செய்திகள்

காழ்ப்புணர்ச்சியில் எது எதையோ பேசுகிறார் ஸ்டாலின்: அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

சென்னை, ஜன. 29

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பதவி வெறியில் கண்டபடி பேசுகிறார் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அரங்கில் மண்டல இணைப்பதிவாளர் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக அரசு 2 கோடியே 30 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தீர்மானித்தது. இதில் ஒரு கோடியே 98 லட்சத்து 39 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இதில் ஒரு சின்ன பிரச்சனை கூட இல்லாமல் நடந்துள்ளது. 98.9 சதவிகிதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவே எங்கள் அரசின் சரியான திட்டமிடலுக்கு நல்ல உதாரணம்.

வெங்காயம் விலை குறையும் என கூறினோம். தற்போது சின்ன வெங்காயம் 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மூன்று ஆண்டு காலஆட்சி காலத்தில் 23 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுவே தி.மு.க.வின் ஐந்து ஆண்டுகால ஆட்சியில் 9163 கோடி ரூபாய் தான் வழங்கப்பட்டது.

செயல்படாத அரசா?

எங்களது அரசைப் பார்த்து எதிர்க்கட்சித்தலைவர் செயல்படாத அரசு என்கிறார். நாங்கள் வாக்குறுதி கொடுத்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி உள்ளோம். வாக்குறுதி கூறாத குடிமராமத்துப் பணியையும் முழுவதுமாக முடித்ததால் இன்று நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சினை இல்லாத நிலை உள்ளது. பிரதமர் மோடி இதை எல்லா மாநிலங்களுக்கும் செயல்படுத்த கூறியுள்ளார்.

நாங்கள் எதிர்க்கட்கட்சிகளின் போராட்டத்திற்கு முழுமையான பாதுகாப்பு கொடுத்து வருகிறோம். எதிர்க்கட்சிகளை நாங்கள் நசுக்கவில்லை. தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது பொய் வழக்கு போடுவது இல்லை. 34,000 போராட்டங்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு கொடுத்துள்ளது. அமைச்சர் கருப்பண்ணன் பேசியது டங் ஸ்லீப். எதிர்க்கட்சித் தலைவர் அந்தமான் தீவை ஜப்பான் வழங்கியதாக பேசியது போல் அவருக்கு ஏற்பட்ட பிழை. அவர் கூறியதும் தவறுதான்.

கிராம பஞ்சாயத்துகளுக்கு மாநில அரசு நிதி ஒதுக்குவதில்லை. மத்திய அரசு நிதி நேரடியாக வருகிறது. அது நேரடியாக எல்லா பஞ்சாயத்துகளுக்கும் கிடைக்கும். பதவி வரும்போது பணிவு வர வேண்டும். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வெறியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஆகிவிட்டாரே என தாங்கமுடியாமல் காழ்ப்புணர்ச்சியில் கண்டபடி பேசியுள்ளார்.

மத்திய அரசு தமிழகத்திற்கு விருது வழங்கியது. 18 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்களில் அங்கு நடைபெற்ற பணிகளை மார்க் அடிப்படையில் ஆய்வு செய்து பல்வேறு உயர் அதிகாரிகள் அமைப்புகள் விருதுக்கு பரிந்துரை செய்தனர். கேரளாவில் எதிர் கட்சி தலைவர் தனி ஒருவரிடம் வாங்கிய விருதை அது அப்படிப்பட்ட விருது இப்படிப்பட்ட விருது என கூறினார். அதுபோன்ற விருது இது அல்ல. இவர் விருது வழங்கியவர்களை உதைக்க வேண்டும் என கூறியதால் மற்ற மாநில மக்கள் என்ன நினைப்பார்கள். ஏன்? இவர் கட்சியில் இருக்கும் தலைவர்கள் என்ன நினைப்பார்கள். பத்தாம்பசலி தனமான ஒரு தலைவரை நாம் பெற்றுள்ளோம் என நினைக்க மாட்டார்களா? கோபத்தின் உச்சகட்ட வெறியின் வெளிப்பாடுதான் இது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *