செய்திகள்

தலைவனுக்கு இருக்க வேண்டிய முதன்மை தகுதி எது? கிறிஸ்துமஸ் விழாவில் எடப்பாடி சொன்ன கதை

சென்னை, டிச.21–

தலைவனுக்கு இருக்க வேண்டிய முதன்மை தகுதி என்ன என்பதை ஒரு சிறிய கதை மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கினார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

சாலையோரமாக இருந்த மரத்தடி நிழலில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவனுடைய கையில் அப்போதுதான் மேலிருந்து கீழே தவறி விழுந்து, சிறகு முறிந்துபோன ஒரு பறவை இருந்தது. சிறுவன் தன் கையிலிருந்த அந்தச்சிறகு முறிந்து போன பறவையை வாஞ்சையோடு தடவிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து அந்த வழியாக பெண்மணி ஒருவர் வந்தார். இயல்பிலேயே இரக்க குணம் நிறைந்த அவர், மரத்தடியில் சிறுவன் அமர்ந்திருப்பதையும் அவனுடைய கையில் சிறகு முறிந்துபோன பறவை இருப்பதையும் கண்டார். சிறுவனின் அருகே சென்ற அந்தப் பெண் “தம்பி! உன் கையிலிருக்கும் சிறகு முறிந்து போன இந்தப் பறவையை என்னிடம் தருகிறாயா? அதை நான் வீட்டுக்குக் கொண்டுபோய், அதற்கு மருத்துவம் பார்த்து, அது குணமடைந்ததும் உன்னிடமோ அல்லது இங்கிருக்கும் காட்டிலோ விட்டு விடுகிறேன்!” என்றார். அதற்கு அந்தச் சிறுவன் அவரிடம், “வேண்டாம் அம்மா! இந்தப் பறவையை நானே பார்த்துக் கொள்கிறேன். ஏனென்றால், இந்தப் பறவையை என்னைவிட சிறப்பாக வேறு யாராலும் கவனித்துக் கொள்ள முடியாது!” என்றான்.

கால் ஊனம்

“உன்னைப் போல அந்தப் பறவையை வேறு யாராலும் சிறப்பாகக் கவனித்துக் கொள்ள முடியாது என்று எதை வைத்துச் சொல்கிறாய்” என்று அந்த பெண்மணி கேட்க, சிறுவன் மெல்ல எழுந்து நின்றான். அப்போதுதான் அந்தச் சிறுவனின் ஒரு கால் ஊனம் என்பதை அந்தப் பெண் கவனித்தார். அவருக்குக் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. இருந்தாலும் அதை அடக்கிக்கொண்டு, “ஆமாம் தம்பி! நீ சொல்வதும் சரிதான். இந்தப் பறவையை உன்னை விட வேறு யாராலும் அவ்வளவு சிறப்பாகக் கவனித்துக் கொள்ள முடியாது” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றார்.

இந்த நிகழ்வில் அந்தச் சிறுவன் சிறகு முறிந்து போன பறவையின் துயரத்தைத் தன்னுடைய துயரமாகப் பார்த்தான். அதனால்தான் அந்தப் பறவையைத் தானே கவனித்துக் கொள்வது என்று முடிவு செய்தான். ஓர் உண்மையான மனிதனுக்கு அல்லது தலைவனுக்கு இருக்க வேண்டிய முதன்மையான தகுதி துன்புறும் சக மனிதனின் துன்பத்தைத் தன்னுள் ஏற்று, அவனுடைய துன்பத்தை இன்பமாக மாற்ற முயலுவதே. ஆண்டவராகிய ஏசுபிரான் கிறிஸ்து மக்களின் துன்பத்தைத் தன்னுடைய துன்பமாக ஏற்றுக் கொண்டார்.

பரிவுள்ளம்

ஏசுபிரான், பரிவுள்ளம் கொண்டவராக இருக்கின்றார் என்று சிந்தித்த நாம், அவரைப்போல நம்முடன் வாழ்பவர்களிடம், நாம் சந்திக்கின்ற ஏழை எளிய மக்கள் மீது பரிவுகொண்டு வாழ்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பல நேரங்களில் மக்களைப் பற்றிய அக்கறை சிலருக்கு இருப்பதில்லை என்பது வேதனையான விஷயம். ஆகவே, நாம் ஆண்டவர் ஏசுவைப் போல பரிவுள்ளம் கொண்டவர்களாக வாழ வேண்டும். நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கின்றோமோ, அதையே மற்றவர்களுக்கு நாம் செய்யவேண்டும் என்ற ஏசுபிரான் போதனையை மனதில் கொண்டு, அனைவரையும் சமமாக பாவித்து, அன்பு செலுத்திடவேண்டும் என்று கேட்டுக் கொண்டு, கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *