போஸ்டர் செய்தி

‘மிசா’வில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; 2 நாளில் ஆதாரம் வெளியிடுவோம்: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

Spread the love

சென்னை, நவ. 8–

மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களை 2 நாளில் வெளியிடுவோம் என்று அமைச்சர் மா.பா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் மிசாவில் கைதானதற்கான நோட்டீஸ் ஆதாரத்தைக் காண்பிக்காதது ஏன் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என அமைச்சர் பாண்டியராஜன் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, அமைச்சர் பாண்டியராஜனை எதிர்த்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை கைவிடும்படி தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், அமைச்சர் பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், எதை புரிந்து கொண்டார் என்பதை அவர் பேச்சு காட்டிவிட்டது என்றும் அவர் விமர்சனம் செய்திருந்தார்.

ஏன் ஆவணத்தை காட்டவில்லை

ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பதில் தெரிவிக்கும் வகையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில், “ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு நாங்கள் பதில் அளிப்போம். கட்சி ரீதியாக அந்த பதில் இருக்கும். மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதானாரா, இல்லையா என்பது குறித்து 2 நாளில் ஆதாரத்துடன் பதிலடி கொடுப்பேன். மிசா சமயத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நோட்டீஸ் அவரிடம் இருக்கும். அதன் நகல்கள் ஆவணக் காப்பகத்திலும் நீதித்துறையிலும் இருக்கும். இதை நிச்சயமாக வெளியே காட்டுவோம். ஆனால், அதற்கு முன்பு அவரே காட்டியிருக்கலாம். நான் கேள்விதான் எழுப்பினேன். எந்தக் குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார் எனக் கேள்வி எழுப்பினேன்.

மிசா குறித்த ஷா கமிஷன் அறிக்கையில், ஸ்டாலின் பெயர் இல்லையே என்கிறபோது, எனக்கு இதுபற்றித் தெரியாது என தி.மு.க. மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி கூறுகிறார்.

அந்தக் கருத்தின் அடிப்படையில் நான் சந்தேகத்தை முன்வைத்தேன். அதற்கு அந்த நோட்டீஸைக் காண்பித்து, மிசாவில் தான் கைதானேன் என பதில் அளித்திருக்கலாம். அதைச் சொல்லாமல் இத்தனை ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றனர். தனிநபர் விமர்சனமாக இதனைப் பார்க்கின்றனர். அவர் என்னைப் பற்றி வைத்துள்ள விமர்சனங்களுக்கு கட்சி பதிலளிக்கும்.

இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார்

மிசாவில் ஸ்டாலின் கைதானதற்கான குறிப்புகள் எங்கும் இல்லை என, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினின் விமர்சனத்துக்குப் பதில் தெரிவிக்கும் வகையில் சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசுகையில்,

மிசா குறித்து அமைக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷன் அறிக்கையிலும் மு.க.ஸ்டாலின் பெயர் இல்லை. இரா.செழியன் எம்.பி.யாக இருந்த காலத்தில், மிசா காலக் கொடுமைகள் குறித்து எழுதிய புத்தகத்தில், ஸ்டாலின் கைதானதற்கான குறிப்புகள் ஏதும் இல்லை. ஸ்டாலின் பெயர் எங்கும் குறிப்பிடவில்லை எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *