நாடும் நடப்பும்

இந்தியா – ஜப்பான் கூட்டில் இலங்கையில் சரக்கு துறைமுகம்

2021–ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தபோது இந்தியாவின் முன் நின்ற மிகப்பெரிய சவால்களில் பிரதானமானது நமது வட எல்லைப் பகுதியில் இருந்த சீனா, பாகிஸ்தான் ஊடுருவல்களும் யுத்த பதட்ட நிலையும் ஆகும்.

சீனா தங்களது ஆதிக்கத்தை வலியுறுத்தும் விதமாக ‘பெல்ட் மற்றும் சாலை’ திட்ட முயற்சிகளை (Belt and Road Initiative) நடைமுறைப்படுத்தி வருவதுடன் தென் சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த எடுத்து வந்த பல்வேறு திட்டங்களால் நமது கடல்சார் பாதுகாப்பு அம்சங்கள் மிக மெல்லியதாக இருந்ததை கண்டு ராணுவத் தளபதிகளுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

சீனாவின் சர்வதேச அரசியல் நகர்வுகள் பல ஆண்டுகளாகவே நமது எல்லைப் பகுதிகளை சுற்றியுள்ள நாடுகளில் சதி நோக்கத்துடன் இருப்பதை பல நிபுணர்கள் சுட்டிக் காட்டுவதும் உண்டு.

இப்படி நமது கழுத்தை நெறுக்கும்படி சீனாவின் நகர்வுகள் இருந்தும் நாம் சர்வதேச அரசியலில் சீனாவுடன் சண்டை சச்சரவுகளை வெளிக்காட்டியது கிடையாது.

ஆனால் கடந்த ஆண்டு நம் எல்லையில் நுழைந்த சீன ராணுவத்தை துணிவுடன் எதிர்கொண்டோம்.

மேலும் அரசியல் நெருக்கடி தரும் வகையில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவுடன் குவாட் (Quad) அமைப்பில் ஆர்வம் காட்டினோம்.

இந்த நான்கு நாடுகளும் இந்திய மகா சமுத்திரத்தில் சீன நுழைந்து விடாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்ட வியூகமாகும். உலக வரைபடத்தில் இந்திய மகா சமுத்திரம் அதிக நிலப்பரப்பு அதாவது நாடுகள் கிடையாது. ஆனால் கப்பல் வழி போக்குவரத்தால் உலக நாடுகளை எளிதில் தொட்டுவிடலாம்.

சீனாவின் தரைவழித் தொடர்புகளின் விஸ்தாரத்தை தடுக்கமுடியாது, ஆனால் கடல்சார் ஆதிக்கத்தை தடுத்தாக வேண்டும் என்பது கட்டாயமாகும்.

இந்த நிலையில்தான் ‘குவாட்’ வியூகம் இந்தியாவிற்கு சாதகமானதாக மாறியது. இதை ஆரம்பத்தில் ரஷ்யா விரும்பவில்லை. இன்றும் இதை அமெரிக்கா ஏற்படுத்தும் அவர்களுக்கு சாதகமான ஓர் கூட்டணி என்றுதான் அஞ்சுகிறது.

ஆனால் உண்மை என்பது தெளிவாகாத நிலையில் தற்போது இந்தியாவிற்கு புது வசதி ஒன்று ‘மடி மீது விழுந்த கனியாக’ கிடைத்துள்ளது.

இலங்கையில் மேற்கு சரக்கு முனையத்தை மேம்படுத்த சீனா நிதி உதவியும் தொழில்நுட்பத்தையும் வழங்க முடிவு எடுத்தது. அதாவது நமது தென்பகுதியின் மிக அருகாமையில் முகாமிட வழிவகுக்கும் அத்திட்டத்தில் சீனா மிக ஆர்வமாக இருந்தது. அது ஏன்? என்பது சாமானியனுக்கும் கூட புரிந்தது தான்!

ஆனால், தற்போது அத்திட்டத்தை இலங்கை மறுபரிசீலனை செய்ய முடிவெடுத்து விட்டது.

இரு நாட்களுக்கு முன்பு இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் அத்திட்டத்தை கைவிட்டு விட்டதாக கூறி விட்டது. மேலும் இந்தியா, ஜப்பான் கூட்டு திட்டமாக அதை நிறைவேற்ற முடிவும் எடுத்துள்ளது.

மந்திரி சபையின் இம்முடிவை இந்திய தூதரகத்திடம் கூறி விட்டபோது உடனே அதை நமது நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள கடல்சார் கட்டுமானத்தில் முன்னணியில் இருக்கும் அதானி குழுமம் இத்திட்டத்தை விரும்பி பங்கேற்க ஒப்புதலும் தந்துவிட்டது.

ஜப்பான் நாட்டுடன் இப்படிப்பட்ட கட்டுமான திட்ட ஒப்பந்தம் என்பது எளிதில் கிடைத்து விடாது. இப்படி ஒரு வாய்ப்பை பெற வைத்தது ‘குவாட்’ கூட்டணி ஏற்பாடுகள் தான் என்று பார்க்கும்போது நமது புதிய வெளியுறவுக் கொள்கைகள் புதிய தலைமுறை சிக்கல்களுக்கு ஏற்ற சரியான தீர்வுகளை தரும் வல்லமை இருப்பதைக் காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *