்ணா நீர் திறக்கப்படும் பட்சத்தில் சுமார் 7 டிஎம்சியை தாண்டி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் 3 அல்லது 4 முறை மட்டுமே 7 டிஎம்சி தண்ணீரை ஆந்திர மாநில அரசு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை மட்டும் 8 டிஎம்சி தண்ணீர் கிடைத்து உள்ளது. அதிக முறை 4 முதல் 4.5 டிஎம்சி தண்ணீர் தான் கிடைத்திருக்கிறது.

இதேபோன்று, சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளிலும் ஓரளவு தண்ணீர் உள்ளதால் வரும் கோடை காலத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோழவரம் ஏரியில் 69 மில்லியன் கனஅடியும் (மொத்த கொள்ளளவு 1081 மி. கனஅடி), புழல் ஏரியில் 2477 மி.கனஅடி (3300 மி.கனஅடி), செம்பரம்பாக்கம் ஏரியில் 1,694 மி.கனஅடி (3,645 மி.கனஅடி)யும் தண்ணீா் இருப்பு உள்ளது. குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் உள்ளிட்ட 4 ஏரிகளையும் சேர்த்து 5 ஆயிரத்து 670 மி.கனஅடி தண்ணீர் (5.6 டி.எம்.சி.) உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *