செய்திகள்

ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அண்ணா தி.மு.க.வை வீழ்த்த முடியாது

மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஏற்பாட்டில்

கொருக்குப்பேட்டையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அண்ணா தி.மு.க.வை வீழ்த்த முடியாது

எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

என்றைக்கும் கொள்கையைவிட்டு கொடுக்க மாட்டோம்: சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம்

சென்னை, பிப்.25–

ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அண்ணா தி.மு.க.வை வீழ்த்த முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் சார்பில் கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் மிக பிரம்மாண்டமாக செய்திருந்தார்.

கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

அம்மா பிறந்தநாள் விழா இன்று தமிழகமெங்கும் பட்டிதொட்டியெல்லாம் கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் மறைந்தாலும் அவரது திட்டங்கள் நீக்கமற நிறைந்து உள்ளது. அவரது திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அம்மா இன்று மண்ணில் பிறந்த நாள். இன்று ஏழை எளியோர் சந்தோஷமாக உள்ளனர்.

அருமைச் சகோதரர் ராஜேஷ் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். எனது பிறந்தநாளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என அம்மா கூறி விட்டுச் சென்றார். அதன்படி இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். அண்ணா திமுக கொடுக்கிற கட்சி, திமுக எடுக்கிற கட்சி.

ஏழைகள் மனம் குளிர அம்மாவின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அண்ணா திமுக என்ற ஒரு கட்சியை ஆரம்பித்து ஏழை எளியோர் வாழ்வில் நலம் பெற பல்வேறு திட்டங்களை தீட்டினார். அவர் மறைந்தபோது அம்மா அந்த கட்சியையும் ஆட்சியையும் கட்டிக் காத்தார். இரு பெரும் தலைவர்கள் மறைந்தாலும் அவரது திட்டங்கள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அம்மாவை பெருமைப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை நாங்கள் செய்துள்ளோம். அவர் வாழ்ந்த இடம் கோவிலாக உள்ளது. அந்த கோவிலை அரசுடைமையாக்கி உள்ளோம். அம்மா நினைவகத்தை பீனிக்ஸ் பறவை போல் அற்புதமாக வடிவமைத்துள்ளோம். அறிவுசார் பூங்கா என அவர் நினைவைப் போற்றும் வகையில் பல்வேறு பணிகள் செய்துள்ளோம்.

அதேபோல் புரட்சித்தலைவர் சமாதியும் புதுப்பித்து புகழ் சேர்த்துள்ளோம். இரு பெரும் தலைவர்கள் வரலாறுகளை இளைஞர்கள் தெரிந்துகொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து உள்ளோம். அம்மா பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் என அறிவித்து நடைமுறைப்படுத்தி சிறப்பாக செயல்படுத்திய மூன்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிசுகள் வழங்கி உள்ளோம்.

இந்த மேடையில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் மிராசுதார்கள் இல்லை. தொழில் அதிபர்கள் இல்லை. அம்மாவால் வளர்க்கப்பட்ட நாங்கள் அவர் ஆசி எங்களுக்கு இருப்பதால் இந்த மேடையில் நாங்கள் இருக்கிறோம். அம்மா பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு உள்ளது.

பொய் பிரச்சாரம்

ஸ்டாலின் இந்த ஆட்சியில் ஒன்றும் நடைபெறவில்லை என பொய் பிரச்சாரம் செய்கிறார். அவரோடு நான் நேருக்குநேர் மேடையில் விவாதிப்போம் என கூறினேன். நான் சாதனைகளைச் சொல்கிறேன். அவர் அதற்கு பதில் சொல்லவேண்டும். துண்டு சீட்டு இல்லாமல் வர வேண்டும். அவர் எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் அண்ணா திமுகவை வீழ்த்த முடியாது.

ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு வரமாட்டார், திட்டங்களையும் பார்க்கமாட்டார். ஆனால் குறை சொல்லிக்கொண்டே இருப்பார். சட்டசபை கூட்டினால் அங்கு வருவதில்லை. இந்த அரசு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என சபாநாயகர் கூறியபோது போது நாங்கள் சபையில் கூடினோம். அவர்கள் அன்று ஆடிய ஆட்டம் என்ன என்பதை நீங்கள் அனைவரும் தெரிந்து இருப்பீர்கள்.

என் மேசை மீது நடனமாடினார்கள். புத்தகத்தை எறிந்தார்கள். சபாநாயகரை இருக்கை விட்டு இழுத்தார்கள். ஆட்சியில் இல்லாத போதே இந்த ஆட்டம் ஆடினார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா? சட்டமன்றம் என்பது புனிதமானது. நாட்டில் சட்டங்களை ஏற்றுவதே சட்டமன்றத்தில் தான். அந்த சட்டமன்றத்திலேயே இந்த ரவுடி தனங்கள் பண்ணினார்கள்.

அம்மா எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது முதல்வர் கருணாநிதி முன்னிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் என்று பாராமல் அம்மாவை தலை முடியை பிடித்து இழுத்து அடித்தார்கள். இப்பேர்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்? நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இருக்குமா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இதுவே ஒரு சிறந்த உதாரணம்.

கனவு பலிக்காது

ஸ்டான்லினின் ஒரே குறிக்கோள் ஆட்சியைக் கைப்பற்றவேண்டும். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை, அதனால் ஆட்சிக்கு வரவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார். தினம்தினம் அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். நடக்காத சம்பவங்கள் நடந்ததாக கூறுகிறார். அவரது கனவு பகல் கனவாக தான் முடியும். இந்த அரசு எதுவுமே செய்யவில்லை என கூறுகிறார்.

உலகமே கொரோனோ காலத்தில் அச்சம் அடைந்தது. ஆனால் அம்மாவின் அரசு அதை திறமையாக கையாண்டு கட்டுப்படுத்தி உள்ளது. ஆர்.டி.பிசிஆர் பரிசோதனையயில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் நடைபெற்றதாக பாரத பிரதமர் அண்மையில் காணொலி காட்சியில் பாராட்டினார். மற்ற மாநிலங்களும் இது போல் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

கொரோனா காலத்தில் பொதுமக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக அவர்கள் வாழ்வாதாரம் காக்க ரேஷனில் விலையில்லா உணவுப் பொருட்கள், அம்மா உணவகங்களில் சமுதாயக் கூடங்கள் இலவசமாக சாப்பாடு வழங்கினோம். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய், மீண்டும் ஒரு ஆயிரம் ரூபாயை வழங்கினோம். ஆனால் திமுகவினர் பேருக்கு 10 பேருக்கு வழங்கிவிட்டு ஒரு நாடகம் நடத்தினர். அது போன்ற கட்சி அண்ணா திமுக இல்லை, அரசும் இல்லை.

தைப்பொங்கலுக்கு ரேஷன் அட்டையில் ரூபாய் 2500 வழங்கினோம். கடந்த தை முதல் இந்த தை வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5500 வழங்கியுள்ளோம்.

அண்ணா திமுக ஆட்சியில் என்ன சாதனை செய்தீர்களென்று ஸ்டாலின் பேசுகிறார், நிறைய சாதனைகளை செய்திருக்கிறோம். புரட்சித் தலைவி அம்மா சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்தார், அந்த அறிவிப்பிற்கிணங்க பல்வேறு திட்டங்களை நாங்கள் நிறைவேற்றினோம். அதே வழியில் அம்மாவின் அரசும், நான் சட்டமன்றத்தில் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்புகளை கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கிறோம்.

அதன் அடிப்படையிலே தங்கசாலை சந்திப்பு மேம்பாலம், ரெயில்வே மேம்பாலம், கத்திவாக்கம் நெடுஞ்சாலை- – பேசின் சாலை மேம்பாலம், வில்லிவாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை, கொரட்டூர் ரெயில்வே,- இரட்டை ஏரி மேம்பாலம், எம்.சி.ரோட்டில் வாகன சுரங்கப்பாதை, ரூபாய் 58 கோடியில் போரூர் மேம்பாலம், கொரட்டூர் ரெயில்வே கீழ்ப்பாலம், ரூபாய் 81 கோடியில் பல்லாவரம் மேம்பாலம், ரூபாய் 45 கோடியில் வடபழனி மேம்பாலம், ரூபாய் 151 கோடியில் மேடவாக்கம் மேம்பாலம், ரூபாய் 29 கோடியில் கீழ்க்கட்டளை மேம்பாலம் ஆகியவை நாங்கள் செய்து முடித்திருக்கின்றோம்.

இப்போது நடைபெறுகின்ற பணி ரூபாய் 93 கோடியில் கோயம்பேடு பேருந்து நிலைய மேம்பாலம், ரூபாய் 108 கோடியில் வேளச்சேரி மேம்பாலம், ரூபாய் 62 கோடியில் கொளத்தூர் – -வில்லிவாக்கம் ரெயில்வே மேம்பாலம், ஸ்டீபென்சன் சாலையில் ரூபாய் 44 கோடி, யானைக்கவுனியில் ரூபாய் 31 கோடி, அருணாசலம் சாலையில் ரூபாய் 9.5 கோடி ஆகியவை பணிகள் இருக்கிறது.

இவ்வளவும் செய்து முடித்திருக்கிறோம், செய்து கொண்டிருக்கிறோம். எங்கு போனாலும் பச்சைப் பொய் பேசிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

நெரிசலை குறைக்க…

அதுமட்டுமல்ல, சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வண்டலூர் – -நெமிலிச்சேரி அவுட்டர் ரிங் ரோடு பேஸ் -1 ஏறத்தாழ 29 கி.மீ, நெமிலிச்சேரி – -மீஞ்சூர் பேஸ்–-2 ஏறத்தாழ 30.5 கி.மீ அதையும் திறந்து வைத்திருக்கிறோம். சென்னை என்.எச். சாலை 123 கிலோ மீட்டரை 5 பகுதிகளாக பிரித்து, இப்போது 2 பகுதிகளுக்கு நாங்கள் ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறோம், பல பணிகளுக்கு நிலம் எடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மெட்ரோ ரயில் பேஸ்–-1 அம்மா இருக்கும்போது கொண்டு வந்தார். அந்த திட்டத்தின் நீட்டிப்பாக, அம்மா இருக்கும்போது அதற்கு அடிக்கல் நாட்டினார். 9 கி.மீ உள்ள பேஸ்-–1-ன் தொடர்ச்சியை பாரதப் பிரதமர் தொடங்கி வைத்திருக்கிறார்.

மக்கள் தொகை பெருகி வருகின்ற சென்னை மாநகரம் தொழில் வளம் நிறைந்த, தொழிற்சாலைகள் நிறைந்த மாநகரம். எனவே, எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க வேண்டுமென்பதற்காக அம்மாவின் அரசு, ஏறத்தாழ 62,000 கோடி ரூபாயில் 128 ரெயில் நிலையங்கள் அமைப்பதற்காக 123 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் வந்து, இதற்கு அடிக்கல் நாட்டிவிட்டு சென்றிருக்கின்றார்.

அமைதிப்பூங்கா

சட்டம்- ஒழுங்கு பேணிக்காப்பதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா டுடே என்ற ஆங்கில நாளேடு இந்தியா முழுவதும் ஆய்வு செய்கின்றபோது, தொடர்ந்து மூன்றாண்டு காலமாக தமிழகம் சட்டம் -ஒழுங்கு பேணிக்காப்பதில் முதலிடம் என்று விருதுகளை பெற்ற மாநிலம் தமிழ்நாடு.

சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை, அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, குற்றச் செயல்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. குற்றங்கள் ஏற்பட்டால் உடனேயே அதைக் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்ற சூழ்நிலையை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உகந்த மாநிலம் என்றால் அது சென்னை மாநகரம் என்று மத்திய அரசு தேர்ந்தெடுத்திருக்கிறது என்றால், எந்தளவுக்கு அம்மாவின் அரசு சட்டம் -ஒழுங்கை சிறப்பாக வைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாட்டுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இப்போது கட்ட பஞ்சாயத்து, ரௌடியிஸம் ஆகியவை கிடையாது. திராவிட முன்னேற்றக் கழகம் தான் நோட்டை எடுத்துச் சென்று கடைகடையாக வசூல் செய்வார்கள், இப்போது அந்த நிலை கிடையாது. வியாபாரிகள் அச்சமில்லாமல் வியாபாரம் செய்கிறார்கள்.

தி.மு.க. அராஜகம்

தி.மு.க. நிர்வாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன் ஒரு ஓட்டலுக்கு சென்று நன்றாக சாப்பிட்டு, அதற்குண்டான பணத்தை ஓட்டல் உரிமையாளர் கேட்டதற்கு, ஓட்டல் உரிமையாளர் மூக்கில் குத்துகிறார். அடுத்தாக, ஸ்டாலின் உணவு விடுதிக்குச் சென்று கட்டப் பஞ்சாயத்து செய்கிறார். ஆக, இவர் எப்படி நாட்டை ஆளமுடியும்?

ஆட்சி அதிகாரம் இல்லாதபோதே இப்படிப்பட்ட ரௌடித்தனத்தில் ஈடுபடுகிறபோது, ஆட்சி அதிகாரம் கையிலிருந்தால், வியாபாரிகள் நிம்மதியாக வியாபாரம் செய்ய முடியுமா? தி.மு.க. ஒரு அராஜகக் கட்சி. அதுமட்டுமல்ல, பெரம்பலூர் அருகே ஒரு அழகு நிலையத்தில் புகுந்து, பெரம்பலூர் முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அந்த பெண்மணியை காலால் போட்டு மிதிக்கிறார், அந்தப் பெண் கதறுகின்ற காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தோம்.

தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அதேபோல, கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு ஒரு கர்ப்பிணிப் பெண் ரெயிலில் பயணம் செய்கிறார். அதே ரெயிலில் திமுக ஒன்றியச் செயலாளர், திமுக நிர்வாகிகளும் பயணம் செய்கிறார்கள். அப்போது, அந்த திமுக நிர்வாகி கர்ப்பிணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததற்காக, அந்தப் பெண்மணி காவல் நிலையத்தில் புகார் செய்து, அவர்களை சிறையில் அடைத்து, இப்போது அவர் ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார்.

அதேபோல, திமுக நிர்வாகி தேங்காயை வாங்கிவிட்டு, அதற்குண்டான பணத்தைக் கேட்டால் அந்த கடையின் பெண் உரிமையாளரை அடிக்கிறார். செல்போன் கடைக்குச் சென்று, செல்போன் வாங்கிவிட்டு, அதற்குண்டான பணத்தை கேட்டால் அவர்களை அடிக்கிறார்கள். மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

சட்டத்தின் ஆட்சி நடக்கிறது

ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்களென்றால், ஆட்சி அதிகாரத்திற்கு இவர்களால் வரமுடியாது, அப்படி தப்பித்தவறி வந்தால், நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்பதை மட்டும் எண்ணிப் பார்க்க வேண்டும். இப்போது மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சட்டத்தின் ஆட்சி இன்றைக்கு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. 2006–-2011ஆம் ஆண்டில் நிர்வாகத் திறமையில்லாத தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்த காரணத்தால், தமிழகத்திற்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் அண்டை மாநிலத்திற்கு சென்று விட்டது, தொழில்கள் பாதிக்கப்பட்டன. இதனால் தமிழகம் பின்நோக்கிச் சென்றது. 2011–ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது புரட்சித்தலைவி அம்மா நான் முதலமைச்சராக வந்தவுடன் மூன்றே ஆண்டுகாலத்தில் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவேன் என்று கூறியதற்கிணங்க, மூன்றே ஆண்டுகாலத்தில் தடையில்லா மின்சாரம் அளித்தார். இப்போது, தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக திகழ்கின்ற காரணத்தினால், புதிய, புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

கடந்த காலத்தில் அவர்கள் ஆட்சி செய்த போது கடுமையான மின் தடை ஏற்பட்டது. தமிழகமே பின்னோக்கி சென்றது. அவர்கள் திறமையின்மை காரணமாக தமிழகத்துக்கு வர வேண்டிய தொழில்கள் வெளிமாநிலங்களுக்கு சென்றன. அம்மா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மின்சார உற்பத்தி அதிகமாகி மின் மிகை மாநிலமாக மாற்றினார்.

இதனால் ஏராளமான தொழில்கள் தமிழகத்திற்கு வந்தன. தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி பல்வேறு தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில்கூட புதிதாக பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. வேளாண்மைத் தொழிலும் தொழில் வளர்ச்சியும் மிக முக்கியம். அந்த வகையில் தமிழகத்தில் ஏரி குளங்களை தூர்வாரி குடிமராமத்து பணிசெய்தோம்.

குடிநீர் பிரச்சினை இல்லை

தமிழகத்தில் பெய்யும் மழை ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் சேமித்து வைக்கிறோம். அதிக அளவு உற்பத்தி செய்ததால் தொடர்ந்து நாங்கள் வேளாண்மைத்துறையில் விருதுகள் வாங்கி வருகிறோம். சென்னையில் மழை இல்லாவிட்டாலும் ஒரு வருடத்திற்கு தேவையான குடிநீரை சேமித்து வைக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.

புதிதாக நீர்தேக்கங்கள் அமைத்து சேமித்து வருகிறோம். எங்களைப் பார்த்து எதுவும் செய்யவில்லை எனக் கூறுகிறார். அவர் சென்னை மாநகர மேயராக இருந்தபோது என்ன செய்தார்? அதன்பின் சுப்பிரமணியன் மேயராக இருந்தார். அவர் என்ன செய்தார்? 10 ஆண்டுகளில் எதையுமே செய்யாதவர் இன்று அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என கூறுகிறார்.

சென்னையில் தண்ணீர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கி இருந்தது. இப்போது 30 இடங்களில் மட்டுமே இயங்கும் அளவிற்கு நாங்கள் நிலைமையை சரி செய்துள்ளோம். அதையும் உடனே எடுத்து விடுகிறோம். அம்மா தேர்தலின் போது மகளிருக்கு இரண்டு சக்கர வாகனங்கள் வழங்குவோம் என கூறினார். இன்று 2 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கு வழங்கி விட்டோம்.

உயர்கல்வித் துறையில் மிகப்பெரிய சாதனை படைத்து இன்று தமிழகம் முன் மாநிலம் முன்மாதிரி மாநிலமாக உள்ளது. நீட் தேர்வை தமிழகம் ஆதரிக்கவில்லை. ஆனாலும் அதனால் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உள்ஒதுக்கீடு மூலம் இன்று 455 மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள். மருத்துவக் கல்லூரி இடங்கள் நாங்கள் அதிகப்படுத்தியதால் இன்று 3650 சீட் புதிதாக நமக்கு கிடைத்துள்ளது.

11 மருத்துவக்கல்லூரிகள் ஆரம்பித்துள்ளோம். இதனால் 1650 மாணவர்கள் கூடுதலாக படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களுக்கு நான்தான் பாதுகாப்பு என பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். ஸ்டாலின் பாஜகவுடன் அவரது கட்சி கூட்டணி வைக்க வில்லையா? தேர்தலுக்காக வெற்றிக்காக கூட்டணி வைப்பார்கள். ஒருமுறை பாஜகவுடன் ஒருமுறை காங்கிரஸுடன் அவர்கள் மாறி மாறி கூட்டணி வைத்தார்கள்.

கொள்கையை விடமாட்டோம்

நாங்களும் தேர்தல் வெற்றிக்காக கூட்டணி வைத்து உள்ளோம். ஆனால் எங்களது தலைவர்கள் உருவாக்கித்தந்த கொள்கையை நாங்கள் என்றும் விட்டுக் கொடுக்க மாட்டோம். கூட்டணி வேறு, கொள்கை வேறு என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். சிறுபான்மை மக்களுக்கு என்றும் நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம்.

மத்திய அரசு ஹஜ் பயணம் செய்ய 6 கோடி மானியம் தந்தது, அதை நிறுத்தி விட்டனர். தமிழக அரசு 6 கோடிக்கு பதில் தற்போது 10 கோடி மானியம் வழங்குகிறது. பள்ளிவாசலுக்கு மானியமாக 60 லட்ச ரூபாய் கொடுத்தது இன்று நாங்கள் ஐந்து கோடி ரூபாய் வழங்குகிறோம். ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்கிக்கொள்ள 15 கோடியில் தங்குமிடம் பணி நடந்து நடந்து வருகிறது.

நாகூர் தர்கா குளக்கரை சரிசெய்ய 4.5 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம். சிறுபான்மை மக்களுக்கு என்றும் நாங்கள் பாதுகாப்பாக தான் உள்ளோம். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. ஜாதி மதத்தின் பெயரால் எந்த ஒரு பிரச்சனையும் நடப்பதில்லை. சிறுபான்மையினர் மக்கள் அச்சப்பட தேவையில்லை. எங்கள் இரு பெரும் தலைவர்கள் காட்டிய வழியில் நாங்கள் நடந்து செல்கிறோம்.

இன்று ஸ்டாலின் ஒரு புகார் பெட்டியை தூக்கிக் கொண்டு செல்கிறார். ஏன் இவர் மேயராக இருக்கும்போது புகாரை வாங்கி இருக்கிறாரா? கடந்த தேர்தலில் பொய் பிரச்சாரம் செய்து 38 பேர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றனர். ஏதாவது செய்துள்ளனரா? மக்களின் குறைகளை வீட்டில் இருந்தபடியே செல்போனில் தெரிவித்தால் தீர்த்து வைக்கிறோம். இது விஞ்ஞான உலகம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *