செய்திகள்

தருமபுரம் ஆதீனத்திடம் திருநீறு பூசி ஆசிபெற்ற உதயநிதி

தருமபுரம் ஆதீனத்திடம் திருநீறு பூசி ஆசிபெற்ற உதயநிதி

இரட்டை வேடம் போடுகிறார் என இந்து முன்னணி தாக்கு

மயிலாடுதுறை, நவ. 22

தருமபுரம் ஆதினத்திடம் நெற்றியில் விபூதி பூசி பிரசாதம் பெற்று உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார்.

தனது பிரச்சாரப் பயணத்தின் வழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், அங்கு ஆன்மிக நூல் வெளியீட்டில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் ஆதினம் கொடுத்த திருநீறும் அணிந்து பயபக்தியுடன் வழிபட்டார்.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை நேற்று முன்தினம் திருக்குவளையில் தொடங்கினார். நேற்று காலை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் பிரச்சாரம் செய்தபோது கைது செய்யப்பட்ட அவர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டார்.

விடுவிக்கப்பட்ட வேகத்தில் மயிலாடுதுறை நோக்கி வந்த உதயநிதி வழியில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்திற்கு நேற்றிரவு சென்றார். அங்கு அவருக்கு, பொன்னாடையும், சந்தன மாலையும் அணிவித்த தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஆசி கூறி திருநீறு வழங்கினார். அதனை நெற்றியில் பூசிக் கொண்டார் உதயநிதி.ஆன்மிக பேரவையின் சார்பில் ‘தமிழ் கடவுள் சேயோன்’ என்ற நூல் வெளியீட்டு விழாவும் அங்கு நடைபெற்றது. ஆதீனகர்த்தர் நூலை வெளியிட அதனை உதயநிதி பெற்றுக் கொண்டார்.

முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்டாலின் அங்கு கொடுக்கப்பட்ட விபூதியை கையில் வாங்கி அப்படியே தரையில் கொட்டி கையை துடைத்து கொண்டார். இதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் பேச்சுக்கள் செயல்பாடுகளால் இந்துக்களின் ஓட்டு அவர்களுக்கு எதிராக திசை திரும்பியுள்ளது. இந்த நிலையில் இந்துக்களின் ஓட்டுக்களை பெற இப்போது ஆதினத்திடம் சென்று திருநீறு பூசி ஆசி பெற்றிருக்கிறார் உதயநிதி.

இரட்டை வேடம்

உதயநிதியின் இத்தகைய போக்கை இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் ‘‘தி.மு.க.வின் இரட்டை வேடம்’’ என்று கண்டித்திருக்கிறார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாணியில் அவரது மகன் உதயநிதியும் மேடையில் உளறியது சமூக வலைதளத்தில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவ்வப்போது மேடைகளில் பேசும்போது கவனக்குறைவால் மாறி மாறி பேசுவது வழக்கம். ஸ்டாலினின் பேச்சுகள் சமூக வலைதளங்களில் ‘மீம்ஸ் வீடியோ’ வடிவில் கிண்டலுக்கு ஆளாகி வருகிறது. தற்போது ஸ்டாலின் பாணியில் அவரது மகனும் தி.மு.க. இளைஞர் அணி செயலருமான உதயநிதியும் தந்தையை போன்று மாறி மாறி பேச ஆரம்பித்துள்ளார்.

திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 2 நாட்களாக போலீசாரின் தடையை மீறி அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது ஒரு மேடையில் பேசிய உதயநிதி ‘இங்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்கும்போது ஒன்று மட்டும் நிச்சயம்; 2001ல் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும். தி.மு.க. தலைவர் முதல்வர் ஆவார்’ எனக் கூறினார். அடுத்தாண்டு 2021 தேர்தலை 2001 தேர்தல் என உதயநிதி கூறியதை கேட்டு தி.மு.க. தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *